28 December 2018

Various forms of Deeksha - தீட்சைகள் பலவிதம்


தீட்சைகள் பலவிதம்



     ஸ்பரிச தீட்சை என்பது ஒருவகை. நமது உடம்பினுள் நரம்பு மண்டலம் உள்ளது.  அந்த நரம்பு மண்டலத்தில் எந்த எந்த இடத்தில் உள்ள நரம்புகளை இயக்கினால் நமது உடலும் , மனமும், உணர்வுகளும் நிலையான பேரின்பத்தை அடையும் என்பதை அனுபவத்தில் உணர்ந்த மகான்கள், அந்த அந்த இடங்களைத் தொட்டுக் காட்டிப் பயிற்சி அளிப்பார்கள்.  இதற்கு ஸ்பரிச தீட்சை என்று பெயர். 

     கோழி தனது முட்டையை அடைக்காத்து தனது பாதுகாப்பில் வைத்துச் சூடேற்றிய பின்னர் உரிய பக்குவமும், வளர்ச்சியும் பெற்றபிறகு முட்டையைத் தனது அலகால் கொத்தி உடைத்துப் பூரண கோழிக் குஞ்சாக வெளிவரச் செய்வதை இதற்கு ஒப்பிடலாம் இது ஒருவகை தீட்சை. சீடன் முழுமையான பரிணாம வளர்ச்சி பெறும்வரை தனது பாதுகாப்பில் வைத்திருந்து அவனைத் தொட்டு ஆசி கூறி முழுமைப்படுத்துவது இம்முறையில் அடங்கும்.


நயன தீட்சை



     மீன் தனது முட்டையை கரை ஓரங்களில் உள்ள இலை, தழை செடிகள் மீது இட்டுவிடும். பிறகு கடைக்கண்ணால் பார்த்தே குஞ்சு பொரித்துவிடும்.  கடைக்கண்ணால் பார்த்துப் பார்த்து அந்த குஞ்சுகளுக்கு வெளியிலிருந்து எந்தத் தீங்கும் வரவிடாமல் பாதுகாக்கவும் செய்யும். தாய்மீன் முன்னால் நீந்திச் செல்லும்.  பின்னால் வரும் தனது குஞ்சுகளைத் தனது கண் பார்வையாலேயே வழி நடத்தி முழு மீனாக்கிவிடும். இதனை நயன தீட்சை என்று சொல்வார்கள். அன்னை மீனாட்சி தனது குழந்தைகளை எல்லாம் தனது பார்வையாலேயே வழிநடத்துவதால் (மீன் அட்சம்) கயல்விழியாள் என்று கூறுவார்கள்.


மானச தீட்சை




மானச தீட்சை என்று ஒரு தீட்சை கூறுவார்கள். திமிங்கலம், ஆமை போன்ற கடல்வாழ் உயிரினங்கள் கரையில் முட்டை போட்டுவிட்டுப் பிறகு அந்த முட்டையையே நினைத்து தனது எண்ண அலைகளால் அந்த முட்டையினைப் பொரித்துவிடும். அதுபோல் ஒரு குருநாதர் நினைத்தால் தனது எண்ண அலைகளாலும், தான் பெற்ற பேரண்ட ஆற்றலின் புனிதத் தன்மையாலும் தனது சீடன் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் தன் வயப்படுத்தி தனது கருணையையும், அருள் ஆசியையும் அளித்துவிடுவார்.

   
ஸ்ரீ ஸ்ரீ யுக்தேஸ்வரர் இப்படி எல்லா வகையிலும் தனது சீடனை முழுமைப் படுத்தினார்.  ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர் ஒரு யோகியின் சுயசரிதை என்னும் புத்தகம் எழுதியுள்ளார். தனக்கும் தன் குருவிற்கும் இடையில் நிலவிய புனிதமான அன்பைப் பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார். உலகம் முழுவதும் அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகம் என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறது ஒரு யோகியின் சுயசரிதை.  அதில் ஒரு இடத்திலாவது சீடர் தனது பெருமை எதையும் கூறவில்லை.  குருநாதர் தன்னை எப்படி எல்லாம் அடித்து அடித்து அக்காரம் தீற்றி அற்புதம்  செய்தார் என்று தனது குருநாதரின் பெருமை பற்றியே புத்தகம் முழுவதும் எடுத்துச் சொல்கிறார்.  

     குருவருளும் திருவருளும் கூட்டுவித்தால் இந்த அருள்நிலையை உணரலாம்.

    

 


No comments:

Post a Comment