14 July 2019

Appar's Social Responsibility - நாவரசரின் பொதுவுடைமை


நாவரசரின் பொதுவுடைமை



 இரப்பவர்க்கு ஈயவைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
 கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடுநரகங்கள் வைத்தார்
 பரப்புநீர்க் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
 அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே      


                                           (திருமுறை 5)

          
     உணவுப் பொருட்களை மறைத்து வைத்து அதிக விலைக்கு விற்பது என்பது ஏழாம் நூற்றாண்டிலும் இருந்தது போலும். திருவீழிமிழலை வரும்போது அங்குள்ள மக்கள் பஞ்சம் பட்டினியில் வாடுகின்றனர். திருஞானசம்பந்தரும்,  திருநாவுக்கரசரும் பசியால் வாடும் மக்களின் பசித்துயர் பொறுக்க இயலாமல் இறைவனைப் பிரார்த்திக்கின்றனர். கடுமையான பஞ்சம் வந்துவிட்டது. மக்கள் விவசாயத்தை நம்பி உயிர் வாழ்கின்றார்கள். மழைபொழிந்தவுடன் மக்களின் பசிப்பிணி மறைந்துவிட முடியாது. ஒரு மகசூல் விளைவதற்கான கால அளவு வரை மக்களின் பசிப்பிணியை அகற்றவேண்டும். இறைவனிடம் வேண்டிப் பொற்காசு பெறுகிறார்கள் திருநாவுக்கரசரும்  திருஞானசம்பந்தரும். அப்பொற்காசுக்கான பணத்தைக் கொண்டு அன்னதானப் பொருட்கள் வாங்கி அன்னம் பாலிக்கிறார்கள்.


     திருநாவுக்கரசர் மனம் மிகவும் நொந்து போகின்றது. பஞ்சம்  பட்டினி வந்தவுடன் பதுக்கல் பேர்வழிகள் உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்துக்கொண்டு அதிக விலைக்கு விற்கிறார்கள். பணம் படைத்தோர் அதிகவிலை கொடுத்து வாங்கிப் பயனடைந்து விடுகிறார்கள். எளியவர்கள் உண்ண உணவிற்கு வழியில்லாமல் துன்பமடைகிறார்கள்இதை நினைத்து தர்ம சிந்தனையுடன் கொடுப்பவர்களை பாராட்டுகின்றார். இறைவன் அவர்களுக்கு அருள் சுரங்கத்தைத் திறந்து விட்டிருக்கின்றான் என்கின்றார். பதுக்கல் பேர்வழிகளுக்கு நரகத்தைத்தான் வைத்துள்ளான் என்கின்றார்.


ஈபவர்க்கு அருளும் வைத்தார் கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடுநரகங்கள் வைத்தார் சுயநல நோக்கோடு  தான் மட்டுமே வாழவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு நரகம் இல்லை. கடு நரகங்கள் அடுக்கடுக்காய் அமைத்து வைத்துள்ளார் என்று கூறுகின்றார்.

  
அன்பு செய்தாவது , அஞ்சியாவது நமக்கும் மேலான ஒரு ஆற்றல் இருப்பதாக நினைத்தால், அதுவே நாம் உய்வதற்கான முதல் படி.