26 June 2018

True Devotee's humility - பணியுமாம் என்றும் பெருமை


பணியுமாம் என்றும் பெருமை



     திருப்பூந்துருத்தியில் புது மடம் ஒன்று கட்டுகின்றார் நாவரசா். அங்கிருந்தபடியே தன்னுடைய வாழ்வில் நடந்த ஒவ்வொரு செயலுக்கும் இறைவன் தோன்றும் துணையாயும் , தோன்றாத் துணையாயும் இருந்து எவ்வாறு வழிகாட்டினான் என்று நினைத்துப் பார்க்கின்றார். முன்னம் முனியாகித் தவமுயன்று இப்பிறவி கிடைத்தும் கூட இறைத்தொண்டில் இடையீடு ஏற்பட்டதே! என்று எண்ணி மனம் வருத்தமடைகின்றார். ஒவ்வொரு செயலும், சிந்தனையும் இறையருள் துணை இருந்தால் மட்டுமே செம்மையாக நடைபெறும்.  யான் எனது என்பதன் செருக்கு அற்று வாழ்வதற்கு இறைவனின் அருள்வேண்டும் எனச் சிந்திக்கின்றார்.


ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே
அடங்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே
 ஓட்டுவித்தால் யாரொருவர் ஓடாதாரே
     உருகுவித்தால் யாரொருவர் உருகாதாரே
 பாட்டுவித்தால் யாரொருவர் பாடாதாரே
     பணிவித்தால் யாரொருவர் பணியாதாரே
 காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே
     காண்பார் ஆர் கண்ணுதலாய்க் காட்டாக்காலே
                                           (திருமுறை 6)

                                    
     என்று கண்ணுதல் பெருமான் காட்டிக் கொடுத்ததால்தான் இவ்வளவு தொண்டும் திருப்பணியும் தம்மால் செய்ய முடிந்தது என்று நினைத்தார்.


     திருநாவுக்கரசர் , திருப்பூந்துருத்தியில் உள்ளார் என்பதை அறிந்த ஞானசம்பந்தர் திருநாவுக்கரசரைக் காண்பதற்கு பூந்துருத்தி வருகின்றார். ஞானசம்பந்தர் தன்னைத் தேடி வருகிறார் என்பதை அறிந்த நாவரசர் எதிர்கொண்டு அழைக்கச் சென்றார். சிவனடியார்கள் ஞானசம்பந்தரைப் பல்லக்கில் வைத்து தூக்கி வருவதை அறிந்த நாவரசர்,  தானும் ஒருவராகச் சென்று பல்லக்குத் தூக்குகின்றார்.  பூந்துருத்தி வந்ததும் அப்பர் எதிர்கொண்டு அழைக்க வருவாரே! இதுவரையும் வரவில்லையே! என நினைத்த ஞானசம்பந்தர் அப்பர் எங்குற்றார்? என வினவினார்.  பல்லக்குத் தூக்கி வரும் அப்பர்.

அடியேன் உம் அடிகள் தாங்கிவரும் பெருவாழ்வு வந்து
 எய்தப்பெற்று இங்குற்றேன்
                                    
     என்றார். பல்லக்கிலிருந்து ஞானசம்பந்தர் இறங்கி அப்பர் அடி பணிகின்றார். அப்பரும் ஞானசம்பந்தர் அடி பணிகின்றார்.

அருள் அடியவா்கள் தங்களுக்குள் ஏற்றதாழ்வு பார்ப்பதில்லை.  தானே பெரியவன் என்று தருக்கித் திரிவதுமில்லை.  அதனால் இறைவன் அவா்கள் அன்பு எனும் கடத்துள் அமா்ந்து அருள் செய்கின்றான்.


9 June 2018

ஐந்தெழுத்தின் வலிமை - Power of Namasivaya Mantra


ஐந்தெழுத்தின் வலிமை


     அல்லல் படை வாராமல் காப்பதற்காகப் படைஎழுச்சி செய்கிறார்கள் அருளாளர்கள். வான ஊர் அடையவேண்டும் என்பது ஒவ்வொரு உயிரின் இலக்காக இருக்கவேண்டும். வான நாட்டினைக் கைப்பற்றச் செல்லும்போது எதிரிப்படைகள் வந்து நம்மைத் தாக்கும். அவற்றினை வெற்றி கொள்ள வேண்டுமானால் , நீற்றுக்  கவசம் அணிய வேண்டும்.


படைக்கலங்கள் எவை எவையாக இருக்கவேண்டும் என்று பாடுகின்றார்.  படைக்கலமாக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் இருக்கவேண்டும். 

     படைக்கலமாகக் கொண்ட எழுத்து ஏதோ உதட்டளவில் முணுமுணுப்பது அன்று. ஐந்து எழுத்து ஊனோடும், உயிரோடும்,உணர்வோடும் ஒன்றி இருக்கவேண்டும்.
ஒரு
கிளிக் கதை கூறுவார் இராமகிருஷ்ண பரமஹம்சர்ஒருவன் கிளி வளர்த்தான். அந்தக் கிளிக்கு இராம நாமம் பயிற்றுவித்தான். சொன்னதைச் சொல்வதுதானே கிளிப்பிள்ளையின் இயல்பு. அதனால் இராம இராம என்று கூறிக்கொண்டிருந்தது. திடீரென்று ஒரு பூனை கூண்டின் அருகே வந்ததுஇதுவரை இராம நாமம் கூறிவந்த கிளி கீ கீ என்று கத்தியது. உயிர்ப் பயம் வரும்போதும் இராம நாமம் கூறவேண்டும். ஆனால் அப்போது அது கீ கீ என கத்தியது. ஏனெனில் ஊனோடும், உணர்வோடும் ஊறவில்லை அந்த நாமம்அதனால் மரண பயம் வந்ததும் கீ கீ என்றது. நாவுக்கரசரை நீற்றறையில் போடும்போதும்கல்லில் பிணைத்துக் கடலில் எறியும்போதும் அவற்றை எதிர் கொண்டது திருநாமம்தானே.

     ஒரு அரசன் அழைத்து வரும்படி ஆணை இடுகின்றான்.  ஆனால் அந்த ஆணையைப் பார்த்து பயம் கொள்ளாமல் நாம் யார்க்கும் குடியல்லோம் என்று தெளிந்த சிந்தனையுடன், தீரமுள்ள நெஞ்சுறுதியுடன்; கூறினார் என்றால், அரசனை விட மேலான படை பலம் இவரிடம் இருந்திருக்க வேண்டும். அந்த படைபலம் தந்த துணிவினால்தான் நாம் யார்க்கும் குடியல்லோம் என்றார். அந்த படைபலம் உன் நாமத்து எழுத்து அஞ்சு என்று ஐந்தெழுத்தின் வலிமையைக் கூறுகின்றார்.

     சாம்பார் மற்றும் புளிக்குழம்பு சமைக்கும் பாத்திரத்தில் பால் காய்ச்சினால் பால்  திரியும்.  அப்பாத்திரத்தில் உள்ள புளி, உப்பு அப்பாத்திரத்தில் ஊற்றும் பாலைத் திரித்து விடும்அதனால் பால் பாத்திரம் தனியாக இருக்கும்பூஜைக்கென உள்ள பஞ்ச பாத்திரத்தினையும் அதன் புனிதம் கருதி ஏனைய உபயோகத்திற்குப் பயன்படுத்தமாட்டார்கள்இறையடியவா்களும் தங்களது மனதின் உணா்வின் புனிதத்தைக் காப்பாற்றிக் கொள்ள மனதிற்குள் ஐந்தெழுத்தையே படைக்கலமாகக் கொண்டார்கள்மனதிற்குள் ஏனைய சிந்தனைகள் புகுந்தால் அது இடைக்கலமாகும்எண்ணச் சிதறல்களால் மனம் திரிய வாய்ப்புண்டுஅதனால் மனமாகிய கலம் இறையனுபவத்தைத் தவிர பேறு ஒன்றைப் பற்றாமல் இருப்பதற்கான கருணையை இறைவன் அருளியுள்ளான்.