26 April 2019

Guru's Blessing - அருளே குரு



அருளே குரு


தன்னலம் கருதாத குருநாதரும், தற்பெருமை பாராட்டாத சீடர்களும் நிறைந்த புண்ணிய தேசம் நமது பாரததேசம். பொதுவாக ஒரு மனிதன் வாயைத் திறந்தால் ஒன்று தனது பெருமையையும், தனது புகழையும் பாராட்டுவான்  அல்லது பிறரைக் குறை கூறுவான். இதுதான் மனிதன் செய்துவரும் சாதனை. 

நமது
பாரத தேசத்தின் பழைய பெருமை குறைவுபடாமல் இப்படி ஒரு குருநாதரால்தான், இப்படி ஒரு சீடரை உருவாக்கமுடியும் என்று உருவாகியுள்ள சரித்திரம் ஒரு யோகியின் சுயசரிதை. அது ஒரு யோகியான யோகானந்தரின் சுயசரிதை அல்ல. அவரது குருநாதர் அவரை வழிநடத்திய சரிதை.  அவரது குருநாதர் அவர்மீது பொழிந்த கருணை ஊற்றின் சரிதம். 

     எத்தனை விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றாலும் ,  உலகமே கணினி மயமானாலும் ஒரு குருவால் மட்டுமே மனிதனை மனிதனாகச் செய்யமுடியும் என்பதை விளக்கும் சுயசரிதை அது. ஒவ்வொரு மனிதனும் பரபரப்பு இல்லாமல் வாழ்வதற்கு ஒரு குருவும்,  அவர் பயிற்றுவிக்கும் பயிற்சியும் எவ்வளவு அவசியமானது என்பதை விளக்கும் சரிதம்.

ஒவ்வொரு
மனிதனும் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு, ஒரு குருவும் அவர் பயிற்றுவிக்கும் யோகப் பயிற்சியும் எவ்வளவு அவசியம் என்பதை விளக்கும் நூல் அது. மனிதன் ஒழுக்க நெறியுடனும், பண்பாட்டுடனும் வாழ்ந்தால் , ஆடுறு சித்திகள் அறுபத்து நான்கு எழு கோடியும் விளங்க குலவு மெய்ப்பொருளே என்றும் கூட்டுறு சித்திகள் கோடி பல் கோடியும் ஆட்டுற விளங்கும் அரும்பெரும் பொருளே  என்று அனைத்துச் சித்திநிலைகளையும்  அனுபவத்தில் கண்டு உணரலாம் என்னும் அரிய தத்துவத்தை விளக்கும் சரிதம் அது.

8 April 2019

Commonality across different religions - வேறுபடும் சமயம் யாவும் அன்பே



வேறுபடும் சமயம் யாவும் அன்பே


அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்குஎன்று தன்னையே தியாகம் செய்து வாழும் சமயமே சிவ சமயம்.  அச்சமயத்தைப் பரப்புவதற்கு என்று கொள்கை பரப்புச் செயலாளர்கள் யாரையும் நியமிக்க வேண்டிய அவசியமில்லை. எச்சமயத்தில் இருந்து யார் அன்புவழி நின்று தொழில் படுகின்றார்களோ அங்கு இருப்பவன்தான் சிவ பரம்பொருள்.


                 சமணர்களையோ, பௌத்தர்களையோ அழிக்க வேண்டும் என்றோ, அவர்கள் சமயத்தைப் பழிக்கவேண்டும் என்றோ அருளாளர்கள் நினைக்கவில்லை.  அன்பிற்குப் புறம்பாகச் சகித்துக்கொள்ளும் தன்மையை இழந்து நிற்கும் ஆன்மாக்களின் மத, மாற்சரியத்தைக் களைந்து அவர்களை அவரவர் கொண்ட நெறியில் அன்புடன் வாழச் செய்வதுதான் சிவ சமயம். மேக்ஸ்முல்லர் என்னும் மேலைநாட்டுத் தத்துவஞானி நம் நாட்டுத் தத்துவங்களாலும், மகான்களின் அறிவுரைகளாலும் கவரப்பட்டு தாமும் இந்து சமயத்தைப் பின்பற்ற விரும்புவதாகவும் அதற்கான வழிமுறைகள் என்ன? என்றும் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரிடம் கேட்டார்.


                வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்த்தாலும் எல்லாம் இறைவனின் திருவிளையாடல்தான். அதனால் என்றும் இருந்தபடி இருங்கள்; யாரையும் மனம் நோகும்படிச் செய்யாதீர்கள்; எல்லா உயிரையும் நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் அதுவே இறைவழிபாடு. அதற்கு எந்தப் பெயரிட்டாலும் அது இறைவன் பெயர்தான் என்று கூறினார். உலகில் தோன்றிய அருளாளர்கள் அனைவருமே அன்பைத்தான் போதித்தார்கள்; அன்பைத்தான் விதைத்தார்கள்; அன்பைதான் வெளிப்படுத்தவும் செய்தார்கள். அன்புநெறி எங்கெல்லாம் பரப்பப்படுகின்றதோ அது சிவநெறிதான்.


அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்
அன்பேசிவமாவதுயாரும்அறிந்திலர்                                                                                                       
              
                                                                                                                (
திருமந்திரம்)




                அன்புதான் சிவம் என்று இறை இலக்கணம் வகுக்கின்றார் திருமூலர்.  பௌத்தம், சமணம் இரண்டுமே அன்பு நெறியையும், துறவு நெறியையும், புலால் மறுத்தலையும் போதிக்க வந்தவைகள்தான். ஆனால் அதைப் பரப்புவதாகக் கூறிக்கொள்ளும் பௌத்த சமயவாதிகளும், சமண சமயவாதிகளும் மறைந்திருந்து கொலை செய்யும் அளவு தீவிரவாதத்தைப் பரப்பினர். அவர்களிடையே மீண்டும் அன்பு நெறியினை நிலைநாட்ட அவதாரம் செய்தவர்தான் திருஞானசம்பந்தர்.