12 February 2020

Karma Theory - கடவுள் நம்மை சோதிக்கிறாரா?

கடவுள் நம்மை சோதிக்கிறாரா?





நம்மில் பலரும, “ கடவுள் என்னை சோதித்து விட்டார், தாங்கவொண்ணா துன்பத்தைக் கொடுத்து விட்டார்”  என புலம்புகின்றோம். ஆனால் கடவுள் வெறும் சாட்சியாகவே உள்ளார் என்பதே நிதர்சனமான உண்மை.


அப்படியெனில் கடவுளின் வேலை என்ன?  அனைத்து அண்டங்களையும் படைத்து, ( தனு, கரணம், புவனம், போகம், போக்கியங்களை) நம்மை அனுபவித்து வருமாறு அனுப்பியுள்ளார்.  எதை அனுபவிப்பது? அவரவர் செய்த கரும வினையின் அடிப்படையில் அவரவர் அனுபவங்கள் மாறுபடுகின்றன.


கடவுள் பெருங்கருணைப் பேராளன். அவர் உயிர்களின் மேல் உள்ள கருணையினால், இந்த உடலைக் கொடுத்து, உயிர்கள் தங்க ஒரு பூமியைப் படைத்து, வசிக்க வீடு மற்றும் இதர போக போக்கியங்களை அருளிச் செய்துள்ளார்.  கடவுள் நமக்கு எந்த விதமான சோதனையையும் வைப்பதில்லை, தண்டணையும் கொடுப்பதில்லை.

“அவனால் , அவளால் நான் துயரப்படுகின்றேன். அவர்கள் எனக்கு செய்வினை  வைத்து விட்டனர்”  எனக் குறை கூறுவது நம் வினையை மென்மேலும் பெருக்கும்.


இதனையே அருளாளர்கள்

தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
                                                           
-      புறநானூறு



பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

-       திருக்குறள்


“இந்த ஊன் எடுத்த பின் செய்த தீவினை யாது ஒன்றும் இல்லை
பிறப்பதற்கு முன் செய்த தீவினையோ இங்ஙன் வந்து மூண்டதுவே”

-      பட்டினத்தார்


என வலியுறுத்தி உள்ளனர்.

எனவே இதைக் கருத்தில் கொண்டு , நம் மனதை செம்மைப்படுத்தி , அனைத்து மன. உடல் உளச்சல்களையும் தாங்கும் மனப் பக்குவத்தைத் தருமாறு ஞானத் தாயை சரணடைவோமாக!   அந்த அருட்சக்தி ,நமது மாயா மலங்களைத் தனது அருட்புனலால் சுத்திகரிப்பாள்.