28 February 2019

Benefit of Selfless Service - கைத்தொண்டின் பயன்


கைத்தொண்டின் பயன்


     நாவுக்கரசரும் , ஞானசம்பந்தரும் திருவீழிமிழலையில் இருந்தபோது அவ்வூர் மக்கள் பசியால் மிகவும் நலிவுற்றனர்.  மழையில்லாமல் கடும் பஞ்சம் வாட்டியது. பயிர்த்தொழிலை நம்பிவாழும் மக்கள் படும் துயரைக்கண்டு அடியவர்கள் இருவரும் மிகவும் மனம் கலங்கினர்.

வானாகி நிலனாகி அனலுமாகி
மாருதமாய் இருசுடராய் நீருமாகி
 ஊனாகி உயிராகி உணர்வுமாகி
உலகங்கள் அனைத்துமாய் உலகுக்குஅப்பால்
 ஆனாத வடிவாகி நின்றார் செய்ய
அடிபரவி அன்றிரவு துயிலும்போது
 கானாடு கங்காளர் மிழலை மூதூர்
காதலித்தார் கனவில் அணைந்தருளிச் செய்வார்

                       
                     (
பெரியபுராணம்)



     பஞ்ச பூதங்களாகவும். அதற்கு அப்பாலாகவும் உள்ளது பரம்பொருள். பரம்பொருள் நினைத்தால் மழை பொழிவிக்க முடியும். இயற்கைச் சூழலையே மாற்றியமைக்க முடியும். அதனால் அடியவர் பொருட்டாக சில திருவிளையாடல்கள் நடத்த திருவுள்ளம் கொண்டார்.  இயற்கை மாறுதல்களால் சிவனடியாருக்கு எந்தப் பாதிப்பும் வந்து சேராது என்றும்; ஆனாலும் உங்களையே சரண் அடைந்துள்ள மக்கள் பசிப்பிணி தீரும் பொருட்டு கோவிலின் (கிழக்கு  ,மேற்கு) இரண்டு புறமுள்ள பலி பீடங்களில் படிக்காசு வைக்கின்றோம். அதனைக் கொண்டு பசிப்பிணி ஆற்றுவீர் என்று மொழிந்தார்அவ்வாறே மறுநாள் காலையில் திருக்கோவில் சென்று வணங்கியபோது கோபுரவாசல் பலிபீடத்தில் படிக்காசு இருப்பதைக் கண்டு வணங்கி அதை எடுத்துச் சென்றார். பின் அன்னம்பாலிப்பு நடத்துவதாகப் பறை அறைவித்தார்கள்இறைவன் அருளிய படிக்காசினைக் கொண்டு இரு அடியவர்களும் தமது பகுதியில் உள்ள மக்களுக்கு அன்னம் பாலித்தார்கள்.
     நாவுக்கரசர் மடத்தில் உணவு வகைகள் சீக்கிரம் பரிமாறப்பட்டது.  அடியவர்கள் அனைவரும் உச்சிப் பொழுதிற்குள் உணவருந்தி செல்கின்றனர்.  இங்கு அடியவர்கள் உணவருந்தக் கால தாமதம் ஏன்? என்று ஞானசம்பந்தர் வினவினார். திருநாவுக்கரசர் பெற்ற பொன்னிற்கு வட்டம் கேட்பது இல்லை. நாங்கள் எடுத்துச் செல்லும் காசிற்கு வட்டம் தந்து பொருள் பெற்றுவரக் காலதாமதமாகின்றது என்று அன்பர்கள் கூறக்கேட்ட ஞானசம்பந்தர் இறைவனிடமே சென்று வேண்டுதல் செய்வோம் என எண்ணுகின்றார்.


     இதுபற்றிய சிந்தனையில் இருந்த ஞானசம்பந்தரின் மனத்தில் இறைவனது அளப்பெருங் கருணைத்திறம் பதிகின்றது. இறைவன் பேதமில்லாதவன்;  தன்னுடைய காசிற்கு மட்டும் வட்டம் கேட்பதன் காரணம் என்ன? என்று சிந்திக்கின்றார்.

புலர்வதன்முன் அலகிட்டும் மெழுகிட்டும்
 பூமாலை புனைந்து ஏத்தியும்
                                திருமுறை 6 )


     தொண்டுசெய்ததால்  ,நாவரசருக்குக் கிடைத்த காசு வட்டம் கேட்காமல் செல்லுபடியாயிற்று என்பதனைப் புரிந்துகொண்டார் ஞானசம்பந்தர். கருணையே வடிவான இறைவனது பாதம் பணிந்து நாமும் வாசி தீர்ந்த காசு பெறுவோம் என்று தீர்மானித்தார். அதன்படித் திருக்கோவில் சென்று வாசி தீர்த்தருளும்படி வேண்டுதல் செய்கின்றார்.
வாசி தீரவே காசு நல்குவீர்
 மாசின் மிழலையீர் ஏசல் இல்லையே
                                                                                                                    
திருமுறை 1 )



     இறைவன் வாசியில்லாத காசினை அருளிச்செய்தார். தொண்டர்களும் அதைப்பெற்றுச் சென்று விரைவில் பொருட்கள் வாங்கி அன்னம் பாலித்தார்கள்.

     கைத்தொண்டு செய்தால் நாமும் உய்வடையலாம் என்னும் பாடத்தை திருவீழிமிழலையில் இறைவன் செய்த திருவிளையாடல் மூலமாக அடியவர்கள் புரிந்துகொண்டனர். பல பிறவிகளின் வினைப்பயனைக் கழித்துவிடலாம் என்னும் நம்பிக்கை அடியவர்கள் உள்ளத்தில் எழுந்தது.


     திருவீழிமிழலையில் இறைவன் திருவருளால் மழை வளம் பெருகியது.  நாடு செழித்தது.  அங்கிருந்து அடியவர்கள் மறைக்காடு சென்றனர்.

No comments:

Post a Comment