23 September 2019

The Doctor who cures any disease - தீரா நோய் தீர்க்க வல்லான்



உயிர் அதிசயம்


     ஒன்பது வாசல் அமைந்துள்ள இந்த உடலில் உயிர் தங்கியுள்ள தொழில் நுட்பமும் , ஒவ்வொரு இயங்கு தசைகளும் ,இயக்கு தசைகளும் செயல்படும் விதமும் சித்தம் அறியாதபடி சித்தத்துள் நின்றிலங்கும் திவ்ய தோஜோமய பரம்பொருளின் அருள்திறமும் எத்தனை எத்தனை யுகங்கள் ஆனாலும் புரியாத ஒரு புதிர்.

  
அந்த அதிசயத்திற்குள் ஓர் அதிசயமான மெய்யுணர்வு பெறுதல் என்பது இறைவனால் அருளக்கூடிய ஒரு அருட்பிரசாதம். இதையெல்லாம் முதலில் நம்மால் புரிந்துகொள்ள இயலாது. அதனால் இறையடியவர்களை இறைவன் அனுப்பி, அவர்கள் மூலமாக சில அற்புதங்களை நடத்துகின்றான்அதன் வழியாக நாம் அவனையும் அவனது அருள் உணர்வையும் புரிந்து கொள்ளவேண்டும் என இறைவன் விரும்புகின்றான்அதனால் திருஞானசம்பந்தரை இவ்வுலகிற்கு அனுப்பி அவரை மையமாகக்கொண்டு சில அற்புதத் திருவிளையாடல் செய்கின்றான்.

தீராத நோய் தீர்த்தல்



     திருப்பாச்சிலாச்சிராமத்தில் கொல்லிமழவன் என்னும் சிவபக்தர் வசித்து வந்தார். அவரது மகளுக்கு முயலகன் என்னும் திருகுவாதநோய் வந்தது.  எத்தனையோ விதமான மருத்துவங்கள் செய்தும் குணம் தரவில்லை.  தான் சரண் அடைந்துள்ள மூலமுதல்வன் திருவடியினைத் துணையாகப் பற்றினார் கொல்லிமழவன். 
     மந்திரமும், தந்திரமும், மருந்துமான பரம்பொருளே தன்னையும்தன் மகளையும் உய்வடையச் செய்யும் பேராற்றல் என்பதனை உணர்ந்த கொல்லி மழவன் திருப்பாச்சிலாச்சிராமத்துத் திருக்கோவில் சென்று தன் மகளை சிவன் தாளில் ஒப்புக்கொடுத்தார்.


     திருஞானசம்பந்தர் தனது யாத்திரையில் ,திருப்பாச்சிலாச்சிராமம் வருகின்றார்சிவன் கோவில் வரும் வழியில் கொல்லிமழவன் ஞானசம்பந்தரை பூரணகும்பம் வைத்தும், வழிநெடுகிலும் மா, வாழை,கமுகு இவற்றால் அலங்காரம் செய்தும், பலவகையான சிறப்புகள் செய்தும் வரவேற்கின்றார். சிவன் கோவில் வந்த ஞானசம்பந்தர் கொல்லிமழவன் மகளைப் பார்க்கின்றார். அவருக்கு உற்றநோய் பற்றி ஞானசம்பந்தரிடம் விரிவாக எடுத்துரைத்தார் கொல்லி மழவன். தனது மகளின் நோய் தீர்க்கவேண்டி வைத்தியநாதனான சிவனைச் சரண் அடைந்துள்ளேன் என்றார். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட ஞானசம்பந்தர் இறைவன் தாள் பணிந்து வேண்டினார்.

     சந்திரன் செய்த பாவத்தை எல்லாம் பொசுக்கி அவனைச் சடையில் சூட்டியுள்ளார். உலகத்து உயிர்கள் எல்லாம் உய்வடைய வேண்டும் என்று கண்டத்தில் நஞ்சைத் தேக்கிய சிவனுக்கு, இந்தப் பெண்ணின் வினைப்பயனைப் பொசுக்கி இந்த ஓர் உயிரை வாழவைக்க முடியாதா?  உலகுயிர்களை எல்லாம் உய்விக்க மணிவளர் கண்டராக விளங்கும் இறைவனுக்கு, ஒரு பெண்மணியின் உடல்பிணி தீர்க்கமுடியாதா? என்னும் பொருள்பட ஞானசம்பந்தர் பாடவும் இறையருள் கருணையால் கொல்லிமழவன் மகளின் நோய் தீர்ந்தது.  தந்தையும் மகளும் திருஞானசம்பந்தர் திருவடிகளில் விழுந்து வணங்கினர்.  எல்லாம் வல்ல மூல முதல்வன் செய்த கருணை என்பதனை மக்கள் புரிந்து கொள்ளும்படியாகப் பதிகங்கள் பாடினார்.


ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
 சோதிக்க வேண்டா சுடர்விட்டுளன் எங்கள் சோதி
 மாதுக்கம் நீங்கலுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
 சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே
                                                                                                                          (
திருமுறை 3)


     நமக்கு வந்துள்ளது மாதுக்கம் (மிகப்பெரிய துக்கம்). அது நீங்கவேண்டுமானால் சுடர்விட்டுள்ள சோதியை மனம் பற்றி வாழுங்கள். முயலகன் நோய் உடலைப் பற்றியதாக இருந்தாலும், மனத்தைப் பற்றியதாக இருந்தாலும் அதிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும்.


     நமக்கு ஒரு சந்தேகம் வரும். நோய் தீர்க்கும் மருத்துவமனைகள் பெருகிவிட்ட இக்காலத்தில் நாம் இறைவனை நாடியே நோய் தீர்த்துக் கொள்ளலாமே. பிறகு எதற்கு மருந்துகள், மருத்துவர்கள், மருத்துவமனைகள் என்று சிந்திக்கத் தோன்றும். பாம்பு கடித்த ஒருவனுக்குத் தன்னைப் பாம்பின் விஷம் எதுவும் செய்யாது என்னும் உறுதிப்பாடு இருக்குமானால், பாம்பின் விஷம் அவனைப் பாதிக்காது.  அதுபோல் நோய்வாய்ப்பட்ட ஒருவன் தான் இறையருள் துணையால் பிழைத்து விடுவோம் என்னும் நம்பிக்கையும், துணிவும் இருக்குமானால் பவரோக வைத்தியநாதனே மருந்தாகவும், மருத்துவனாகவும் நின்று நோய் களைவான்.


வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
 மீளாக் காதல் நோயாளன் போல் .....

                                      
                                                                    (
குலசேகர ஆழ்வார்)

     என்று ஆழ்வார் பாடுவதுபோல் வாளால் அறுத்தாலும் ,சுட்டாலும் ,மருத்துவன் பால் கொண்டுள்ள நம்பிக்கையை நாம் இறைவன் பால் செலுத்தினால் உறுதியாக இறைவன் பிறவி நோயையே வேரறுப்பான்.


No comments:

Post a Comment