3 August 2018

கணக்கு எழுதும் பரமன் - Accounting of our karmas


கணக்கு எழுதும் பரமன்

ஒரு தனவந்தர் இருந்தார். அவர் மனம் போன போக்கில் வாழ்ந்தார்.  தான் பெற்ற செல்வத்தினைக் கொண்டு எந்த எந்த வகையில் எல்லாம் சிற்றின்ப நுகர்வு அனுபவிக்கமுடியுமோ அத்தனையும் அனுபவித்தார்.

காவல் செய்த பெண்டிரைக் கற்பழித்தேனோ
 கன்னியர்கள் பழி கொண்டேனோ
                                           (அருட்பா)

     என்று கிடைத்த செல்வத்தைக் கொண்டு தகாத வழியில் சிற்றின்ப நுகர்ச்சியில் ஈடுபட்டார். இதன் விளைவாக நோய்வாய்ப்பட்டு 48 வயதிலேயே இயற்கை எய்தினார். அவரது மகன் ஒரு மகானைச் சந்திப்பதற்குச் சென்றார்.  மகானின் அறிவுரைகளையும் , அவர் கூறும் நனநெறிகளையும் கேட்டு அறிந்தார்.  வாழ்நாளின் கடைசிவரை இந்தநெறியில் நிற்பதற்கு இறைவன் கருணை செய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். தனது தந்தையின் ஆன்ம விடுதலைக்கு,  தான் என்ன செய்யவேண்டும் என்றும் ,  அதற்கான பரிகாரங்களைக் கூறும்படியும் கேட்டான் இளைஞன்.


     சில தேவ ரகஸ்யங்களைக் கூறக்கூடாது. இருந்தாலும் சரணாகதி செய்த சீடனின் முழுப்பொறுப்பும் குருவையே சாரும் என்பதால் கூறுகின்றேன் கேட்டுக்கொள் என்றார் குரு.  சீடனும் ,  குருவின் வார்த்தைகளைச் செவிமடுத்துக் கேட்டான்.


உனது
தந்தை தற்போது ஒரு பன்றியாகப் பிறந்துள்ளார் என்றார்.  சீடனுக்கு ஒரே அதிர்ச்சி. நான் அதை எவ்வாறு அறிந்துகொள்வது? என்றான்.  ஊருக்கு எல்லையில் காரை நிறுத்திவிட்டுச் சற்றுநேரம் காலாற நடந்து செல்.  அவ்வாறு நீ செல்லும்போது சில பன்றிக் குட்டிகளுடன் ஒரு தாய்ப்பன்றியும் வரும். அந்தப் பன்றிக்குட்டியுள் ஒன்றின் நெற்றிப் பொட்டில் சற்று வெண்மை நிறம் படர்ந்திருக்கும். உன்னைக் கண்டவுடன் வேகமாக ஓடிவந்து உனது காலைப் பரிவுடனும், வாஞ்சையுடனும் நக்கும். அதிலிருந்து அதுதான் உனது தந்தை என்று தெரிந்துகொள்.


அப்பர்
பாடலை நினைவுபடுத்தி வாழ்ந்திருந்தால் அவருக்கு இப்படி ஒரு பிறவி வந்திருக்காது.

வாய்த்தது நம்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்
                                                  (திருமுறை 4)

     கிடைத்தற்கரிய மானிடப் பிறவி கிடைத்தும் அதை மதிக்கத் தவறிவிட்டார் உனது தந்தை.  ஆனால் அவர் ஒரு நன்மை செய்தார் அது என்ன என்றால் 

எவரேனும் தாமாக விலாடத்து இட்ட திருநீறும்
சாதனமும் கண்டால் உள்கி
 உவராதே அவர் அவரைக் கண்டபோது உகந்து
அடிமைத் திறம் நினைந்து அங்கு வந்து நோக்கி
 இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி இரண்டாட்டாது
ஒழிந்து ஈசன் திறமே பேணிக்
 கவராதே தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே
                                           (திருமுறை 6)

     இவர்தேவர் ,  அவர்தேவர் என்று இரண்டாட்டாது அனைவருக்கும் அன்னம் பாலித்தார். அதன் பயனாக உனது தந்தையை நீ அடையாளம் கண்டுகொள்ளும் பேறு பெற்றாய் என்றார் குரு.


சீடன்
உடனே குரு சொன்னதுபோல் செய்தான். ஒரு பன்றிக்குட்டி ஓடிவந்து இவன் காலை நக்கியது.  அதைத் தனியாகப் பிரித்து எடுத்து வந்து, தினமும் நீராட்டி பால்சோறு பரிந்தளித்து ,  மெத்தையில் துயில்  கொள்ளச் செய்தான்.

அறக்கருணையும் தனி மறக்கருணையும் தந்து
வாழ்விக்;கும் ஒண்மைப் பதம்                                                                                (அருட்பா)

     என்றார் போல் நல்லது செய்ததற்கான பலன் தனியாகவும் ,  தீயது செய்ததற்கான பலன் தனியாகவும் பிரித்தெடுத்து அருள்செய்வான் ஈசன்.

     உலகத்தில் உள்ள செல்வந்தர்கள் தங்கள் வரவு செலவுகளைக் குறித்துக்கொள்ளவும்  அதை ஆய்வுசெய்து அரசுக்கு கணக்குக்காட்டவும் கணக்குப்பிள்ளை என்ற பெயரில் கணக்காளா் ஒருவரை நியமனம் செய்து வைத்திருப்பார்கள். இந்தக் கணக்குப்பிள்ளை நமது கணக்கு வரவு செலவுகளைச் சரிபார்த்து ,  அரசிற்கு எவ்வளவு தொகை கணக்கு ஏய்ப்பு நடத்தலாம். எவ்வளவு சொத்துக் கணக்குகளை யார் யார் பெயரில் பங்கீடு செய்து குறைந்த வருமானம் உள்ளதுபோல் கணக்குக் காட்டலாம் என்று தெரிந்து வைத்திருப்பார். நமக்கு அவ்வழியில் நின்று கணக்கும் காட்டுவார்.

     இறைவனாகிய கணக்காளா் கணக்கு எழுதுவதில் மிகவும் வல்லவர். நாம் எத்தனை மலர்கள் தொழுது துதித்து அர்ச்சனை செய்துள்ளோம்.  எத்தனை நாள் இறைவனை நினைக்காமலேயே இருந்து வந்துள்ளோம். அழுது காமுற்று அரற்றும்போது நன்நெறியில் நின்று காமுற்றோமோ? தவறான வழியில் நின்று காமத்தினை நிறைவேற்றினோமா? என்பதனை மிகத் துல்லியமாகப் படம்பிடித்து வைத்துள்ளான். ஈசன் அறக்கருணை செய்யும்போது அருள் ஆர் அமுதத்தை வாரிக்கொண்டு வழங்குகின்றான். மறக்கருணை செய்யும்போது கிடைக்கும் தண்டனை , பிறவிக் குற்றத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு ஏதுவாகின்றது.  அதுவும் ஒரு கருணைதான்.  தான தர்மம் செய்ததனால் மலத்தை உண்டு வாழும் ஒரு பிறவி கிடைத்தும் கூட அதை அனுபவிக்கவிடாமல் கட்டில் வாசம் கிடைத்தது. ஒருவருக்கும் தெரியாமல்தானே செய்கின்றோம் என்று தவறு செய்தோமானால் ,  மறக்கருணை மூலம் இறைவன் தண்டிப்பான் என்கின்றார். 

     அப்பர் பாடல்களை எடுத்துக்காட்டி குரு ,  சீடனிற்கு மறக்கருணை பற்றியும் ,  அறக்கருணை பற்றியும் விளக்கினார். ஈசனாகிய அதிகாரியிடம் நாம் தவறான கணக்குக் காட்டமுடியாது. கணக்கில் திருத்தங்களோ ,  அடித்தங்களோ செய்து நமது சொத்துக்களைத் தக்க வைத்துக்கொண்டு வரி ஏய்ப்புச் செய்யமுடியாது.

தொழுது தூமலர் தூவித்துதித்து நின்று
 அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்
 பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்
 எழுதுங் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே  
               
அஞ்சியாகிலும் அன்பு பட்டாகிலும்
 நெஞ்சம் வாழிநினை நின்றியூரை நீ     
                                                                                                              (திருமுறை 5)


     எப்படியாவது இறைவனை நினையுங்கள். சுடலை செல்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்று.  சுடுகாடு செல்வதற்கு முன்னால் நடைமுறை வாழ்வில் குறிக்கோள் இல்லாமல் வாழ்ந்தோமானால் அவ்வாழ்க்கையின் கணக்கினை இன்னம்பர் ஈசன் குறித்து வைத்துள்ளான். நாம் ஒருவருக்கும் தெரியாமல் இருப்போம் என்று தீநெறி சென்றால் ,   எப்படி நெருப்பைத் தெரிந்து தொட்டாலும்  தெரியாமல் தொட்டாலும் சுடுமோ அதுபோல் நமது தீவினைகள் நம்மைச் சுட்டுவிடும்.  அதனால் தீநெறி செல்லாமல் இறைவனை அணுகுங்கள் என்கின்றார் அப்பர் சுவாமிகள். 
    


No comments:

Post a Comment