21 July 2018

திருக்கதவம் திறத்தல் - Opening the Gate to eternal bliss


திருக்கதவம் திறத்தல்

நாம் ஒவ்வொருவா் உடலிலும் திருக்கதவம் திறக்கும் ஒரு அருள் அனுபவம் உண்டு.  அதனை உணா்ந்து கொள்ளாமல் நாம் இருக்கிறோம்.  எளிய வழியைக் காட்டுகின்றார்கள் நம் அருளாளா்கள்.

சொல்லும் பொருளும் கடந்தவன் இறைவன் என்றாலும் சொல்லும் பொருளுமானவனாகவும் அவனே உள்ளான் என்பதனால் திருநாவுக்கரசரின் பாடலில் உள்ள சொல் நயத்தையும் , பொருள் நயத்தையும் இசை நயத்தையும் அனுபவித்து இறைவனும் தன்னை மறந்தான்


     ஏழிசையாய், இசைப்பயனாய் இருக்கும் இறைவன், தன்னை மறந்து பத்துப் பாடல்கள் பாடும்வரை கதவு திறப்பிக்கவில்லை. பதினொன்றாம் பாடலில் புன்னை மரங்கள் சூழ்ந்த மறைக்காட்டில் அமர்ந்துள்ள பெருமானே,  முத்துக்கள் செழித்துள்ள உனது இடத்தினில், உனது கருணையும் செழிக்க வேண்டுமே! புன்னை மரங்கள் பூத்துக் குலுங்கி புதுமணம் பரப்புகின்றதே. உனது திருக்கருணையாகிய அருள்மணமும் பரப்பவேண்டுமே! திருமறைக்காட்டில் வேதங்களால் பூசிக்கப்பட்ட கதவை இறை அனுமதி பெறாமல், தான் கதவு திறக்கப் பாடியது தவறோ! என்று மனம் உருகுகின்றார் அப்பர் சுவாமிகள்இறைவனது கருணைக்கு ஏங்கி, ஊர்மக்கள் வேண்டுதலையே உன்னிடம் வேண்டினேனே தவிர, தன் முனைப்பால் நான் பாடவில்லை என்று இறைஞ்சினார் அப்பர் சுவாமிகள்


     திருநாவுக்கரசருக்கு மனத்திலும், உணர்விலும் நின்று அருள் செய்பவன் மறைக்காடுறையும் மணாளன். அவருக்கு நிச்சயம் கண்ணிலும் நின்று அருள் செய்திருப்பான். ஆனால் உலகமக்கள் நேர் வழிப்பாதையில் சென்று இறைவன் இருந்த கோலத்தை தங்கள் கண்ணால் கண்டுகளிக்க வேண்டும் என்று விரும்பினார் நாவரசர்.


பெட்டியிதில் உலவாத பெரும்பொருள் உண்டு இதுநீ 
பெறுக என அதுதிறக்கும் பெருந்திறவுகோலும்
 எட்டிரண்டும் தெரியாதேன் என்கையிலே கொடுத்தீர்
     இதுதருணம் திறந்தனை எடுக்க முயல்கின்றேன்
 அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன் 
     அரைக்கணத்துக்கு ஆயிரம் ஆயிரம் கோடியாக 
 வட்டியிட்டு நும்மிடத்தே வாங்குவன் நும்மானை 
     மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே 
                                           (அருட்பா)

     எந்நாளும் இன்பமாக இருப்பதற்கு நாவரசர் வழி கூறுகின்றார். எம வாதனையைத் தடுத்து நிறுத்திவிடலாம். உலகியலீர் வம்மின் இருந்து சொல்லுவேன் நான் கூறுவதைக் கேளுங்கள். மணிக்கதவம் திறத்தல் என்பது திருக்கோவிலில், திருமறைக்காட்டில் நடந்ததாக நினைக்கவேண்டாம். நம் ஒவ்வொருவரிடமும் மணிக்கதவம் திறப்பிப்பதற்கான உபாயம் உள்ளது. அந்த மணிக்கதவு திறக்கும் சாவியினை நாம் பெற்றுக்கொண்டு, உரிய நேரத்தில் உரிய வழியில் நாம் திறந்தால் எந்நாளும் இன்ப அனுபவம் அனுபவிக்கலாம்.

     நட்பு, அனுதாபம், மகிழ்ச்சி, புறக்கணித்தல் என்று நான்கு சாவிகளைக் கொண்டு நம்முள் இருக்கும் திருக்கதவினை நாம் திறந்து கொள்ளலாம் என்கிறது பதஞ்சலி யோக சூத்திரம்.

1) எந்நாளும் இன்பமே துன்பமில்லை என்னும் மனோநிலை
  ஒரு சாவி.
2) தர்மம் தவறாமல் நடப்பது இரண்டாவது சாவி.
3) மகிழ்வுடன் இல்லாதவர்களை கண்டு இரக்கம் காட்டுவது
  மூன்றாவது சாவி.
4) கொடூரமானர்வர்களின் உறவினைத் தவிர்ப்பது நாலாவது
  சாவி.
    
இந்த
நான்கு சாவிகளையும் எப்போதும் நாம் கையில் வைத்திருந்தால் மன அமைதி என்னும் கோட்டையின் நான்கு வாசலையும் திறந்து அதில் எந்நாளும் இன்பமுடன் வாழலாம்.


யோக
நிலையில் நிலைபெறுவதற்கும், நம் உடல், உயிர், உணர்வு இவைகளைக் கையாள்வதற்கும் சரியான சாவிகளை உபயோகப் படுத்தினால் நாம் இறைநிலை அடையலாம். இதை அனுபவத்தில் உணர்ந்திருந்தார்  நாவரசர்அதனால் மறைக்காடுறையும் வேதநாயகனிடம் நான் உணர்வினால் அனுபவித்த ஞானநிலையில் நீ என்னோடு இரண்டறக் கலந்து நிற்கின்றாய். அதனால் ஐம்புலன்கள் அகத்தடக்கி இன்ப அனுபவம் நிறையப் பெற்றேன். பெட்டியதில் உலவாத பெரும்பொருளையும், அது திறக்கும் பெரும் திறவுகோலையும் நான் பெற்றதுபோல், இவ்வுலக மக்களும் பெறுவதற்கு உதவவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகின்றார் அப்பரடிகள்


No comments:

Post a Comment