28 February 2019

Benefit of Selfless Service - கைத்தொண்டின் பயன்


கைத்தொண்டின் பயன்


     நாவுக்கரசரும் , ஞானசம்பந்தரும் திருவீழிமிழலையில் இருந்தபோது அவ்வூர் மக்கள் பசியால் மிகவும் நலிவுற்றனர்.  மழையில்லாமல் கடும் பஞ்சம் வாட்டியது. பயிர்த்தொழிலை நம்பிவாழும் மக்கள் படும் துயரைக்கண்டு அடியவர்கள் இருவரும் மிகவும் மனம் கலங்கினர்.

வானாகி நிலனாகி அனலுமாகி
மாருதமாய் இருசுடராய் நீருமாகி
 ஊனாகி உயிராகி உணர்வுமாகி
உலகங்கள் அனைத்துமாய் உலகுக்குஅப்பால்
 ஆனாத வடிவாகி நின்றார் செய்ய
அடிபரவி அன்றிரவு துயிலும்போது
 கானாடு கங்காளர் மிழலை மூதூர்
காதலித்தார் கனவில் அணைந்தருளிச் செய்வார்

                       
                     (
பெரியபுராணம்)



     பஞ்ச பூதங்களாகவும். அதற்கு அப்பாலாகவும் உள்ளது பரம்பொருள். பரம்பொருள் நினைத்தால் மழை பொழிவிக்க முடியும். இயற்கைச் சூழலையே மாற்றியமைக்க முடியும். அதனால் அடியவர் பொருட்டாக சில திருவிளையாடல்கள் நடத்த திருவுள்ளம் கொண்டார்.  இயற்கை மாறுதல்களால் சிவனடியாருக்கு எந்தப் பாதிப்பும் வந்து சேராது என்றும்; ஆனாலும் உங்களையே சரண் அடைந்துள்ள மக்கள் பசிப்பிணி தீரும் பொருட்டு கோவிலின் (கிழக்கு  ,மேற்கு) இரண்டு புறமுள்ள பலி பீடங்களில் படிக்காசு வைக்கின்றோம். அதனைக் கொண்டு பசிப்பிணி ஆற்றுவீர் என்று மொழிந்தார்அவ்வாறே மறுநாள் காலையில் திருக்கோவில் சென்று வணங்கியபோது கோபுரவாசல் பலிபீடத்தில் படிக்காசு இருப்பதைக் கண்டு வணங்கி அதை எடுத்துச் சென்றார். பின் அன்னம்பாலிப்பு நடத்துவதாகப் பறை அறைவித்தார்கள்இறைவன் அருளிய படிக்காசினைக் கொண்டு இரு அடியவர்களும் தமது பகுதியில் உள்ள மக்களுக்கு அன்னம் பாலித்தார்கள்.
     நாவுக்கரசர் மடத்தில் உணவு வகைகள் சீக்கிரம் பரிமாறப்பட்டது.  அடியவர்கள் அனைவரும் உச்சிப் பொழுதிற்குள் உணவருந்தி செல்கின்றனர்.  இங்கு அடியவர்கள் உணவருந்தக் கால தாமதம் ஏன்? என்று ஞானசம்பந்தர் வினவினார். திருநாவுக்கரசர் பெற்ற பொன்னிற்கு வட்டம் கேட்பது இல்லை. நாங்கள் எடுத்துச் செல்லும் காசிற்கு வட்டம் தந்து பொருள் பெற்றுவரக் காலதாமதமாகின்றது என்று அன்பர்கள் கூறக்கேட்ட ஞானசம்பந்தர் இறைவனிடமே சென்று வேண்டுதல் செய்வோம் என எண்ணுகின்றார்.


     இதுபற்றிய சிந்தனையில் இருந்த ஞானசம்பந்தரின் மனத்தில் இறைவனது அளப்பெருங் கருணைத்திறம் பதிகின்றது. இறைவன் பேதமில்லாதவன்;  தன்னுடைய காசிற்கு மட்டும் வட்டம் கேட்பதன் காரணம் என்ன? என்று சிந்திக்கின்றார்.

புலர்வதன்முன் அலகிட்டும் மெழுகிட்டும்
 பூமாலை புனைந்து ஏத்தியும்
                                திருமுறை 6 )


     தொண்டுசெய்ததால்  ,நாவரசருக்குக் கிடைத்த காசு வட்டம் கேட்காமல் செல்லுபடியாயிற்று என்பதனைப் புரிந்துகொண்டார் ஞானசம்பந்தர். கருணையே வடிவான இறைவனது பாதம் பணிந்து நாமும் வாசி தீர்ந்த காசு பெறுவோம் என்று தீர்மானித்தார். அதன்படித் திருக்கோவில் சென்று வாசி தீர்த்தருளும்படி வேண்டுதல் செய்கின்றார்.
வாசி தீரவே காசு நல்குவீர்
 மாசின் மிழலையீர் ஏசல் இல்லையே
                                                                                                                    
திருமுறை 1 )



     இறைவன் வாசியில்லாத காசினை அருளிச்செய்தார். தொண்டர்களும் அதைப்பெற்றுச் சென்று விரைவில் பொருட்கள் வாங்கி அன்னம் பாலித்தார்கள்.

     கைத்தொண்டு செய்தால் நாமும் உய்வடையலாம் என்னும் பாடத்தை திருவீழிமிழலையில் இறைவன் செய்த திருவிளையாடல் மூலமாக அடியவர்கள் புரிந்துகொண்டனர். பல பிறவிகளின் வினைப்பயனைக் கழித்துவிடலாம் என்னும் நம்பிக்கை அடியவர்கள் உள்ளத்தில் எழுந்தது.


     திருவீழிமிழலையில் இறைவன் திருவருளால் மழை வளம் பெருகியது.  நாடு செழித்தது.  அங்கிருந்து அடியவர்கள் மறைக்காடு சென்றனர்.

17 February 2019

The all-pervasive Almighty -நனவினும் , கனவினும் நண்பனே


நனவினும் , கனவினும் நண்பனே


திருவீழிமிழலையில் கீழக் கோபுரவாசல் அருகே உள்ள மடத்தில் ஞானசம்பந்தர் தங்கியிருந்தார். திருநாவுக்கரசர் மேற்குப் புறத்தே உள்ள மடத்தில் தங்கியிருந்தார். சீகாழியிலிருந்து வந்த அந்தணர்கள் ஞானசம்பந்தரை மீண்டும் சீகாழிக்கு வரும்படி அழைத்தனர். இன்று கழித்து நாளை வீழிப்பெருமான் அருள்பெற்றுச் செல்வோம்; என்று கூறினார் ஞானசம்பந்தர்.

     தோணியப்பர் அன்றிரவு கனவில் தோன்றி , திருவீழிமிழலையிலேயே சீகாழிக் காட்சியினைக் (தோணியப்பராக) கொடுப்போம் என்று கூறி அருளினார்.  ஆளுடை அரசும் , ஆளுடை அடிகளும் மறுநாள் திருக்கோவில் வலம் வந்து வணங்கினர். அப்போது திருவீழிமிழலையில் சீகாழிக் காட்சியினைக் கொடுத்து அருளினான் இறைவன்.


சடையார் புனல் உடையான் ஒரு சரிகோவணமுடையான்
 படையார் மழுவுடையான் பல பூதப்படை உடையான்
 மடமான் விழி உமை மாது இடமுடையான் எனை உடையான்
 விடையார் கொடி உடையானிடம் வீழிம்மிழலையே   

     
               
                                           (
திருமுறை 1)

 
     என்னை ஆளுடைய ஈசன் சீகாழியில் மட்டுமல்ல ,திருவீழிமிழலையிலும் உள்ளான் என்பதனை அனைவருக்கும் உணர்த்தினார் ஞானசம்பந்தர். பிறகு சீகாழி அன்பர்களை ஊர் திரும்பும்படியாக வேண்டிக்கொண்டு மீண்டும் திருவீழிமிழலையிலேயே வீற்றிருந்து அறப் பணிகளை மேற்கொண்டார்..

11 February 2019

Sail with mind - ஓடம் செல்லு முன் , மனமே நீ செல்


ஓடம் செல்லு முன், மனமே நீ செல்



மதுரையிலிருந்து பாண்டி நாட்டுத்தலங்கள் பலவும் கண்டு வணங்கிவிட்டு மீண்டும் சோழநாடு செல்கின்றார் ஞானசம்பந்தர்.  முள்ளிவாய்க்கரை என்னும் திருத்தலத்தை அடைந்து அங்கு தங்கினார். அங்கிருந்து பின்னர் திருக்கொள்ளம்பூதூர் என்னும் திருத்தலம் செல்லவேண்டும் என்று விரும்பினார்.


     இடையில் ஆற்று வெள்ளம் கரை கடந்து சென்றது.  ஞானசம்பந்தரின் அன்பு வெள்ளமும் கரை கடந்தது. ஓடக்காரர்களும்ää துடுப்பைச் செலுத்த இயலாமல் மிதப்பதாகக் கூறி ஓடத்தைக் கட்டி வைத்துவிட்டார்கள்.


     ஞானசம்பந்தர் சிவநாமத்தைச் சொல்லி வாழ்க்கை என்னும் ஓடத்தை ஓட்டி பிறவி என்னும் கடலைக் கடக்க வந்தவர். தான் மட்டும் கடந்துவிடாமல் தன்னைச் சார்ந்தவர்களையும் கடைத்தேற்ற வந்த தோணியப்பர் அவர். அதனால் ஓடத்தை அவிழ்ப்பதுபோல் நமது பிறவிக்கட்டையும் அவிழ்க்கின்றார்.    சிவனடியார்களைத் தோணியில் ஏற்றுகின்றார். பின் தானும் ஏறிக்கொண்டு தோணியைச் செலுத்துவதற்கான பாடலைப் பாடுகின்றார்.



கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்
 நட்டமாடிய நம்பனை உள்கச்
 செல்ல வுந்துக சிந்தையார் தொழ
 நல்குமாறு அருள் நம்பனே                                     


          
                                (
திருமுறை 3)


     ஓடத்தில் சென்று கொள்ளம்பூதூரில் நட்டமாடும் நம்பனைக் காணச் செல்வதற்கு முன்னால் , சிந்தையே நீ ஓடிப்போய் கொள்ளம்பூதூர் நம்பனைச் சரண் அடை.  தனை அடைந்தார் துயர் தீர்ப்பதுதான் தலையாயவர் தம் கடன்.  அதனால் ஓடமே நீ ஓடு.  மனமே நீ ஓடிச்சென்று இறைவனைப் பற்று என்று வேண்டினார் ஞானசம்பந்தர்.



     சிவபெருமான் திருக்கருணையால் ஓடம் கரையேறியது. ஆழ் ஆழி கரையின்றி நிலை நிற்கவும், அந்தரத்தில் அகிலகோடி தாழாமல் நிலை நிற்கவும், மேரு தனுவாக வளையவும் செய்கின்றபோது ஆற்றில் ஓடம் கரையேறுவது ஒன்றும் அரிய செயல் அல்லவே! கரையேறியது ஓடம் மட்டுமல்ல.  பிறவியும் கரையேறியது.