27 November 2019

Sitthar Ilakkiyam- An Introduction - சித்தர் இலக்கியம் – அறிமுகம்


சித்தர் இலக்கியம் – அறிமுகம்


எல்லாம் வல்ல சிவ பரம்பொருளின் கருணையினால், சித்தர் இலக்கியம்  என்னும் தலைப்பில்  சித்தர் பாடல்கள் பற்றிக் காண உள்ளோம்.
வழக்கமாக எல்லாரும் 18 சித்தர்கள் எனக் குறிப்பிடுவார்கள். கோடானு கோடி சித்தர்கள் நம் நாட்டில் மட்டும் அல்லாது ,   உலகம் முழுவதும் தோன்றியிருக்கிறார்கள்.  அவரவர்கள் , அவரவர்களுடைய சார்ந்த இடத்திற்குத் தகுந்த பண்பில் வாழ்ந்திருக்கிறார்கள்.  

காகபுஜண்டர் வரலாற்றில் அவர் பல சீடர்களை உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பி, அங்கு ஒரு சமயத்தை உற்பத்தி செய்து, ஆங்காங்கு உள்ள மக்களுக்கு நல்வழி காட்டி வர அனுப்பியுள்ளதை, நாம் காண முடிகிறது. . உதாரணமாக  சீனா , ரஷ்யா மற்றும் அரபு நாடுகளில் அவர் சீடர்கள் வாழ்ந்ததாக வரலாற்றுச் செய்திக் குறிப்புகள் உள்ளன.

உலகியலில் ,நாம் நம்மை  அறிமுகப்படுத்துப் பொழுது,   நமது ஊரைக் குறிப்பிட்டு, அந்த  ஊரில் உள்ள பிரபலமாக இருப்பவர்கள்களுக்கு நாம் உறவினர் எனக் குறிப்பிடுகிறோம்.
அதே போல்,  மக்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது,  நான் சித்தர் பரம்பரையில் வந்தவன் எனக் குறிப்பிடுவதை ஒரு பெருமையாக நினைக்கிறார்கள். அந்த அளவிற்கு மிகவும் முன்னேற்றமான , முற்போக்கு சிந்தனை உடையவர்கள் சித்தர்கள்.
18 சித்தர்களுக்கெல்லாம் அப்பாற் பட்ட சித்தனாக,, சித்தர் தலைவன் என்று முருகப் பெருமான் மற்றும் சிவ பெருமானைக் கூறுவார்கள். சித்தர் தலைவன், பேரண்ட நாயகன் ஒருவனே.

 யாதும் ஊரே யாவரும் கேளிர் எல்லாம் ஒரே ஊரே, யாவரும் சொந்தக்காரர்கள், ஜாதி, இனம் ,மதம், செல்வந்தர், ஏழை என்னும் பிரிவினைகளுக்கு அப்பாற் பட்டவர்கள் சித்தர் பெருமக்கள்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா:

நாம் அனைவரும் வாழ்வில் வரும் துயரங்களைக் குறித்து, “ என் அப்பா அம்மா செய்த பாவம் எனக்கு வந்துள்ளது, எம் தாத்தா,  பாட்டி செய்த பாவம் தான் காரணம்”  என விசனப்படுகிறோம். “நான் தவறு செய்தேன்” என யாரும் ஒப்புக் கொள்வதில்லை.


அனைத்து குடும்பத்துக்கும் , “எமது முன்னோர்களில் யாரோ ஒருவர் ஒரு குழந்தையைக் கொன்று விட்டனர், ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டார்கள், ஒரு பசுவைக் கொன்றனர், கர்ப்பிணிப் பெண்ணுக்குத் தீங்கு இழைத்தனர்” என ஏதோ ஒரு பின்புலக்கதை இருக்கும். 
ஆனால் சித்தர்கள் , “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்னும் மேம்பட்ட கொள்கையைக் கொண்டவர்கள்.  இதையே,


“பெருமைக்கும், ஏனை சிறுமைக்கும், தத்தம் கருமமே கட்டளைக்கல்”

என்கிறார் வள்ளுவர்.

 நான் ஏதோ ஓரு நல்வினை செய்யப்போய் , நமக்கு நல்ல மனைவி, நல்ல மக்கள், நல்ல சுற்றம், நல்ல நட்பு இவைகளெல்லாம்   கிடைத்திருக்க முடியும். அதற்கு நாம் ஏதோ ஒரு வகையில் செய்த புண்ணியமே காரணம். அதே போல்  நாம் அனுபவிக்கும் துயரங்களும், ஏதோ ஒரு பிறவியில் நாம் செய்த வினையின் ,எதிர்வினையே.

சித்தர் வரலாறுகள் “சித்தர்கள் மிகப் புரட்சிகரமான சிந்தனை உடையவர்கள். அவர்களுடைய சிந்தனைக்கு எந்த விஞ்ஞானியும், எந்த பெரிய பகுத்தறிவுவாதிகள் ஒத்துப்போக முடியாது அவ்வளவு புரட்சிகரமான சிந்தனை உடையவர்கள்” என்னும் கருத்தை உணர்த்துகிறன.

 உதாரணமாக

நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றிவந்து முணு முணு என்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ
-      சிவவாக்கியர்

இப் பாடலின் முதல் சில வரிகளை மட்டுமே எடுத்துக் கொண்டு. “ யாரும் கோயிலுக்குப் போகாதீர்கள், அங்கு தெய்வம் இல்லை”  சித்தர்கள் புற வழிபாட்டைக் கண்டித்துள்ளனர் என்னும் விதண்டாவாதம் பேசுவர் பலர். “நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்” என்னும் மிக முக்கியக் கருத்தை விட்டு விடுவர்.

திருக்கோயில்கள்   , அந்த காலத்தில் ஒரு கலையரங்கம்  போலத் திகழ்ந்தன.. கோயிலில் தான் திருமணங்கள் நடைபெற்றன. கலை , இலக்கியம் பண்பாடு இவைகளை நிறைவேற்றக் கூடிய இடமாக திருக்கோயில் திகழ்ந்துள்ளது.

திருக்கோயில்கள் , ம் உடம்புக்குள் உள்ள உண்டான தத்துவங்களைக் குறியீடாக உணர்த்தின.  அங்கு உள்ள பலிபீடம்,  நந்தி , கொடிமரம் அனைத்தும் ஒரு குழூ உக் குறியாக விளங்குகின்றன.

சுட்ட சட்டி , சமைத்த உணவின் சுவை அறியாது
குயவன் , மண் பாண்டம் செய்யும் பொழுது, குழைத்த மண்ணை சுடுவான். சுடாத மட்பாண்டம் உணவின் சுவையை தன்னுள் உறிஞ்சு கொள்ளும். ஒரு பயனில்லாமல் உடைந்தும் போகும். சுட்ட பாண்டம் , சமைத்த உணவின் சுவை அறியாது. 
ஆன்மா பக்குவப்படுத்தப்பட்ட பாத்திரமாக மாறி விட்டால், புறவழிபாடு நோக்கி போக வேண்டாம். அகவழிபாடு மூலமாகவே அவர்களுக்கு பலன் கிட்டும். நாம் ஐம்பொறிகளையும், புலன்களையும் சுட்டதாக (பக்குவப்படுத்தப்பட்டதாக) வைத்துக் கொள்ள வேண்டும் என்னும்  ஒரு மிகப் பெரிய தத்துவத்தை இப் பாடல் உணர்த்துகிறது,

சித்தர்கள் மெஞ்ஞானத்தின் எல்லையைக் கண்டவர்கள். அவர்கள் அறிவு , மிகவும் பண்பட்ட அறிவு.

"பாலாற்கழி இப்பல நாள் உணக்கினும் வாலி தாம்
பக்கம் இருந்தைக்கு இருந்தன்று"
-      நாலடியார்.
-       
பாலினால், கரியை எவ்வளவு நாள் கழுவி , உணர்த்தினாலும், கரிக்கு வெண்மையாகும் தன்மை கிட்டாது. அது போல், நோன்பு நோக்காத உடலினுள் அறிவு புகுந்தால், , அது தர்க்க வாதம், குதர்க்க வாதம் அனைத்தையும் பண்ணும், பொருள் ஈட்ட உதவும் , ஆனால் பிறவி நீக்கத்திற்கு ஒரு போதும் பயன்படாது.


நோன்பு நோற்ற உடம்புக்குள் உள்ள அறிவு , உண்மையை பிறருக்குப் பறைசாற்றும் , தானே வாழ்ந்து காட்டும் அதுதான் ஒரு ஞானஆசிரியனுக்கு அழகு. அப்படிப்பட்ட அறிவு உடையவர்கள் சித்தர்கள்.

சரியை, கிரியை ,யோகம், ஞானம் எனும் நால் வழிகளில், ஞானத்துள் ஞானத்தை வலியுறுத்துவன சித்தர் இலக்கியங்கள். சித்தர்கள் இறை அனுபவத்தைத் தனக்குள் உள் வாங்கிக் கொண்டவர்கள். சித்தர்கள் அண்டத்தில் உள்ள அத்தனை ரகசியங்களையும் மது பிண்டத்திற்குள் கண்டவர்கள் அது மட்டுமின்றி நாமும் காணும்படியாக அவர்கள் நமக்கு அறிவுரை சொல்லி உள்ளார்கள்.  அவர்கள் உணர்த்துவது , ஆன்மாக்களாகிய நாம், நமது உடலாகிய வீட்டைக் கொண்டே , வீடு , பேறு அடையலாம் என்பதே.