11 February 2019

Sail with mind - ஓடம் செல்லு முன் , மனமே நீ செல்


ஓடம் செல்லு முன், மனமே நீ செல்



மதுரையிலிருந்து பாண்டி நாட்டுத்தலங்கள் பலவும் கண்டு வணங்கிவிட்டு மீண்டும் சோழநாடு செல்கின்றார் ஞானசம்பந்தர்.  முள்ளிவாய்க்கரை என்னும் திருத்தலத்தை அடைந்து அங்கு தங்கினார். அங்கிருந்து பின்னர் திருக்கொள்ளம்பூதூர் என்னும் திருத்தலம் செல்லவேண்டும் என்று விரும்பினார்.


     இடையில் ஆற்று வெள்ளம் கரை கடந்து சென்றது.  ஞானசம்பந்தரின் அன்பு வெள்ளமும் கரை கடந்தது. ஓடக்காரர்களும்ää துடுப்பைச் செலுத்த இயலாமல் மிதப்பதாகக் கூறி ஓடத்தைக் கட்டி வைத்துவிட்டார்கள்.


     ஞானசம்பந்தர் சிவநாமத்தைச் சொல்லி வாழ்க்கை என்னும் ஓடத்தை ஓட்டி பிறவி என்னும் கடலைக் கடக்க வந்தவர். தான் மட்டும் கடந்துவிடாமல் தன்னைச் சார்ந்தவர்களையும் கடைத்தேற்ற வந்த தோணியப்பர் அவர். அதனால் ஓடத்தை அவிழ்ப்பதுபோல் நமது பிறவிக்கட்டையும் அவிழ்க்கின்றார்.    சிவனடியார்களைத் தோணியில் ஏற்றுகின்றார். பின் தானும் ஏறிக்கொண்டு தோணியைச் செலுத்துவதற்கான பாடலைப் பாடுகின்றார்.



கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்
 நட்டமாடிய நம்பனை உள்கச்
 செல்ல வுந்துக சிந்தையார் தொழ
 நல்குமாறு அருள் நம்பனே                                     


          
                                (
திருமுறை 3)


     ஓடத்தில் சென்று கொள்ளம்பூதூரில் நட்டமாடும் நம்பனைக் காணச் செல்வதற்கு முன்னால் , சிந்தையே நீ ஓடிப்போய் கொள்ளம்பூதூர் நம்பனைச் சரண் அடை.  தனை அடைந்தார் துயர் தீர்ப்பதுதான் தலையாயவர் தம் கடன்.  அதனால் ஓடமே நீ ஓடு.  மனமே நீ ஓடிச்சென்று இறைவனைப் பற்று என்று வேண்டினார் ஞானசம்பந்தர்.



     சிவபெருமான் திருக்கருணையால் ஓடம் கரையேறியது. ஆழ் ஆழி கரையின்றி நிலை நிற்கவும், அந்தரத்தில் அகிலகோடி தாழாமல் நிலை நிற்கவும், மேரு தனுவாக வளையவும் செய்கின்றபோது ஆற்றில் ஓடம் கரையேறுவது ஒன்றும் அரிய செயல் அல்லவே! கரையேறியது ஓடம் மட்டுமல்ல.  பிறவியும் கரையேறியது.

No comments:

Post a Comment