27 May 2018

அறுபகை - Six inner enemies


அறுபகை

சமயம் என்னும் சொல்லிற்குப் பக்குவப்படுத்துதல் என்பது பொருள்.  சமயநெறியில் நின்றும் இறைவழிபாடு செய்யலாம்.  சமயம் கடந்தும் இறைவழிபாடு செய்யலாம்.  இறைவன் இவை எல்லாமாகவும் உள்ளான்.  திருஞானசம்பந்தர் அவதாரம் செய்ய வந்தபோது சமயத்தில் நின்ற சில சடங்குகள் மட்டுமே பின்பற்றப்பட்டது. சமயத்தின் உயிரான இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம், பொறுமை, சகிப்புத்தன்மைஉயிர்கள் அடையவேண்டிய பரிணாம வளர்ச்சி இவைகள் பின்பற்றப்படவில்லை. வெற்றுச் சடங்குகள் மட்டுமே பின்பற்றப்பட்டது. சமயத்தில் சடங்குகளின் பங்கு என்னஎதற்காக அவைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது எல்லாம் புரியாமல் வெறும் சடங்குகள் மட்டுமே சமயமாகக் கைக்கொள்ளப்பட்டது.

     கி.பி. ஏழாம் நூற்றாண்டு களப்பிரர்கள் ஆட்சி முடிவிற்கு வந்த காலம்.  களப்பிரர்கள் காலத்தில் தமிழும் சைவமும் தழைப்பதற்கான, ஆரோக்கியமான விதைநிலமாகத் தமிழ் மண் அமையவில்லை. உண்மைநெறி உணரமுடியாத மக்கள் வெற்றுச் சடங்குகளையும், ஆரவாரங்களையுமே சமயநெறி என்று நினைத்தபோது திருநாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் தமிழ் மண்ணில் பிறந்துவளர்ந்துசெழித்து மணம் பரப்பினர்.

     இறைஉணர்வு என்பது தனிமனிதன் அடையவேண்டிய நெறி என்றும்கூட்டு வழிபாடு என்பது சமயத்தைச் சார்ந்த மக்கள் தங்களுக்குள் சகிப்புத் தன்மையுடனும்பொறுமையுடனும் நடந்து கொள்ளவேண்டிய பக்குவத்தைக் கொடுக்கக்கூடியது என்றும் தரம்பிரித்துக் காட்டினார்கள்.

சினமலி அறுபகை மிகுபொறி
சிதைதரு வகைவளி நிறுவிய
 மனன் உணர்வொடு மலர்மிசை
எழுதரு பொருள் நியதமும் உணர்பவர்
 தனது எழில் உருவது கொடு அடை
     திருபரன் உறைவது நகர்மதின்
 கன மருவிய சிவபுரம் நினைபவர்
  கலைமகள் தர நிகழ்வரே                                                                            
                                   
(
திருமுறை 1)

     பொறிவாயில் ஐந்து அவித்தலும், நெறி நிற்றலும் துறவு வாழ்க்கைக்கு மட்டும் உரிய நெறி அல்ல. சிதை தருவளி நிறுவுதல் என்பது மூச்சுக்காற்றை வாசிக்காற்றாக மாற்றும் ஒரு பயிற்சியாகும். சாதாரண மூச்சு வாசியாக மாறும்போது மன ஒருமைப்பாடு மட்டுமல்லாது உடலும்உணர்வும் ஒருமைப்பாடு அடையும் எனத் தானும் அனுபவித்து நம்மையும் அனுபவிக்கச் செய்கின்றார்.
     ஐந்து பொறிகளும் தனது இயல்பில் செல்லும் இயல்புடையது.  விலங்குகளையும், மனிதனையும் பிரித்துக் காட்டுவது மனஉணர்வு மட்டுமேகண்ட இடத்தில்; மல ஜலம் கழிப்பதும், புணர்ச்சி செய்வதும், தீனி மேய்வதும் விலங்கியல் இயல்பு. இந்த இடத்தில் இன்னார் முன்னிலையில் இதைச்  செய்யலாம் என்றோ, இதைச் செய்யக்கூடாது என்றோ அவற்றிற்கு அறியும் அறிவும் இல்லை. யாரும் அவற்றை அவ்விலங்குகளுக்குக் கற்றுத்தரவும் இயலாது. அவ்வாழ்க்கை நாமும் வாழக்கூடாது.

     இறைவழிபாட்டை வெற்றுச்சடங்குகள் மூலமாகக் கேலிக்கூத்தாக்கி விடாமல் மனன் உணர்வோடு மலர்மிசை எழுதரு பொருள் நியதமும் உணர்பவர் உணர்வுக்கு இறைவன் துணையாக நிற்கின்றான். இறைவழிபாடு என்பது அறுபகையையும், மிகுபொறிகளையும் அடக்கி ஆளத் தெரியும் அளவிற்கு ஒரு மனிதனைப் பக்குவப்படுத்த வேண்டும் என்கின்றார் ஞானசம்பந்தர்.

     அடுத்தவர்கள் பொருளைக் கவர்ந்துவிட்டு, கவர்ந்து விட்டோம் என்னும் எண்ணம் கூட இல்லாமல் இருப்பது விலங்கின் இயல்பு. அதை மாற்றவேண்டுமானால் காமம், கோபம், லோபம், மோகம், மதம் மாற்சரியம் என்னும் குற்றங்களைக் களையவேண்டும் என அறிவுறுத்துகின்றார் ஞானசம்பந்தர்.

     இருபது, இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுகளில் திருக்கோவில் வழிபாடு மிகவும் அதிகரித்துவிட்டதுதுறவு என்பது வெளி வேடமாகிவிட்டதுஎதையும் துறக்காமலேயே, வெளி வேடங்களாலேயே ஒருவன் துறவியாகி விடமுடியும் என்பது இன்று நமக்குத் தெரிந்த துறவு என்பதைத் தனது உணர்வுமூலம் உணர்ந்து கொண்டார் ஞானசம்பந்தர்.

சினமலி அறுபகை மிகுபொறி சிதைதரு வகைவளி நிறுவிய என்று எந்த உணர்வுகளையும் களைய விரும்பவில்லை நம் அன்பர்கள். மிகு பொறிகள் சிதைப்பதையும் அரிதாரம் பூசி மறைத்து விடுகிறார்கள்.

வகைவளி நிறுவிய வளியான காற்றை வகைதெரிந்து பிரித்து ஆளும் பயிற்சி பெற்ற யோகிகளால்தான் அறுபகை அறக்கூடிய வகை துறைகளைக் காட்ட முடியும்.

என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
 என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
 என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது
என்னையிட்டு என்னை உசாவுகின்றானே                                                                              (திருமந்திரம்)

     இறைவனை அடைந்த அடியவர்கள் தன்னையும் உணர்ந்து, தனது தலைவனையும் உணர்ந்து அனுபவித்தார்கள். அவர்கள் அனுபவித்த உணர்வு நிலையினை நமக்கும் அனுபவிக்கக் கொடுத்தார்கள்தாங்கள் நரகமே புகுவதாக இருந்தாலும், தங்களைச் சார்ந்த அடியவர்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தார்கள்.
     இன்று குரு என்னும் பெயரால் தானும்தன் குடும்பமும் வாழ்வதற்குத் தேவையான பொருட்களையும்பொருளாதாரத்தையும் சீடர்களிடம் இருந்து பறித்துக் கொள்வதும், வசூலித்துக் கொள்வதுமான சூழ்நிலைதான் உள்ளது.

இரக்கின்றோர்களே எனினும் அவர்கள்பால்
பறிக்கின்றதே பொருள்                                                                                       (அருட்பா)


     எனப் பறிக்கும் குருநாதர்களையும் பார்க்கின்றார் ஞானசம்பந்தர்.  எங்கே தொண்டும், பக்தியும்,பணிவும் பரப்பப்பட வேண்டுமோ அங்கே பணமும், நான்  எனது என்னும் முனைப்பும் தலைதூக்கி நிற்கின்றதுமக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பொருள் பறிக்கும் கூட்டம் அதிகமாகிவிட்டது.
     அறுபகைக் குற்றம் நீங்கிய குருநாதர்களே தங்களது அடியவா்களைக் காத்துக் கொள்ள முடியும்.

19 May 2018

நடமாடும் நம்பா்


நடமாடும் நம்பா்

மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாய் நீராடியவர் திருநாவுக்கரசர். அவர் ஒரு காலகட்டத்தில் கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்? என்கின்றார். தொண்டு நெறியையும்,  அன்பு நெறியையும் புறக்கணித்து விட்டு நாம் கங்கையிலும், காவிரியிலும் குளித்தால் இறைவன் நமக்கு அருள் செய்யமாட்டான் என்று தீர்மானமாகக் கூறுகின்றார். நாம் ஒரு நோன்பு இருப்பதாக வைத்துக் கொண்டு அதன்மூலம் பிறர் மனத்தையும் உணர்வையும் புண்படுத்தும் பழக்கம் வளர்ந்துவரும் சூழ்நிலையில் யார் மனத்தையும் நோகச் செய்யாத நோன்புதான் இறைவழிபாடு என்னும் புதிய கோட்பாட்டைப் படைக்கின்றார்


     திருநாவுக்கரசர் சைவத்தில் இருந்தாரா? சமணத்தில் இருந்தாரா?; என்பது கேள்வி அல்ல.  அவர் செய்த தொண்டு நெறி என்ன?  என்பதைத்தான் இறைவன் பார்க்கின்றான். தனக்குக் கிடைத்த அனைத்துச் செல்வத்தையும் பயன்படுத்தி  குளம் வெட்டினார்;, மரம் வளர்த்தார்;, அன்னதானம் செய்தார். தனக்கு என்று எதையும் வைத்துக் கொள்ளவில்லை


படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
 நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
 நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
  படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே"                                                                                     (திருமந்திரம்)

     என்பதனை உணர்ந்து தனது சொத்துக்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கினார். தன்னுடைய குழந்தை தனது சொத்தை நாட்டுடைமையாக்கி விட்டான்.  அக்குழந்தை பசியால் இருக்கும்போது


பசித்திடு தோறும் என்பால் அணைந்து அருளால்
வசித்து அமுது அருள்புரி வாய்மை நல்தாயே"                                                                                                                                       (அருட்பா)


     பசிநீக்க வல்ல பரம்பொருள் தாயினும் சாலப்பரிந்து வந்து அமுது அளிக்க வருகின்றார். உலகமக்கள் நன்மைக்காகத் திருநாவுக்கரசர் குளம் வெட்டினார்.  அதனால் திருநாவுக்கரசர் நீர் அருந்த இறைவனே குளம் அமைத்தான். இறைவனுக்காகவும், இறைவடிவங்களான உயிர்க் கூட்டத்திற்காகவும் நாம் தன்னலம் கருதாது செய்யும் எந்தச்செயலும் பலமடங்கு ஆற்றலுடன் நமக்குத் திருப்பித் தரப்படும் இதுதான் விதி. ஒவ்வொரு செயலுக்கும் பக்கவிளைவும், பின்விளைவும் உண்டு. திருநாவுக்கரசர் இதையெல்லாம் எதிர்பார்;த்து எந்தப் பணியும் செய்யவில்லை


     ஆழம் அதிகரிப்பதற்குத் தகுந்தாற்போல் அழுத்தமும் அதிகரிக்கும் என்பது  பாஸ்கல் விதி.  திருநாவுக்கரசரின் அன்பின் ஆழம் கங்கு கரை காணாத கடல் போன்றது. இறைவனது கருணையும் ஓங்கி உலகளந்தது. அதனால் அழுத்தமும் அதிகமாக இருந்தது.


காவும் குளமும் முன் சமைத்துக் காட்டி வழிபோங் கருத்தினால்
 மேவும் திருநீற்று அந்தணராய் விரும்பும் பொதிசோறும் கொண்டு
 நாவின் தனி மன்னவர்க்கு எதிரே நண்ணி இருந்தார் விண்ணின்மேல்
 தாவும் புள்ளும் மண் கிழிக்கும் தனி ஏனமும் காண்பரியவர்தாம்
                                     (பெரியபுராணம்)
                                          
கருடன் மேல் பறக்கும் திருமாலும் சென்றுணராத் திருவடியும் , அன்னமாய்ப் பறந்தும் உணர முடியாத திருமுடியும் திருப்பைஞ்ஞீலியில் சோலையும், குளமும் அமைத்து நிற்பதை உணரவில்லை என்பதனை விண்ணின்மேல் தாவும் புள்ளும், மண் கிழிக்கும் தனி ஏனமும் காண்பரியவர்தாம் என்றார் நாவரசர்.

  
காணவேண்டும் என்று ஒரு சொட்டுக் கண்ணீர்விட்டு உருகியிருந்தால் போதுமே! நீ அடிமுடி காட்டி இருப்பாயே!! அதைவிட்டுவிட்டு பிரம்மாவும், விஷ்ணுவும் நாங்கள் கண்டுவிடுவோம் என்னும் தன்முனைப்பில் சென்று சோர்ந்து விட்டார்களே. தேவர்கோ அறியாத தேவதேவன்; மூவர்கோவாய் நின்ற முதல் மூர்த்தி; தன் அடியவனுக்குப் பொதி சோறு சுமந்துகொண்டு, சோலை அமைத்து , குளமும் அமைத்து வைத்துக்கொண்டு காத்திருக்கின்றதே


     அரசியல் தலைவர்களுக்கும், அரங்குகளின் தலைவர்களுக்கும் நாம் எவ்வளவு செயற்கையான விழா மேடைகளும், மண்டபங்களும், மாட மாளிகைகளும் கோடிக்கணக்கில் செலவு செய்து அமைக்கின்றோமே! அவர்கள்; தனது தொண்டனுக்காக என்ன உதவி செய்கிறார்கள்? ஆனால் நமது தலைவன் தன் தொண்டனுக்கு ஒரு மண்டபம் அமைத்ததோடு, காவும் , குளமும் அமைத்துக் காத்துள்ளானே எத்தனை பரிவு!