14 May 2017

காமம் என்னும் களிறு - நிறைவுப் பகுதி


காமம் என்னும் களிறு -  நிறைவுப் பகுதி




யயாதி மன்னனுக்கு ஐந்து பிள்ளைகள். ஒவ்வொருவரிடமும் சென்று எனது முதுமையை வாங்கிக்கொண்டு உங்களது இளமையைத் திருப்பித் தாருங்கள் என்று பிச்சைக்காரன் போல் கெஞ்சினான்.  யோகப்பயிற்சி செய்வதற்கோ, யாகம்செய்வதற்கோ, தியானம் செய்வதற்கோ இளமையை நீங்கள் கேட்கவில்லை. காமம் அனுபவிக்க இளமையை விரும்புகிறீர்களே. நிமிர்ந்து நின்று அரசாட்சி செய்து பகை அரசர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய உங்களைப் பிச்சைக்காரன் ஆக்கிய இந்த இளமை உங்களுக்குத் தேவையா? என்று ஒவ்வொரு பிள்ளைகளும் வினவினர்.  நான்கு குமாரர்கள் மறுத்துவிட்டனர்.  கடைசியாகப் புரு என்னும் அரசகுமாரனிடம் வந்தான்  யயாதி.  தனது தந்தை படும் துயரைக் கண்டு இரங்கினான். எனது இளமையை மனப்பூர்வமாகக் கொடுக்கின்றேன் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றான் புரு. யயாதி தனது மகனின் இளமையைப் பெற்றான்


சர்மிஷ்டையின் ஞானம்


                அரசனின் மகளான சர்மிஷ்டையிடம் இளமை இன்பம் அனுபவிக்கலாம் என்று வந்தான். மகனின் இளமையைப் பெற்று வந்த உங்களுடன் இளமை இன்பம் அனுபவித்தால் பெரும்பாவம் வந்துசேரும் என்று மறுத்துவிட்டாள்.  தேவயானியும் மறுத்துவிடவே உத்யானவனம் சென்று அப்சர மங்கையுடன் இளமை நலம் துய்த்தான்.  அப்படியும் அவனுக்கு இன்பத்துறையின் நாட்டம் குறையவில்லை


குரு உபதேசம்


                உத்யானவனத்திலிருந்து வரும்போது குருநாதர் ஒருவர் தனது சீடர்களுக்கு உபதேசம் செய்துகொண்டு இருந்தார்.  காமத் தீயானது, அதை அனுபவித்ததின் மூலமாக ஒருநாளும் அவியாது.  காமம் அனுபவிக்க அனுபவிக்க யாகத்தீயில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிபோல் மேன் மேலும் வளருமே தவிர குறையாது.  நெல்லும், பொன்னும், பசுவும், பெண்ணும் மனிதனது ஆசையை ஒருநாளும் தீர்க்க முடியாது. என்று பலவாறாக உபதேசம் செய்தார்.  


                யயாதி மன்னன் தனக்காகத் தான் குருநாதர் உபதேசிக்கின்றாரோ என்று நினைத்தார். குருவிடம் சென்று தனக்கு ஞானமும், பக்தியும், வைராக்கியமும் வரவேண்டும் என்று உபதேசம் செய்யும்படி வேண்டினான்;. குருவும் படித்ததை அனுபவத்தில் நடைமுறைப்படுத்தினால் பெரும்பாலான சிக்கல்கள் வாழ்க்கையில் ஏற்படாது.  படிப்பு வேறு; வாழ்க்கை வேறு என்று தனித்தனியாகப் பிரித்து விட்டோம். அதனால் பிரச்சினைகள் ஓய்வே இல்லாமல் வந்துகொண்டிருக்கின்றன என்று உபதேசித்தார்.

மனத்துக் கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
 ஆகுல நீர பிற"
                                                                                                                                                                                                                                                                       ( குறள்
 
                மனத்தைச் செம்மை செய்யத் தெரிந்தவனுக்குக் கற்பகத் தருவும், காமதேனுவும் வந்து ஏவல் செய்யும்.  மனமது செம்மையானால் மந்திரம் ஓத வேண்டாம். ஒவ்வொரு மனிதனும் தனது மனத்தை நலமாக வைத்திருக்கப் பழகவேண்டும்.  வளமான மனம்தான் ஒரு மனிதனை மேல்நிலைப்படுத்தும் என்று குருநாதர் உபதேசித்தார்.  

                குருநாதர் மூலமாக ஞானத்தை உணர்ந்தான் யயாதி மன்னன்.  தனது மகன் புருவிடமிருந்து பெற்ற இளமையை அவனிடமே கொடுத்துவிட்டு மீண்டும் தனது முதுமையை வாங்கிக்கொண்டான்.  காமம் தன்னை எத்தனை படுகுழியில் தள்ளிவிட்டது. பெற்ற மகனின் இளமையை வாங்கிக் கொண்டு அந்த இளமை இன்பத்தை அனுபவிப்பதற்கு அவனைப் பெற்ற தாயையே நாடினோமே என்று நினைத்து நினைத்து வருந்தினான். காமம் எத்தனை கொடியது! எத்தனை வலிமையானது!  தெளிந்த சிந்தனை உடையவர்களையும் காமம் எப்படிப் படுகுழியில் தள்ளி விடுகின்றது என்பதற்கு தானே உதாரணம்.  

“மனமான வானரக் கைம்மாலை ஆகாமல்
எனை ஆள் அடிகள் அடி எய்து நாள் எந்நாளோ”                                                                                                                                                                                          (தாயுமானவர்

                சுக்ராச்சாரியாரின் மகளாகப் பிறந்தும் ஆணவ மலம் அற்றுப் போகாமல் தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்று நினைத்ததால் தேவயானி பல மனக் குழப்பத்திற்கு ஆளானாள்

                யயாதி மன்னன் புறப் பகைவர்களை வென்றான். அகப் பகையைத்தானே வெல்ல முடியாவிட்டாலும், திருவருள் ஒரு சந்தர்ப்பம் அளித்தது.  அதையும் புரிந்து கொள்ளாமல் தன் மனத்தை நெறிப்படுத்தத் தவறியதால்தான் பெற்ற மகனிடமே இளமை வேண்டும் என்று கேட்கும் இழி நிலைக்குத் தள்ளப்பட்டான்

                இப்பிறவி தப்பினால் வேறு எப்பிறவி வாய்க்குமோஎன்று அருளாளர்கள் அச்சப்பட்டுள்ளனர்.  கிடைத்தற்கரிய மானிடப் பிறவி கிடைத்தும், மனத்தையும் உடலையும் செம்மை நெறியில் நிலை நிறுத்தப் பழகாவிட்டால் இழி நிலைக்குத் தள்ளப்படுவான் என்பதைத்தான் புராணங்கள், கதைகள் மூலமாக நமக்கு விளக்குகின்றன

                யோகப் பயிற்சி பெறுவதற்கோ, யாகம் செய்வதற்கோ இளமையைக் கேளுங்கள் தருகின்றோம் என யயாதியின் மகன்கள் கூறுவது சிந்தனைக்குரியது.  ஒரு மனிதன் எதற்கு ஆசைப்படலாம்; எதற்கு ஆசைப்படக் கூடாது என்று அரசியலில் உள்ளவர்கள் வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்று யயாதி மன்னனின் புத்திரர்கள் கூறும் அறிவுரை மன நலம் பெற்ற சிந்தனையாக உள்ளது.

1 comment:

  1. படித்ததை அனுபவத்தில் நடைமுறைப்படுத்தினால் பெரும்பாலான சிக்கல்கள் வாழ்க்கையில் ஏற்படாது. Nice advice

    ReplyDelete