28 December 2017

Lessons from Thirunavukkarasar's history - Final Part - திருநாவுக்கரசா் வரலாறு காட்டும் பாடம் - நிறைவுப் பகுதி

  திருநாவுக்கரசா் வரலாறு காட்டும் பாடம் - நிறைவுப் பகுதி 



காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரைநின்றவர்
 கண்டுகொள்...”
                                                                                                                                (திருமுறை 4)
               

காத்தாள்பவர் காவல் இகழ்ந்துவிட்டார்கள்அதனால் நான் சமணம் குறுகினேன்இதில் என் பங்கு எதுவும் இல்லை அம்மையாக, அப்பனாக, ஐயனாக, அன்புடைய மாமனாக, மாமியாக இருந்து காவல் செய்யவேண்டிய யாரும் என்னைக் கண்டு கொள்ளவில்லை. குருவாக இருந்து என்னை வழிநடத்த வேண்டியவர்களும், என்னைக் கண்டுகொள் என்று சொல்லவில்லை. ஈசனாக இருந்து நீயும் என்னைக் கண்டு கொள்ளவில்லை. இப்போது என்னிடம் சினம் கொள்வதில் என்ன நியாயம் உள்ளது? நீ உனது கடமையைச் செய்திருக்கவேண்டும் என்று, தானே ஒரு வழக்கறிஞராக இருந்து இறைவனிடம் நீதி கேட்கின்றார் அப்பர் சுவாமிகள்

மேலும் பெரியவர்களுக்கு என்று ஒரு பொறுப்பு உள்ளதுதன்னைச் சரண் அடைந்தவர்களைக் காப்பதுதான் அப்பெரிய பொறுப்பு. தன்னை அடைந்தார் வினை தீர்ப்பது அன்றோ, தலையாயவர் தம் கடமைஅதைவிடுத்து நான் முன்பு அறியாமல் செய்த தவற்றிற்காக இப்போது தண்டிப்பது எந்த வகையில் நியாயம்என்று நீதி கேட்கின்றார் அப்பரடிகள்.

                சாதாரணமாக உலகியலில் உள்ளவர்கள் எந்தத் தவறு வேண்டுமானாலும் செய்யலாம். அது அவர்களுக்கு எந்த இழுக்கையும் தேடித்தராது. ஆனால் உன்னை உலகத்தவர்கள் அனைவரும்உள்குவார் வினை தீர்க்கும் என்றுரைப்பர்அப்படி உள்குவார்கள் வினை தீர்ப்பதாகப் பெயர் மட்டும் வாங்கினால் போதுமா? இவ்வுலகத்தில் நானும் ஒருவன். நானும் உன்னையே நினைந்து உருகுகின்றேன். அப்படி இருக்கும்போது எனது வினைகளை நீ தீர்க்கவில்லையே என வினவுகின்றார் நாவரசர்.


தம்மை அடைந்தவர் வினை தீர்ப்பது
 தலையாயவர் தம் கடமை




 என்னும் உலக வழக்கிற்குப் பங்கம் வந்துவிடும் என்று இறைவனிடமே நீதி கேட்கின்றார்.

இன்னும் ஒருபடிமேலே போய், நீ அப்படிக் காவாது விட்டுவிட்டால் யாருமே உன்னை நம்ப மாட்டார்கள். இவ்வளவுதானா அடியவர்கள் படுவது?  அடியவர்கள் என்றால் இறைவன் அவர்களுக்கு வேண்டிய மனநிறைவையும், இறை உணர்வையும் தந்திருப்பான் என்ற நினைத்து வந்தால், இது என்ன மோசம். அப்பரடிகள் போன்ற அடியவர்களே இப்படித் துன்பப்படுகிறார்களே! என்று யாருமே உன்பக்கம் வரமாட்டார்கள் என்று கூறுகின்றார்.


                இன்னும் ஒருபடி மேலே போகின்றார்அன்று நான் இராவணனுக்கு உளவு சொன்னேன்தவறு செய்ததற்காக மீண்டும் பூமியில் வந்து பிறந்து, தாய் இழந்து, தந்தை இழந்து, தமக்கையைக் குருவாக அடைந்து உன்னை அடையும்பேறு பெற்றேன். உனது கூற்றான எனது தண்டனையை நீ விலக்கினால்தானே நான் பிறவி நீக்கம் பெறுவேன்உனது கூற்று என்னவயிற்றுவலி கூற்றாக வந்து வதைக்கின்றது. ஆனால் அந்தக் கூற்றுவனுக்கு நான்; பயம் கொள்ளவில்லைஉன்னுடைய ஆணையின் பேரில் முன்னம் முனியாக வாழ்ந்தவன்இப்போது வாகீசனாகப் பிறந்துள்ளேன். அந்தக் கூற்றை (அந்த ஆணையை) விலக்கு என்று வாதிடுகின்றார். அரச ஆணை கேட்டே அச்சப்படாத திருநாவுக்கரசர் வயிற்றுவலிக்கா அச்சப்படப் போகின்றார்.

                கொலைவரி வேங்கை வந்தாலும் பயமில்லை. பொய் மாயப் பெருங்கடலில் புலம்பாநின்ற புண்ணியத்திற்கும், தீவினைக்கும் பயமில்லை. உனது வார்த்தையை மாற்றித் தரவேண்டும். உனது அடியவர் கூட்டில் சேர்த்துத் தரவேண்டும் என விரும்புகின்றார் அப்பரடிகள்

22 December 2017

Lessons from Thirunavukkarasar's history - Part 2 - திருநாவுக்கரசா் வரலாறு காட்டும் பாடம் - பகுதி 2

திருநாவுக்கரசா் வரலாறு காட்டும் பாடம் - பகுதி 2 


வான்வெளிப் பயணமாக வருகின்றான் இராவணன். கயிலைமலையைக் கண்டதும், வான்வெளி பயணத்திற்குக் கயிலை மலை குறுக்கே நிற்பதாக உணருகின்றான். மலையைத் தூக்கி நகர்த்தி வைத்துவிட்டுத் தனது பயணத்தைத் தொடர நினைக்கின்றான்எதிரில் கயிலைமலை குறுக்கிட்டதால் தன் பாதையை மாற்றி அமைத்துக்கொள்ள இராவணனின் ஆணவம் குறுக்கிட்டது. மலையை அசைத்துப் பெயர்க்க நினைக்கின்றான். மலைமகள் அஞ்சுகின்றாள்கயிலைநாதன் தனது பெருவிரலை ஊன்றவும், இராவணன் மலைக்கு இடையில் அகப்பட்டுக் கொண்டான்அங்கு தவம் இயற்றிக் கொண்டிருந்த வாகீச முனிவர் (திருநாவுக்கரசர்) இராவணன் படும் துன்பத்தைக் கண்டு இரக்கம் கொள்கின்றார். சங்கரன் சாமகானப் பிரியன் என்று குறிப்பால் உணர்த்துகின்றார். அதுகேட்ட இராவணன் தனது ஒரு தலையினைத் துண்டித்து கை நரம்புகள் கொண்டு வீணை செய்து சாமகானம் இசைத்தான். அவனுக்குச் சிவனருள் கிடைத்தது


                சிவபெருமானது உள்ளக்குறிப்பு அறியாது செயல்பட்டோமோ என வருந்துகின்றார் வாகீசமுனிநாம் தவறு செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது. தவறு செய்பவர்களுடன் கூட்டணியும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதை உணர்ந்தார். அதனால் ஒவ்வொரு பதிகமுடிவிலும் இராவணனைக் குறித்துப் பாடுகின்றார்.



முன்னம் அடியேன் அறியாமையினால்
முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
 பின்னை அடியேன் உமக்கு ஆளும் பட்டேன்
சுடுகின்றது சூலை தவிர்த்தருள்வீர்
 தன்னை அடைந்தவர் வினை தீர்ப்பது அன்றோ
தலையாயவர் தம் கடனாவதுதான்    
 அன்ன நடையார் அதிகைக் கெடில
வீரட்டானத் துறை அம்மானே”            
                                                                                                                                (திருமுறை 4)


                முன்னம் அறியாமையினால் செய்த குற்றத்திற்கான தண்டனையை இப்போது அனுபவித்து வருகின்றேன்நான் ஆட்பட்ட பிறகு என்னைத் தாங்கிக் கொள்வதுதானே உனது கடமை என்று கடந்த பிறவியில் உள்ள வினைத் தொடர்பை நினைவுபடுத்திப் பாடுகின்றார் திருநாவுக்கரசர்


கூற்றாயினவாறு விலக்ககிலீர்என்று தனது முதல் பதிகத்தைத் தொடங்குகின்றார் அப்பரடிகள்இறைவனால் சூலைநோய் தரப்பட்டது. அதனால், அதன் கொடுமை தாங்க முடியாததாகத்தான் இருக்கமுடியும். அப்படி ஒரு கொடுமையை அனுபவித்ததால் கூற்றாயினவாறு விலக்ககிலீர் என்று பாடுவதாக நினைக்கின்றோம். ஆனால் நீதிபதியிடம் நீதிகேட்கும் பாவனையில்தான் இப்பதிகத்தைப் பாடுகின்றார் என்பர் ஆன்றோர்.


                தாய்க்கும், பிள்ளைக்கும் அல்லது தந்தைக்கும், பிள்ளைக்கும் என்று குடும்பத்தில் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு வருகிறது என வைத்துக் கொள்வோம். செய்த தவற்றிற்கு யார் காரணமாக இருந்தாலும் அத்தவறு தன்னுடையது என்று யாரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். தவறு தன்னுடையதுதான் என்று ஒப்புக்கொண்டுவிட்டாலே வாதப் பிரதிவாதத்திற்கும், கருத்து வேறுபாட்டிற்கும் அங்கு இடமில்லாமல் போய்விடும். தனது பெற்றோரிடமோ, குருவிடமோ, தெய்வத்திடமோ தவறு என்னுடையதுதான் இனிமேல் தவறு செய்யமாட்டேன் என்று ஒப்புக்கொள்ளும் ஒரு மனத்தெளிவு யாருக்கும் வருவதில்லை. திருநாவுக்கரசருக்கு சூலைநோய் வந்ததும், தான் சமண சமயத்திற்குப் போனதற்கான காரணத்தை இறைவனிடம் கூறுகின்றார்.

தொடரும்..... 

12 December 2017

Lessons from Thirunavukkarasar's history Part 1 திருநாவுக்கரசா் வரலாறு காட்டும் பாடம்



திருநாவுக்கரசா் வரலாறு காட்டும் பாடம்

திருநாவுக்கரசருக்கு முன்பிறவிக் கதை ஒன்று கூறப்படுகின்றது.  பெரிய புராணத்திலும் அதற்கான குறிப்புகள் உள்ளது. 


திருநாவுக்கரசு வளர் திருத்தொண்டின் நெறிவாழ
 வருஞானத் தவமுனிவர் வாகீசர்                                                                                                                                                                                                                                (பெரியபுராணம்)
               
                திருநாவுக்கரசர் வரலாறு துவங்கும்போதே வருஞானத் தவமுனிவர் வாகீசர் என்று துவங்குகின்றார். திருநாவுக்கரசர் சமணம் சார்ந்தபோது தமக்கை திலகவதியார் மனம் உடைந்து இறைவனிடம் தம் வாழ்நாள் உள்ளபோதே தம்பியார் சைவ சமயம் திரும்பவேண்டும் என்று வேண்டுகின்றார்.

பண்டு புரி நல்தவத்துப் பழுதின் அளவு இறைவழுவும் தொண்டர்

                                                                                             (பெரியபுராணம்)
                                                                                                                                               
                திருநாவுக்கரசர் வாகீச முனிவர் என்னும் பெயரால் நற்றவம் செய்து கொண்டிருக்கின்றார். அதில் பழுது சிறிதளவு இருந்ததால் அந்தக் குற்றம் நீங்குவதற்காக மீண்டும் பிறக்கின்றார். 

                சுந்தரரது முற்பிறப்பு பற்றி விரிவாகக் கூறுகின்றார் சேக்கிழார் சுவாமிகள்.

போதுவார் அவர் மேல்மனம் போக்கிடக்
 காதல் மாதரும் காட்சி எண்ணினார்                                                                                                                                                                                                                                       (பெரியபுராணம்)
                               
 முன்பு நீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூறப்
 பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது                             
                                                                                          (பெரியபுராணம்)

                சுந்தரர் கமலினி அநிந்திதை மேல்கொண்ட காதலால் மண்ணின் மீது பிறந்தார் என்று முற்பிறவித் தொடர்பினைக் கூறுகின்றார். 

                ஆனால் திருநாவுக்கரசர் வரலாற்றில் அப்படி ஏதும் கூறவில்லையாயினும் முன்னம் வாகீச முனியாக இருந்ததும், சிறிது பிழையால் மண்ணின் மீது வந்ததும் தெரிகின்றது. 

                ஒவ்வொரு பதிகத்திலும் கடைசிப் பாடலில் இராவணேஸ்வரனை நினைவுகூர்ந்து பாடுகின்றார். எல்லாப் பதிகங்களிலும் இராவணன் நினைவு வருவதற்குக் காரணம்களவு செய்வோருக்கு உளவு சொன்னேனோஎன்னும் குற்ற உணர்வுதான் என்பார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

                இராவணன் சிறந்த சிவபக்தன். சாமகானத்தை இசையுடன் பாடுபவன்.  முப்பத்து முக்கோடி வாழ்நாள் வரம் பெற்றவன். ஆனால் கல்வி என்னும் பல்கடலும்; செல்வம் என்னும் அல்லலும் பிழைக்கவில்லை. வெளிப்பகைவர்களை வெற்றி கொள்வதில் தன் காலத்தைச் செலவிட்டானே தவிர, தனது அகப்பகையை வெல்லுவது எப்படி? என்பது பற்றிச் சிந்திக்கவில்லை.

... தொடரும்