20 October 2018

Appar- - அன்பெனும் குடில் புகும் அரசு


அன்பெனும் குடில் புகும் அரசு


சமுதாயச் சிந்தனையோடு கூடிய நெறிமுறைகளைப் புகட்டும் பெரிய ஞானாசிரியர் திருநாவுக்கரசர். காவிரியின் இருபக்கமுள்ள சிவத்தலங்களை எல்லாம் வழிபட்டு வருகிறார்.  திருப்பைஞ்ஞீலியை அடுத்து வரும்போது, நடந்த களைப்பு அதிகமாயிற்று. பசியும் தாகமும் அதிகரித்தது


     இயற்கைக் காட்சிகளுடன் கூடிய ஒரு மணிமேடை அமைத்து எதிர்பார்த்துள்ளான் இறைவன்!. நம் தலைவனின் தலைமைப் பண்புதான் என்னே! அவனிடம் சங்கநிதியும், பதுமநிதியும் என்ன சேவை செய்யவேண்டும் என்று காத்திருக்கின்றன.


     ஆயிரமாயிரம் சத்தர்களும், சத்திகளும், சித்தர்களும், சித்திகளும் நம்மை ஏவிப் பணிகொள்ளமாட்டானா? என்று காத்திருக்கின்றார்கள். ஒவ்வொரு திருக்கோவிலிலும் இறைவனுக்குத் தேர்த்திருவிழா எடுத்து தோரணம் கட்டி, வான வேடிக்கைகள் செய்து அடியவர்கள் ஆர்ப்பரிக்கஅறுசுவையுடன் கூடிய அன்னங்கள் வேத ஆகமப்படி படையல் செய்யக் காத்திருக்க, அந்தப் பரம்பொருள் அப்பருக்காகக் கட்டுச்சோறு எடுத்து வருவதுடன், காவும் சோலையும் அமைத்துத் தருகின்றது.  எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறு என்னே என்னே என்று நினைந்து நினைந்து நாவரசா் உருகுகின்றார்.

நான் பசித்த போதெல்லாம் தான் பசித்ததாகி         
 நல்ல திருஅமுது அளித்தே அல்லல் பசி தவிர்த்தே

                                           (அருட்பா)

திருநாவுக்கரசர் பசியோடு இருந்தபோது இறைவன், தான் பசித்ததாக நினைத்தான்.


 
ஈவரசர் எம்முடைய நாவரசர் சொல் பதிக
     இசைபரிமளிக்கும் பதம்
 எல்ஊரும் மணிமாட நல்லூரில் அப்பர் முடி
     இடைவைகி அருள் மென்பதம்
 இளைப்புறல் அறிந்து அன்பர் பொதிசோறு
  அருந்த முன் இருந்து பின் நடக்கும் பதம்        
                     
                                                                                                      (
அருட்பா)


     இறைவனது திருப்பாதம் நாவரசருக்காக எவ்வாறு வந்தது என்பதை தனது அனுபவத்தில் உணர்ந்து அனுபவித்துப் பாடுகின்றார் வள்ளல் பெருமானார்.

     இறைவன் அந்தணனாக வந்து சோலையில் இளைப்பாறி நீர் அருந்திச் செல்லும்படி வேண்டவும், எல்லாம் திருவருள் திட்டம் என்றுணர்ந்த நாவரசரும் அவ்வாறே செய்தார்.  நல்ல திரு அமுதுண்ணவும் பசி, சோர்வு, களைப்பு நீங்கப்பெற்றார்.


     தாய் பரிந்தூட்டும் உணவே ஊட்டச்சத்தாக அமையும்போது, கருவுற்ற நாள் முதலாக அல்லாமல் காலம் காலமாக தொடர்புள்ள சிவபரம்பொருள் பால் நினைந்தூட்டும் தாயாகப் பரிவு செய்யும் அந்த அன்பை என்னென்பது. 

அரசன்
இருப்பிடம் அரண்மனை.  ஆனால் சிவப்பேரரசன் அன்பா்கள் இதயமாம் குடிசை புகுகின்றான்.


No comments:

Post a Comment