28 December 2018

Various forms of Deeksha - தீட்சைகள் பலவிதம்


தீட்சைகள் பலவிதம்



     ஸ்பரிச தீட்சை என்பது ஒருவகை. நமது உடம்பினுள் நரம்பு மண்டலம் உள்ளது.  அந்த நரம்பு மண்டலத்தில் எந்த எந்த இடத்தில் உள்ள நரம்புகளை இயக்கினால் நமது உடலும் , மனமும், உணர்வுகளும் நிலையான பேரின்பத்தை அடையும் என்பதை அனுபவத்தில் உணர்ந்த மகான்கள், அந்த அந்த இடங்களைத் தொட்டுக் காட்டிப் பயிற்சி அளிப்பார்கள்.  இதற்கு ஸ்பரிச தீட்சை என்று பெயர். 

     கோழி தனது முட்டையை அடைக்காத்து தனது பாதுகாப்பில் வைத்துச் சூடேற்றிய பின்னர் உரிய பக்குவமும், வளர்ச்சியும் பெற்றபிறகு முட்டையைத் தனது அலகால் கொத்தி உடைத்துப் பூரண கோழிக் குஞ்சாக வெளிவரச் செய்வதை இதற்கு ஒப்பிடலாம் இது ஒருவகை தீட்சை. சீடன் முழுமையான பரிணாம வளர்ச்சி பெறும்வரை தனது பாதுகாப்பில் வைத்திருந்து அவனைத் தொட்டு ஆசி கூறி முழுமைப்படுத்துவது இம்முறையில் அடங்கும்.


நயன தீட்சை



     மீன் தனது முட்டையை கரை ஓரங்களில் உள்ள இலை, தழை செடிகள் மீது இட்டுவிடும். பிறகு கடைக்கண்ணால் பார்த்தே குஞ்சு பொரித்துவிடும்.  கடைக்கண்ணால் பார்த்துப் பார்த்து அந்த குஞ்சுகளுக்கு வெளியிலிருந்து எந்தத் தீங்கும் வரவிடாமல் பாதுகாக்கவும் செய்யும். தாய்மீன் முன்னால் நீந்திச் செல்லும்.  பின்னால் வரும் தனது குஞ்சுகளைத் தனது கண் பார்வையாலேயே வழி நடத்தி முழு மீனாக்கிவிடும். இதனை நயன தீட்சை என்று சொல்வார்கள். அன்னை மீனாட்சி தனது குழந்தைகளை எல்லாம் தனது பார்வையாலேயே வழிநடத்துவதால் (மீன் அட்சம்) கயல்விழியாள் என்று கூறுவார்கள்.


மானச தீட்சை




மானச தீட்சை என்று ஒரு தீட்சை கூறுவார்கள். திமிங்கலம், ஆமை போன்ற கடல்வாழ் உயிரினங்கள் கரையில் முட்டை போட்டுவிட்டுப் பிறகு அந்த முட்டையையே நினைத்து தனது எண்ண அலைகளால் அந்த முட்டையினைப் பொரித்துவிடும். அதுபோல் ஒரு குருநாதர் நினைத்தால் தனது எண்ண அலைகளாலும், தான் பெற்ற பேரண்ட ஆற்றலின் புனிதத் தன்மையாலும் தனது சீடன் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் தன் வயப்படுத்தி தனது கருணையையும், அருள் ஆசியையும் அளித்துவிடுவார்.

   
ஸ்ரீ ஸ்ரீ யுக்தேஸ்வரர் இப்படி எல்லா வகையிலும் தனது சீடனை முழுமைப் படுத்தினார்.  ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர் ஒரு யோகியின் சுயசரிதை என்னும் புத்தகம் எழுதியுள்ளார். தனக்கும் தன் குருவிற்கும் இடையில் நிலவிய புனிதமான அன்பைப் பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார். உலகம் முழுவதும் அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகம் என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறது ஒரு யோகியின் சுயசரிதை.  அதில் ஒரு இடத்திலாவது சீடர் தனது பெருமை எதையும் கூறவில்லை.  குருநாதர் தன்னை எப்படி எல்லாம் அடித்து அடித்து அக்காரம் தீற்றி அற்புதம்  செய்தார் என்று தனது குருநாதரின் பெருமை பற்றியே புத்தகம் முழுவதும் எடுத்துச் சொல்கிறார்.  

     குருவருளும் திருவருளும் கூட்டுவித்தால் இந்த அருள்நிலையை உணரலாம்.

    

 


17 December 2018

How far The Almighty is from us ? - கூப்பிடு தூரம் இறைவன் இருப்பிடம்


கூப்பிடு தூரம் இறைவன் இருப்பிடம்



     இறைவனை எப்படி அறிவது என்று நாடும் நகரமும் நல்திருக்கோவிலும் சென்று வணங்கியும் இறை அனுபவத்தை உணரமுடியாமல் ,நாத்திக வாதியாகவும் இல்லாமல்,ஆத்திகவாதியாகவும் இல்லாமல் இரண்டும் கெட்டான் வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இறையடியவர்கள் இறைவன் இருப்பிடம் கூப்பிடுதூரம் என்று வரையறை செய்து காட்டுகின்றார்கள்


     மகாபாரதத்தில் ஒரு காட்சி. துகில் உறியும் காட்சியில் அச்சுதா, அனந்தா என்று இரு கைகளையும் தலைமேல் கூப்பி அஞ்சலி செய்கிறாள் திரௌபதை.  இறைவன் சேலை அவதாரம் என்னும் ஒரு அவதாரம் எடுத்து திரௌபதிக்கு அபயம் கொடுத்தான்.  கூப்பிடும் தூரத்தில் இருந்துதானே திரௌபதிக்கு அருளளித்தான் ஸ்ரீகிருஷ்ணன்.


     கஜேந்திர மோட்சத்தில் "ஆதிமூலமே" என்று யானை அபயம் கேட்டது. கூப்பிடும் தூரத்தில் இறைவன் இருந்ததால்தானே கஜேந்திரனுக்கு அபயம் அளிக்கமுடிந்தது.

  
மூன்று வயதே நிரம்பிய அந்தக்குழந்தை உணர்வு மயமாகி முன்னை உணர்வு தலைப்பட தான் பிரிந்திருந்த தனது தலைவனோடு இணையவேண்டும் என்னும் மெய்ஞ்ஞானம் மேலோங்க அம்மே அப்பா என்றழைத்தது


     நண்பர்கள் சேர்ந்து சுற்றுலா போகத் திட்டமிட்டனர். தங்களது திட்டப்படி ஒவ்வொரு நண்பராக அழைத்துக் கொண்டே வந்தனர். ஒரு நண்பன் வீட்டு வாசலில் வந்து நின்றதும் அவன் பெயரைச் சொல்லி அழைத்தனர். காது கேட்கவில்லை நண்பனுக்கு. உடனே இன்னும் கொஞ்சம் குரலை உயர்த்திக் கூப்பிட்டனர்.  அப்போதும் காது கேட்கவில்லை. உரிய நேரத்தில் பேருந்தை தவறவிட்டு விடக்கூடாது என்று மிகவும் பரபரப்பாகக் கூப்பிட்டனர்.  இவர்களின் பரபரப்பான உணர்ச்சி பூர்வமான குரல் காதில் விழுந்ததும் நண்பன் பதறி அடித்து ஓடிவந்து கலந்துகொண்டான்.  நாம் அழைக்கும் உணர்வு அலைகளுக்குத் தகுந்தவாறு அழைப்பவர்களின் செயல்திறம் அமைவது உலகியல் காட்சி.


     அருளியலிலும் நம்மை உடையவனை நம்மைக் காத்து அருள்பவனைச் சரணம் புகுந்து உடையவனே நான் உன் உடையவன். நீதான் என்னை ஆண்டு அருள்புரியவேண்டும். நீ கண்டு கொண்டால்தான் நான் உன்னை நினைக்கமுடியும். உன் உணர்வினைப் பெறமுடியும் அதனால் என்னைக் கண்டுகொள் என்று உணர்வுப் பூர்வமாக வேண்டினால் இறைக்காட்சி நமக்குக் கிடைக்கும். நாம் அழைக்கும் உருக்கத்தைப் பொறுத்து இறைவன் நமக்குச் செவி சாய்ப்பான். பரபரப்புடனும், ஆழ்ந்த உணர்வுடனும் அழைக்கும்போது நண்பர்களே ஓடிவரும்போது,  இறைவன் நமக்கு ஓடிவராமல் இருப்பானா?



மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து
     உன் விரைஆர் கழற்கு, என்
 கைதான் தலைவைத்துக் கண்ணீர்
ததும்பி வெதும்பி உள்ளம்
 பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி
சய சய போற்றி என்னும்
 கைதான் நெகிழவிடேன் உடையாய்
என்னைக் கண்டு கொள்ளே  

                                             
                                                                              (
திருவாசகம்)



     நீ என்னைக் கண்டு கொண்டால்தான் நான் சிக்கெனப் பிடிப்பேன். நீ கண்டுகொள்ளவில்லை என்றால்,  என் கை நெகிழ்ந்து உன்னை விட்டுவிடுவேன். அதனால் உன் உடைமையை நீ கண்டுகொள் என்று பிரார்த்தனை செய்கின்றார் மாணிக்கவாசகர்.


12 December 2018

How to worship - தலையால் வணங்கு


தலையால் வணங்கு

சிலைதனால் முப்புரம் செற்றவன் சீரினார்
 மலைதனால் வல்லரக்கன் வலி வாட்டினான்
 சிலைதனார் புறவணிமல்கு காட்டுப்பள்ளி
  தலைதனால் வணங்கிடத் தவமதுஆகுமே
                                
                               
                                                      (
திருமுறை 3)
   

  
தனது புன்னகையால் முப்புரம் எரித்தவன் சிவபரம்பொருள். அதுபோல் அவனை அடையவேண்டும் என்னும் தவமுடையோர் வினைகளை எல்லாம் தனது புன்னகையால் எரித்து ஏன்று கொள்ளக்கூடியவன்.  ஆணவத்துடன் மலையைப் பெயர்த்துவிடலாம் என்று எண்ணிய இராவணேஸ்வரனின் ஆணவத்தைத் தணித்து,  அவனையும் சிவபக்தனாக்கிக் கொண்டவன்.  நாமும் ஆணவத்துடன் இறைவனை அடைந்துவிடுவோம் என்று எண்ணினால், நமது எண்ணம் இறைவனை அடைவது என்பதால் , அதையும் ஏற்றுக்கொண்டு தன்னையே தருபவன் சிவபரம்பொருள். திருக்காட்டுப்பள்ளி மேவிய இறைவனை வணங்கினால் அதுவே தவமாகும்.


தலையே நீ வணங்காய் தலைமாலை தலைக்கணிந்து
 தலையாலே பலிதரும் தலைவனைத்
 தலையே நீ வணங்காய்  
                              
                                   
(
திருமுறை 6)



     என்று தலையால் வணங்கினாலே தவமாகும் என்கின்றார். இருபதாம் நூற்றாண்டு இருபத்திஒன்றாம் நூற்றாண்டு மக்களைப் பார்க்கின்றார் ஞானசம்பந்தர்.  இவர்கள் இறைவனது திருக்கருணையை நினைத்து வணங்காவிட்டாலும் பரவாயில்லை ஏளனம் வேறு செய்வார்கள். அதையும் தாண்டி ஏதோ வணங்கலாம் என்று போகின்றவர்களும் கன்னத்தில் ஒரு கையால் தட்டிவிட்டு இறைவனுக்கு தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே ஒரு முத்தம் கொடுத்துச் செல்வார்கள்.  அதனால் நீங்கள் தனியாகத் தவம் செய்யவேண்டாம். திருக்கோவில் வளாத்திற்குள் நுழையும்போது தலையால் வணங்கினால் அதுவே ஒரு தவம்தான். 


கலையினார் புறவில்தேன் கமழ்தரு கானப்பேர்
  தலையினால்  வணங்குவார் தவமுடையார்களே      


                       
                                (
திருமுறை 3)



     இறைவனைத் தலையினால் வணங்கினால் மட்டுமே தவமுடையவர்களாக ஆகும் பேறும் கிடைக்கும் என்கின்றார் ஞானசம்பந்தர்.