18 February 2018

Religious Democracy - சமய சுதந்திரம்



சமய சுதந்திரம்





தெய்வங்கள் பேரில் பலியிடுவதை விரும்பாமல் அகிம்சை நெறியில் நிற்கும் நெறி என்று சமணம் சேர்ந்தால்  இங்கு தெய்வத்தின் பெயரால் ஆடு  கோழிகளைத்தான் பலியிட்டார்கள்.  ஆனால் அங்கு சமயத்தின் பெயரால் சகிப்புத் தன்மையை இழந்தவர்கள் தலைமைப் பதவியில் இருந்துகொண்டு மனிதரையே பழி வாங்கிக் கொல்வதைப் பார்த்தார். இறைவன் ஒருவனே. அவனைச் சமயத்தின் பெயரால் பிரித்து தாம் சார்ந்துள்ள சமயக் கொள்கைகளுக்குப் பெருமை சேர்ப்பதாக நினைத்துக் கொண்டு  இறைவனுக்குப் புறம்பாக நடக்கும் சமணர்களின் அறிவீனத்தைப் புரிந்துகொண்டார்.

     மற்றைய சமயத்தவர்கள் அவர்கள் சமயத்தைவிட்டு மாற்றுச் சமயத்திற்குச் சென்றால் உடனே மாற்றுச் சமயம் சென்றவர்களை பழி வாங்குவார்கள். தண்டனை கொடுத்து மீண்டும் அவர்கள் மதத்திற்கே சேர்த்து விடுவார்கள்.  ஆனால் நான் சமயத்தை மறந்து சிவத்தை மறந்து சமண சமயம் சென்றபோது யாரும் என்னைத் தடுக்கவில்லை. இது தான் நமது சமயச் சிறப்பு என்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன். எந்த சமயத்திற்கு சென்றாலும் அது அந்த ஜீவனுடைய சுதந்திரம். அதில் தலையிடுவதோ அல்லது மாற்று சமயத்திற்கு மாறியவர்களைத் தண்டிப்பதோ இந்து சமயத்தில் கிடையாது.  வேறு எந்த சமயத்திற்கும் இல்லாத சமய சுதந்திரம் இந்து சமயத்திற்கு உண்டு என்பதை நாவரசர் வரலாறு உணர்த்துகின்றது.

     ஒரு உயிர் தான் விரும்பும் சமயத்தை ஏற்றுக்கொண்டால் அது அந்த உயிரின் இயல்பு. ஒரு உயிருக்குத் தனது குருவைத் தேர்ந்தெடுக்கும் உரிமையையும்  ஒரு தெய்வத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் நம் சமயம் அளித்துள்ளது. ஒரே தெய்வம் பல வடிவங்களை எடுத்துள்ளதால் எந்த சமயத்தில் இருந்தாலும் அதுவும் தம்மையே வந்து சாரும் என்பது நமது சமயக் கொள்கை என்பதை உணர்ந்தார்.

எண்ணுகின்றேன் எண்ணமெல்லாம் தருகின்றான்

(அருட்பா)

 
     எண்ணமெல்லாம் தருகின்றான் அதனால் எண்ணுகின்றேன் என்றால் அது ஜீவ சுதந்திரமல்ல. நம்முடைய எண்ணத்தையும் சிந்தனையையும் இறைவன் ஆக்ரமித்துக் கொண்டதால் நமக்கு என்று தனியான எண்ணம் இல்லாமல் தனது தலைவனது ஆணைக்குக் கட்டுப்பட்ட சிந்தனையில் நாம் சிந்திக்கின்றோம் என்றாகிவிடும். அதனால் நான் ஜீவ சுதந்திரத்தில் நின்றுகொண்டு சிந்திக்கின்றேன்.  இறைவன் எனது எண்ணத்திற்குத் தகுந்தவாறு என்னை எண்ணத் தூண்டுகின்றான் என்கின்றார் வள்ளல் பெருமான். 

     திருநாவுக்கரசரும் தன்னைக் காவல் செய்ய வேண்டியவர்கள் அனைவரும் காக்கத் தவறிவிட்டார்கள்.  அதனால் நான் பர சமயம் புகுந்தேன் என்கின்றார்.
 


வேறுபடும் சமயம்


வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின்
விளங்குபரம் பொருளே! நின் விளையாட்டு அல்லால்
 மாறுபடும் கருத்து இல்லை முடிவு இல் மோன
வாரிதியில் நதித்திரள் போல் வயங்கிற்று அம்மா
(தாயுமானவர்)

 
     எல்லாச் சமயங்களின் கடவுளும் ஒரே கடவுள்தான் என்ற சமய உண்மையை உணர்ந்தவர்களால் மட்டுமே நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் நன்மை செய்யமுடியும்.  சமயகோடிகள் எல்லாம் தன் தெய்வம் என் தெய்வம் என்று எதிர் வழக்கிட ,  நிற்கின்ற பொருளை உள்ளது உள்ளபடி உணரத் தெரிந்தவர்கள்தான் மெய் ஞானிகள்.


திருநாவுக்கரசர் சமயம் கடந்த மெய் ஞான உணா்வைப் பெற்றார்.  இறையுணா்வு அதீதமான உணா்வு.  அறுசமயமும் சாராதது.  யானாகிய என்னை விழுங்கி அதுவாய் நிற்கவல்லது.  சமய சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் உள்ள சமயத்தில் பிறந்ததால் நாவரசா் இந்த அனுபூதியைப் பெற்றார்.