11 March 2018

Holy Bath - கங்கா ஸ்நானம்



கங்கா ஸ்நானம்



     மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாக நீராடவேண்டும் என்று சமயநெறியில் நிற்பவர்கள் கூறுவார்கள். வெற்றுச் சடங்குகள் வெறும் ஆரவாரத்தை மட்டுமே செய்யும். அதனால் எந்தப் பயனும் வந்துவிடாது என்று புரட்சிமிக்க கருத்தினைச் சமுதாயத்திற்கு விட்டுச் சென்றவர் திருநாவுக்கரசர்.

கோடிதீர்த்தங் கலந்து குளித்தவை
 ஆடினாலும் அரனுக்கு அன்பில்லையேல்
 ஓடும் நீரினை ஓட்டைக் குடத்தட்டி
  மூடி வைத்திட்ட    மூர்க்கனொடுக்குமே             
                                                                         (திருமுறை 4)

அன்பில்லாதவர் கோடி தீர்த்தம் கலந்து குளித்தாலும், அதனால் பயன் ஒன்றும் இல்லை என்கின்றார்.

நம்பிக்கையின் அடிப்படையில், நடக்கமுடியாது என்று நினைத்தவை எல்லாம் நடந்துவிடும். நம்பிக்கை இல்லாவிடில், எதுவும் நடக்காது என்பதனை ஒரு கதை மூலம் விளக்குவார் பரமஹம்சர்.

     கங்கையில் நீராடுபவர்கள் பாவங்கள் அனைத்தும் தொலைந்து புனிதம் பெற்றுவிடுவார்களா? என்று உமாதேவி பரமேஸ்வரனிடம் கேட்டார். பரமனும் அம்பிகையிடம் பூலோகத்தில் நடக்கும் காட்சி ஒன்றைக் காட்டினார்.

கங்கைக்கரை ஓரமாக வயது முதிர்ந்த பாட்டி அழுதுகொண்டிருந்தாள். அவள் அருகே ஒரு குழி இருந்தது. அக் குழிக்குள் அவளது கணவர் விழுந்துவிட்டார். யாரேனும் எனது கணவரைக் காப்பாற்றுங்கள் என்று பாட்டி அழுது முறையிட்டாள். அவ்வழியாகச் சென்றவர்கள் எல்லாரும் பாட்டியின் கணவரைக் காப்பாற்றுவதற்கு ஓடி வந்தனர். பாட்டி ஒரு நிபந்தனை விதித்தாள். யார் பாவம் செய்யாதவர்களோ, அவர்கள் மட்டுமே எனது கணவரைக் காப்பாற்ற முடியும். வேறு யாரேனும் எனது கணவர் அருகே சென்றால், அவர் இறந்து விடுவார் என்றாள். யாரும் தாத்தாவைத் தூக்க முன் வரவில்லை. அவ்வழியாக ஒரு இளைஞன் வந்தான். அவனும் இந்த உரையாடலைக் கேட்டான். உடனடியாகக் கங்கையில் சென்று நீராடினான். பிறகு தாத்தாவைத் தூக்க வந்தான். பாட்டி அவனிடமும் இதேபோல் கூறினாள். தம்பி நீ காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை எனது கணவர் உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையில் இருப்பேன். பாவம் செய்த நீ தூக்குகின்றேன் என்றுபோய், எனது கணவருக்கு உயிர் போய் விடக்கூடாது என்றாள்.

     இளைஞன் வேகமாகச் சென்று தாத்தாவைக் குழியிலிருந்து தூக்கி வெளியேற்றினான். அருகிலிருந்தவர்கள் தம்பி நீ பாவமே செய்தது இல்லையா? என்றார்கள். கங்கையில் நீராடினால் அனைத்துப் பாவங்களும் தொலைந்து போகும் என்று எத்தனை புராணங்கள் கங்கையின் பெருமையைப் பேசுகின்றன. நாம் ஒரு உயிரைக் காப்பாற்றப் போகின்றோம் என்னும் நம்பிக்கையில் கங்கையில் நீராடினேன். வேதங்களும் சாத்திரங்களும் கங்கை நம்மை புனிதப்படுத்தும் என்று கூறுகின்றன. அந்த நம்பிக்கையில்தான் உன்னிடம் வந்து எனது பாவத்தைத் தொலைக்கின்றேன். ஒரு உயிர்க்கு உதவி செய்வதற்கு உன்னை நாடி வந்துள்ளேன்” என்று கங்கா மாதாவைப் பிரார்த்தனை செய்தேன். அவள் என்னுடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டாள் என்று கூறினான் இளைஞன்.  தாத்தாவும் பாட்டியும் மறைந்தனர்.

     சிவபெருமான் உமையிடம் கூறினார். “இத்தனை பேர் வந்தார்கள், கங்கையில் நீராடினால் பாவம் தொலையும் என்னும் நம்பிக்கையும், உறுதிப்பாடும் இல்லையே!”. யார் நம்பிக்கையுடனும் பக்தியுடனும் அன்பு செய்கிறார்களோ, அவர்களுக்கு இறைவன் அருள்செய்வான்.

நம்பிக்கை இல்லாமல் செய்யும் பூஜையால் பயன் இல்லை என்கின்றார் நாவரசர். கோடி தீர்த்தம் கலந்து குளித்து, அரனுக்கு அன்பு இல்லாதது மட்டுமல்ல, அரனுடைய வடிவமான உயிர்களிடத்திலும் அன்பு செய்யாவிட்டால், கோடி தீர்த்தம் குளித்தும் பலன் இல்லை
.

ஒருவரை ஒருவர் புண்படுத்தி விட்டு பிறர் மனம் நோகும்படி செய்துவிட்டு , வேதம் ஓதினாலும் , வேள்விகள் செய்தாலும் , கங்கை ஆடினாலும், காவிரி ஆடினாலும் அவற்றால் ஒரு பயனும் வந்துவிடாது. ஓட்டைக் குடத்திற்குள் நீரை நிரப்பி மூடி வைப்பதுபோல்தான் இப்பூஜைகளும், தீர்த்தாடனங்களும் என்கின்றார் நாவுக்கரசர்.

காசி சென்றாலும், தலைக்காவேரி ஆடினாலும், புண்ணியம் என்று செல்பவர்களை, புதிய பாதையில், அன்பு செய்யுங்கள் என்று செம்மை செய்கின்றார் திருநாவுக்கரசர். 

  உயிருக்கு உய்தி பயப்பன மக்கள் தொண்டே. மக்கள் தொண்டைச் சரியாகச் செய்தோமானால், மகேசனே நம்மைத்தேடி வருவான் என்று செம்மை நெறியில் வாழ்ந்து காட்டினார் திருநாவுக்கரசர்.