27 October 2018

Appar's Advice - மனித வளா்ச்சியின் உச்சம்


மனித வளா்ச்சியின் உச்சம்

இறைவனின் படைப்பில் எத்தனையோ வினோதங்கள் உள்ளன.  எண்ணூறு கோடி மக்களின் பெருவிரல் ரேகைகள் ஒன்றைப்போல் ஒன்று இருப்பதில்லை என்பதே இறைவனது படைப்பில்; அற்புதத்தில் எல்லாம் அற்புதம். ஓர் ஓவியனால் நூறு ஓவியத்தைக் கூட மாறுபட்ட அழகில் வடிக்க முடியாமல் தனது முத்திரையைப் பதித்துவிடுவான்.  ஆனால் எண்ணூறு கோடி மக்களையும் வேறுபடுத்திக் காட்டும் இறைவனின் திருவிளையாடல் அரியதிலும் அரிய ஒன்றாகும். உயிர்கள் தோறும் குணங்கள் வேறு என்பது பொதுவிதியாக உள்ளது.
வளர்ந்து
வரும் விஞ்ஞானம் புதிதாக எதையாவது படைக்கவேண்டும் என்று விரும்பியது. உதாரணமாக ஒரு மாமரத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு மரத்தில் நல்ல பருமனான மாங்காய் காய்க்கும். ஆனால் அதன் சுவை இனிமையாக இராது.  இன்னுமொரு மரத்தில் மாங்காய் பார்ப்பதற்கு நல்ல வடிவமைப்பையும் ,  நிறத்தையும் பெற்றிருக்கும். ஆனால் பருமனாகவோ, சுவையாகவோ இராது.  இன்னுமொரு மாமரம் நல்ல இனிய சுவை பொருந்திய காய்களைக் கொடுக்கும். ஆனால் வடிவமைப்பு, நிறம் மற்றும் பருமன் இருக்காது. விஞ்ஞான முறைப்படி நல்ல நிறம், சுவை, பருமன், திரட்சி, வடிவமைப்பு இவைகளைத் தரும் மரபணுக்களை மாங்காயிலிருந்து தனித்தனியாகப் பிரித்து எடுத்து எல்லாவற்றையும் ஒட்டி ஒட்டுவகைச் செடியாகச் செய்கிறார்கள். அந்த ஒட்டுச் செடியிலிருந்து எல்லா வகையிலும் சிறப்பான மாங்கனியினைப் பெறமுடிகின்றது.

     திருநாவுக்கரசர் வாழ்நாளின் பெரும்பகுதியை சமணத்தில் கழித்துவிட்டவர்.  சமணத்தலைவர்கள் சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக வாழ்ந்தது சமணத்தைச் சார்ந்த பிறகுதான் தெரிந்தது.  சிவநெறி என்றாலே அன்பு நெறி என்று இலக்கணம் வகுத்தவர்கள் நம்முன்னோர்கள்.


அன்பு  சிவம்  இரண்டென்பர் அறிவிலார் 
                                  
                        
                                               
(
திருமந்திரம்)

     அன்பு வேறு; சிவம் வேறு அல்ல. ஒவ்வொரு உயிரும் அன்பு மயமாகிவிட்டால், பிறகு அருள்மயமாகி இறைமயமாகிவிடலாம் என்பதுதான் சிவநெறி காட்டும் உண்மை. அன்புநெறி, துறவுநெறி, ஞானநெறி, பக்திநெறி, வைராக்கியநெறி,   தொணடு நெறி அனைத்தினுடைய மரபுகளையும் இணைத்துக் குற்றம் குறை காணமுடியாத ஒரு ஞானப்பழமாக சைவ சமயத்திற்கு கிடைத்த ஒரு ஞானபானு திருநாவுக்கரசர். பணிவு என்றால், திருநாவுக்கரசர் மாதிரி ஒரு பணிவு உண்டா? என்று கேட்கும்படியான பணிவு. தன்னைவிட வயதில் சிறிய ஞானசம்பந்தக் குழந்தைக்குப் பல்லக்கு தூக்கும் பணிவு. கல்வி என்றால் அனைத்துச் சிறப்புப் பாடத்திலும் பெற்றகல்வி. துறவு என்றால் இறைவனே தோன்றும் துணையாயும், தோன்றாத் துணையாயும் இருந்து நெஞ்சம் துறந்த துறவு.  ஞான, பக்தி, வைராக்கியம் என்றால் உடல் தேய்ந்து, நைந்து போனாலும்

ஆளும் நாயகன் கயிலையில் இருக்கக் கண்டு அல்லால்
  மாளும் உடல் கொண்டு மீளேன்           
                                      
                                                                                 (
பெரியபுராணம்)



     என்னும் ஞான, பக்தி, வைராக்கிய சீலம்; பூலோக மாந்தர்களால் அசைக்க முடியாத மன உறுதிப்பாடு. இவர்கள் என்ன? தேவலோக அரம்பையர்களாலும் அசைக்கமுடியாத துறவு.  பொன்னையும், மணியையும் கண்டு பேதலிக்காத மனம்; எந்தவிதமான முன் காப்பீடும் செய்யாமல், இன்றுவரை உழவாரப் பணி என்றால்,  அப்பர் உழவாரப் பணிதான் என்னும் தொண்டுநெறி. அவருக்காக இறைவன் நிகழ்த்திய அற்புதச் செயல்கள், அப்பூதி அடிகள் மகனுக்காக அப்பர் நடத்திய அற்புதச் செயல்கள் இத்தனை பெற்றும் செருக்கு என்பதோ, தருக்கித்திரிதல் என்பதோ இல்லாத மனத்துறவு. எத்தனை சொன்னாலும் திருநாவுக்கரசரை முழுமையாகச் சொல்லி விடமுடியாது. எல்லா விதமான மரபணுக்களையும் சேர்த்து ஒரு வடிவமைப்பு செய்த அடியவர்தான் திருநாவுக்கரசர்.

     அப்பர் தம் வாழ்நாளில் தன்முனைப்பு இன்றி யான் எனது அற்று இறைவன் திருவடிப்பேற்றை அடையவேண்டும் என்று விரும்பினார்.  இதுவரை சமணத்தில் இருந்த தனது பொறிகளையும், புலன்களையும் தூய்மை செய்யவேண்டும்.  ஒட்டுவகை தயாரிப்பதற்காக எப்படி மரபு அணுக்களைப் பிரித்து எடுத்து புதுவகையான சுவையுடன் கூடிய, புதிய உற்பத்தியை விஞ்ஞானிகள் படைக்கின்றார்களோ, அப்படியே தமது உடலையும், உயிரையும், உணர்வையும் புதியவகையில் ஆக்கி பேணவேண்டும் என்று விரும்பினார். சமணத்திலிருந்து சைவத்திற்கு வந்தவுடன் பாடிய பல பாடல்களில் சமணர்களை ஏதேனும் ஒருவகையில் சாடியுள்ளார் திருநாவுக்கரசர். அவர்கள் நாவுக்கரசருக்கு செய்த கொடுமைகளின் தாக்கம் அவர் மனத்தில் நின்று உறுத்தியது. அதன் விளைவாகச் சமணர்களின் வாழ்வியல் முறையினைச் சாடினார்.

     நம் இதயமாகிய ஊர்தியில் இறைவன் ஏறினால், நாம் அகத்துறவு துறந்துவிடலாம். மாறாக நின்று உண்ணுதலோ, கண் அழல் ஓம்ப முடி பறித்தலோ, ஓரிடத்தில் தங்காமல் சுற்றிக் கொண்டிருத்தலோ துறவு அல்ல என்கின்றார் திருநாவுக்கரசர்.


இருந்து சொல்லுவன் சாற்றிச் சொல்லுவன்ஏதோ போகிற போக்கில் சொல்லிக்கொண்டு போகவில்லை. உங்கள் மனத்தில் படும்படியாகச் சொல்கின்றேன் என்கின்றார் நாவரசர்.

     துறவு வாழ்க்கை மேற்கொண்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய அருள் நெறியாகிய அன்பு நெறியினைக் கடைப்பிடிக்க வில்லையே சமணர்கள் என்னும் ஆற்றாமை அவருள் இருந்தது. ஒரு இடத்தில் இருந்து உணவு அருந்தினால் மனத்தில் பற்று வந்துவிடும் என அமணர்கள் நினைத்தார்கள். அதனால் நின்றுகொண்டே உண்டார்கள். துறவுநெறி கொண்டவர்கள் ஆடை இல்லாமல் வெற்று அரைச் சமணர்களாக வாழ்ந்தார்கள்.  தலையை மழிப்பதற்குப் பதிலாகக் கையினால் பிடிங்கிக் களைவர். அப்போது ஏற்படும் வலியினால் கண்கள் சிவந்துவிடும். ஆனாலும் அதைத்தாங்கிக் கொண்டு தலைமயிரைப் பிடுங்கி எறிவர்.

கண் அழலத் தலைபறித்துவாழும் சமணர்கள் இந்த வலியினைப் பொறுத்துக் கொள்வதில் காட்டிய பொறுமையினையும், சகிப்புத் தன்மையையும்; மனித உயிர்களிடம் காட்டவில்லையே என்று நினைத்தார். துறவு என்பது வெளி வேடத்தால் வருவது அல்ல.  இறைவன் கருணையால் பெறக்கூடியது என்னும் அறிவு திருநாவுக்கரசரின் ஆழ்மனத்தில் பதிந்தது. அதனால் இறைவனிடம் நீ துணையாக இருந்து என்னைத் துறக்கும்படியான கருணை செய் என்று வேண்டுகின்றார்.


     புதிய வடிவாக்கம் ஒன்று பெறவேண்டுமானால் தமது உடம்பும், மனமும் சிவமயமான, அன்புமயமான, அருள்மயமான மரபுஅணுக்களை மட்டும் தக்கவைத்துக் கொண்டு மற்றவற்றைப் புறந்தள்ள வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகின்றார்.  ஒரு இடத்தில் ஒரு பொருள் இருப்பதாக கொள்வோம்.  அந்தப் பொருளை எடுத்துவரவேண்டும் என்றால், முதலில் அதற்கான திட்டத்தை நம் மனம் வகுத்துவிடும். இந்த இடத்திலிருந்து இந்தப் பொருளை எடுத்து வரவேண்டும் என்று மனம் நினைத்தவுடன், கால்கள் அந்த இடத்திற்குச் செல்லவேண்டும்; கைகள் அந்தப் பொருளைப் பற்றி எடுக்கவேண்டும் அப்போதுதான் அப்பொருளை நாம் எடுக்கமுடியும். கால்களும், கைகளும் சென்று அப்பொருளைப் பற்றுவதற்கு முன்னால், மனம் அப்பொருளைப் பற்றுவதோடு அப்பொருளைக் கொண்டு நாம் என்ன செய்யவேண்டும் என்றும், என்ன செய்யக்கூடாது என்றும் தீர்மானித்துவிடும். மனத்தின் ஆற்றலையும் செயல்பாட்டையும் உணர்ந்த திருநாவுக்கரசர் தம் நெஞ்சத்தை அழைத்து நன்னெறிப் படுத்துகின்றார்.


பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில்
பரகதிக்குச் செல்வது ஒரு பரிசு வேண்டில்
 சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில்
சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சாவண்ணம்
 உற்றவரும் உறுதுணையும் நீயே என்றும்
உன்னை அல்லால் ஒருதெய்வம் உள்கேன் என்றும்
 புற்றரவக் கச்சார்ந்த புனிதா என்றும்
பொழிலஆரூரா என்றே போற்றா நில்லே
                                                                                                                      (
திருமுறை 6)


     மனித வளா்ச்சி இறைநிலை அனுபவம் வரை அழைத்துச் செல்லும் என்பதற்கு நாவரசா் வாழ்வு மிகச் சிறந்த சான்றாகும்.