31 January 2019

Sundarar's marriage - பதிவு மணமும் , பழமை மணமும்


பதிவு மணமும் , பழமை மணமும்


மூவாத திருமகிழை முக்காலம் வலம்வந்து
 மேவாது இங்குயான் அகலேன்
                                               (பெரியபுராணம்)

     
     எனச் சூளுரை செய்தது , எங்கே எதைப் பதிவு செய்ய வேண்டுமோ அங்கே பதிவு செய்த திறத்தைத் காட்டுகின்றது.  மகிழ மரத்தடியில் இருக்கும் ஈசரிடம் தன் கணக்கைப் பதிவுசெய்து விடுகின்றார் சங்கிலியார். இந்தப் பதிவுத் திருமணத்திற்குப் பிறகு பெரியவர் கூடி ஏற்பாடு செய்து மணமுடித்து வைக்கின்றார்கள்.

     சுந்தரரும் ,  சங்கிலியாரும் மனநிறைவுடன் வாழ்ந்து வருகின்றார்கள்.  திருவாரூர் வசந்தவிழா நினைவிற்கு வந்தது சுந்தரருக்கு.



ஏழிசையாய் இசைப்பயனாய்
இன்னமுதாய் என்னுடைய
 தோழனுமாய் யான் செய்யும்
துரிசுகளுக்கு உடனாகி
  மாழை ஒண்கண் பரவையைத் தந்து
ஆண்டானை மதியில்லா
 ஏழையேன் பிரிந்திருக்கேன்
என் ஆரூர் இறைவனையே
                    
                                                
(
திருமுறை 7)



     என்று ஆரூர் இறைவனை நினைந்து உருகுகின்றார். சங்கிலியாரிடம் செய்துகொடுத்த சத்தியம் நினைவிற்கு வருகின்றது. இங்கு யான் அகலகில்லேன் என்று கூறிய சூளுரை மனத்தை அழுத்தியது.  ஒற்றியூருக்கும் ,  திருவாரூரூக்கும் இடையில் பாவிடை ஆடு தயிர்போல் உள்ளம் பரந்து கரந்தது.  எப்படியாகிலும் திருவாரூர் செல்லவேண்டும் என்னும் எண்ணம் மேலோங்கியது.  திருவொற்றியூர் பெருமானிடம் விடைபெற்றுக்கொண்டு திருவாரூரை நோக்கிப் பயணம் புறப்படுகின்றார் சுந்தரர். திருவொற்றியூர் எல்லை தாண்டியதும் கண் இரண்டும் தெரியவில்லை.  மூர்ச்சித்து விழுந்தார்.


     அடியவரே ஆனாலும் குற்றம் குற்றமேஅதற்கான பதிவை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் எனப் பதிவு செய்வது சுந்தரரின் இவ்வரலாற்று நிகழ்வு..


26 January 2019

Sambandhar's miracle - பையச் சென்று பற்றவும்


பையச் சென்று பற்றவும்



திருஞானசம்பந்தர் மதுரை வந்ததை அறிந்ததும் ஞானசம்பந்தரால் தங்களுக்கு எதுவும் ஆபத்து விளையுமோ என்று அஞ்சினர் அமணர்கள். அதனால் ஞானசம்பந்தர் தங்கியிருந்த அறைக்கு நெருப்பு வைத்தனர்.


“  செய்யனே திரு ஆலவாய் மேவிய
  ஐயனே அஞ்சேல் என்றருள் செய்எனைப்
  பொய்யராம் அமணர் கொளுவும் சுடர்
  பையவே சென்று பாண்டியற்காகவே
                                              (திருமுறை 3)



     அமணர்களில் பொய் வேடம் தாங்கிய சிலர் செய்த பாதகச் செயலால் அரசனுக்கும் , நாட்டு மக்களுக்கும் பழி வந்துவிடக் கூடாது என்று ஞானசம்பந்தர் விரும்பினார்.  இந்த வினைகள் பாண்டியனைச் சென்று பற்றட்டும் என்று கூறினால் பாண்டிமாதேவியும், பாண்டிநாட்டு மக்களும் உய்வடையாமல் போய்விடக்கூடும் என்று விரும்பினார் ஞானசம்பந்தர். சரணம் என்று அடைந்தவர்களைப் பாதுகாக்கும் நீ பாண்டிநாட்டு மக்களையும் காக்கவேண்டும் என்று வேண்டினார்;. அதனால் பையவே சென்று பாண்டியனைச் சாரும்படியாக ஏவினார்.

     அத்தீத்தழலின் வெம்மை ,  நோயாக மாறிப் பாண்டியனைச் சென்று அடைந்தது. பாண்டிய மன்னன் வெப்பு நோயால் அவதிப்பட்டான். சமணர்கள் தாங்கள் கற்ற மணி,  மந்த்ர,  மருந்துகளால் பாண்டிய மன்னனைக் குணப்படுத்த முயற்சி செய்தனர்ஆனால் நோய் குணமாகவில்லைமாறாக நோயின் தாக்கம் அதிகமாகியது.

     குலச்சிறையாரும்,  மங்கையர்க்கரசியாரும் தகுந்தநேரம் பார்த்து ஞானசம்பந்தர் மதுரை வந்திருக்கும் செய்தியையும்,  அவர் அரண்மனை வருகை புரிந்தால் வெப்புநோய் தணியும் என்றும் அரசனிடம் எடுத்து இயம்பினார்கள்.  பாண்டிய மன்னனின் மனம் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்    என்னும் நிலையில் இருந்தது. அதனால் ஞானசம்பந்தரை வரவழைக்கலாம் என்று அனுமதி வழங்கினான். ஞானசம்பந்தர் வந்து வெப்புநோய் தணித்தால் தங்களை யாரும் மதிக்கமாட்டார்கள் என்று சமணர்கள் கருதினர். அதனால் அரசனின் உடலில் ஒருபுறம் சமணர்கள் மயில் பீலி வீசுவது என்றும்; மறுபுறம் ஞானசம்பந்தர் திருநீற்றை இடுவது என்றும் முடிவாயிற்று. 

     குலச்சிறையாரும்,  மங்கையர்க்கரசியாரும் மிகுந்த மனநிறைவுடன் இருந்தனர். திருஞானசம்பந்தரிடம் சென்று அரண்மனை வரும்படி அன்புடன் அழைத்தனர். ஞானசம்பந்தரும் ஆலவாய் அண்ணலின் திருக்கருணையை மன்னன் புரிந்து கொள்ளும்படியாக இறைவன் அருள்செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டார்.


     அரசியும்,  அமைச்சரும் ஞானசம்பந்தரை மங்கள வாத்தியங்கள் முழங்க எதிர்கொண்டு அழைத்தனர். பின் அரசன் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர். தனியான இருக்கையில் அமரச்செய்தனர். ஞானசம்பந்தரைக் கண்டதும் வெப்புநோயின் வெம்மை சற்றே தணிந்தது. பிறகு பாண்டிய மன்னனுக்கு நம்பிக்கை வரும்படியாகவும்,  அரசனின் வெப்புநோய் தணிவதற்காகவும்  பதிகங்கள் பாடினார்.


மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
 சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
 தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
 செந்துவர்வாய் உமைபங்கன் திருஆலவாயன் திருநீறு

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
 போதந் தருவது நீறு புன்மை தீர்ப்பது நீறு...                                                                            
                                                 (திருமுறை 2)


     என்ற பதிகம் பாடி திருநீறு பூசவும் வலது பக்கத்து வெம்மை தணிந்தது.  புன்மையும்,  வெம்மையும் தீர்ந்து அரசன் உடல் நலமும்,  மனநலமும் பெற்றான்.  ஆனால் இடதுபக்கம் வெம்மை அதிகமாகியது.  சமணர்கள் மயில்பீலி கொண்டு வீசினர். ஆனால் எந்தவகையிலும் வெம்மை தணியவில்லை. மாறாக வெப்பு நோயின் தாக்கம் இடதுபக்கம் அதிகமாகியது.


     அரசன் நோயின் தீவிரம் தாளமாட்டாமல் " இடதுபக்க வெப்புநோயும் நீங்களே தீர்க்கவேண்டும்"  என ஞானசம்பந்தரைக் கேட்டுக்கொண்டான். ஞானசம்பந்தரும் திருவாலவாயான் திருநீற்றைப் பூசி, அரசன் உற்ற வெப்புநோயைக் குணப்படுத்தினார். அரசன் மனம் மகிழ்ந்து தெய்வக் குழந்தையின் பாதம் பணிந்தான்.

22 January 2019

Life without tension - பரபரப்பில்லா வாழ்வு




பரபரப்பில்லா வாழ்வு



     இறைவனுடைய திருநாமத்தை எப்படிச் சொல்லவேண்டும் என்று வழி , துறை காட்டிச் செல்கின்றார் ஞானசம்பந்தர்.  எந்தச் செயலையும் முழு மனத்துடனும் ,  முழு ஈடுபாட்டுடனும் செய்தால் அச்செயல் மேன்மை பெறும். குறிப்பாக இறைவழிபாடு செய்யும்போது முழுமையான பற்றுடனும்ஈடுபாட்டுடனும் செய்யவேண்டும். அப்படிச் செய்தால்தான் அவ்வழிபாடு நிறைவுபெறும்சாதாரணச் சொற்கள் போல் அல்ல மந்திரச் சொற்கள்ஆனால் மந்திரச் சொற்களை நம்பிக்கையுடனும், உறுதிப்பாட்டுடனும் கூறவில்லை எனில் அவைகட்கும் சாதாரணச் சொற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்மந்திரச் சொற்களை நாம் எவ்வாறு கூறவேண்டும் என்று ஞானசம்பந்தர் பாடுகின்றார்.

ஒல்லையாறி உள்ளம் ஒன்றிக்
கள்ளம் ஒழிந்து வெய்ய
  சொல்லை ஆறித் தூய்மை செய்து
கர்ம வினை அகற்றி
 நல்லவாறே உன்தன் நாமம்
     நாவில் நவின்று ஏத்த
 வல்லவாறே வந்து நல்காய்
வலிவல மேயவனே            

                                              
(
திருமுறை 1)


     தற்போது பரவலாகப் பேசப்படும் சொல் டென்சன், டென்சன், டென்சன்.  எங்கு திரும்பினாலும் இதே வார்த்தைகள்தான். பரபரப்பு , யாரைப் பார்த்தாலும் இதே சொல்தான்.  மன அமைதி இல்லை; உடல் அமைதி இல்லை; பரபரத்துகொண்டு அங்கும் ,இங்கும் ஓட்டம். வேலை செய்யும் இடத்தில் பரபரப்புஇவற்றை எல்லாம் மாற்றுவதற்கு ஒரு வழி கூறுகிறார் ஞானசம்பந்தர்.


     பரபரப்பு இல்லாமல் ,உள்ளத்தில் வஞ்சனை இல்லாமல் ,வெய்ய சொல்லாகிய கடும் சொல் நீங்கி , காமம் அகற்றி நல்லவாறே உன்தன் நாமம் நாவில் நவின்று ஏத்தவல்லவர்களுக்கு வினை சாராது. சமுதாயம் மேம்பாடு அடையும். நல்லவாறு உன்தன் நாமம் நாவில் நவின்றால் ஒல்லை ஆறும். பரபரப்பு நீங்கும்


     இன்றைய சமுதாயத்திற்குத் தேவையான அறிவுரைகளை வழங்குகின்றார்.  கர்மவினை அகற்றிவிட்டால் நாடு நலம் பெறும்.  சமுதாயமும் நன்றாக வளர்ச்சி அடையும்.  நியாயமான நமது தேவைகளை இறைவன் நிறைவேற்றித் தருவார்.  அதற்குமுன் நாம் பேராசையை விடவேண்டும். அயலார் நிதி ஒன்றும் நயவாத பண்பை நாம் வளர்த்துக் கொண்டோமானால் ஒல்லையாறிவிடும்; .கள்ளம் ஒழிந்துவிடும்;. உள்ளம் ஒன்றிவிடும்.  இத்தனையும் நடந்தால் நல்லவாறே உன்தன் நாமம் நாவில் நவின்று ஏத்தலாம்.


     நமசிவாய என்னும் மந்திரமே நான்கு வேதங்களுக்கும் மூலமந்திரமாக விளங்குகின்றது.  மெய்ப்பொருள் எது என்று தேடி அலமந்து திரிய வேண்டாம்.  நாதனாகிய நமது தலைவனது திருநாமம்தான் வேதம் நான்கிலும் மணிமகுடமாக விளங்குகின்றது. நம்பிக்கையுடனும் , நியாயமான கோரிக்கையுடனும் இறைவனை வேண்டினால் நமது வேண்டுதலை இறைவன் நிறைவேற்றுவான் என்று உறுதி கூறுகின்றார் ஞானசம்பந்தர்.