27 April 2018

Time is Ripe - பழுக்கும் வினை


பழுக்கும் வினை

     நம் வீட்டில் ஒரு மல்லிகைச் செடி வளர்ப்பதாக வைத்துக்கொள்வோம்.  மல்லிகைச் செடியின் இலையினைப் பறித்து முகர்ந்து பார்த்தால் அதிலிருந்து நறுமணம் வராது. கிளைகளைப் பறித்து முகர்ந்து பார்த்தாலும் மணம் வராது.  அரும்பு கட்டி மொக்காக ஆனபிறகும் கூட அதைப் பறித்து நுகர்ந்து பார்த்தால் நறுமணம் வராது.  இன்று மலரக்கூடிய மலரைப் பறித்து மலரும் நேரமான மாலை நான்கு மணிக்குமேல் முகர்ந்து பார்த்தால் மட்டுமே மணம் வரும். அதுபோல் நல்வினையோ தீவினையோ அனுபவிக்கும் நேரம் வரும்போது மட்டும்தான் இன்ப துன்ப நுகர்ச்சிகளை நாம் அனுபவிக்க இயலும். திருநாவுக்கரசருக்கு இப்பிறவியிலிருந்து விடுதலை பெறும் நல்வினை வந்துவிட்டது. திருநாவுக்கரசரது நல்வினை வயிற்று வலியாகிய சூலைநோய் உருவத்தில் வந்தது. நல்வினை நுகர்ச்சி என்றால் நாம் வீடு, மனை, சொத்து வாங்கலாம் என நினைப்போம்.  ஆனால் வயிற்றுவலி எப்படி நல்வினை நுகர்ச்சியாகும் என்று சிந்திக்கலாம்.  சிவப் புண்ணியப் பேற்றைத் தரப்போவது இந்த வயிற்றுவலிதானே அதனால் இந்த வயிற்றுவலியே அவரது நல்வினையாயிற்று.

சூலை தடுத்தாள்வோம்



     சிவபெருமான் திலகவதியாரிடம் கூறியதுபோல் திருநாவுக்கரசருக்குச் சூலை கொடுத்து ஆட்கொண்டான்.  நமது வினை காரணமாக வரும் நோயையே நம்மால் தாங்கமுடியாது.  இறைவனாகச் சூலை மடுத்து ஆள்வோம்   என்று சூலைநோய் கொடுத்தால் அதன் தாக்கம் எப்படி இருக்கும். திருநாவுக்கரசரை சூலைநோய் தாக்கியது. சமணப் பள்ளியில் மயங்கி விழுந்தார்.  சமணர்கள் மணி, மந்திரம், மருந்து என்று அனைத்து வழிகளையும் கையாண்டனர். எவ்வகையிலும் திருநாவுக்கரசருக்கு சூலையின் வெம்மை தணியவில்லை.
     நல்ல மருந்து இம்மருந்து சுகம் நல்கும் வைத்திய நாத மருந்து அந்த வைத்தியநாதன் கொடுத்த சூலைநோய்க்கு வைத்தியநாதன்தான் மருந்தாகவும் அமையவேண்டும். அதனால் மற்ற மருந்துகள் பலன் அளிக்கவில்லை. சமணர்களும் தாங்கள் கற்ற மந்திரங்களை எல்லாம் கூறிக்  குண்டிகை நீர் மந்திரித்துக் கொடுத்தனர். மயில் பீலியால் தடவிவிட்டனர்.  ஆனால் எந்த வகையிலும் திருநாவுக்கரசரின் உடலும் மனமும் அமைதி அடையவில்லை. 

     தமக்கையார் நினைவு வந்தது. உற்ற நோய் நோன்றல் உயிருக்கு உறுகண் செய்யாமை ஆகிய தவத்தை மேற்கொண்டவர் நாவரசர். ஆனால் அந்தத் தவத்தால் உடல் நோவைத் தணிக்க இயலவில்லை. தனது உற்ற நண்பனைத் தனது தமக்கையாரிடம் தூது அனுப்பினார். தான் படும் உடல் துன்பத்தையும் மனத்துயரத்தையும் தமது தமக்கையாரிடம் சென்று தெரிவிக்குமாறு கூறி அனுப்பினார்.
     தூதுவன் திலகவதியாரைப் பார்ப்பதற்காக வந்தான். அதிகாலையில் நந்தவனத்தில் பூக்கொய்து கொண்டிருந்தார் அம்மையார். உமது தம்பியார் ஏவல் செய்து அனுப்பிவைத்தார் என்று கூறினான் தூதுவன். ஏதேனும் தீங்குளவோ? என்று கேட்டார் திலகவதியார். சூலைநோயானது குடரொடு துடக்கி முடக்குகின்றது. செய்யும் வகை தெரியாமல் எல்லோரும் கைவிட்டனர் என்று கூறினான் ஏவலாள்.


     நன்று இது தீது இது என்னும் வகை தெரியாமல் உள்ளார்கள் சமணர்கள்.  அவர்கள் இருக்கும் இடத்திற்கு நான் வரமாட்டேன் என்று கூறி அனுப்பினார் திலகவதியார். ஈசன் அருள் கூட்டுவித்தால் தன்னுடைய சகோதரியார் தாள் பணிவதே இனிச் செய்ய வேண்டுவது என்று முடிவு செய்தார் மருள்நீக்கியார். இரவோடு இரவாகத் தமக்கு உற்ற துணைவனையும் அழைத்துக்கொண்டு திருவதிகை வந்து சேர்ந்தார். திலகவதியார் திருவடியில் வீழ்ந்து வணங்கினார் மருள்நீக்கியார்.

குருவருளும்  திருவருளும்



     குருவாக இருந்து வரம் அருள்கின்றார் திலகவதியார். இறைப்பணி செய்வதானால் பஜனை செய்யவேண்டும் என்றோ கண்ணை மூடிக்கொண்டு மந்திர ஜபம் செய்யவேண்டும் என்றோ கூறவில்லை அனுபவம் பெற்ற அருளாளர்கள்.  தொண்டு செய்தால் எல்லாவிதமான பயனையும் அனுபவித்துவிடலாம் என்பது அருளாளர்கள் கண்ட முடிவு. பக்தியோகம் ஞானயோகம் அனைத்தையும் ஒருங்கே தருவது தொண்டு நெறி. தொண்டு செய்வது பல பிறவிகளில் செய்யும் வினையினைக் குறைக்கவல்லது. எந்த உடல் உறுப்புக்களால் வினை செய்தோமோ அவ்வுடல் உறுப்புக்களைக் கொண்டே தொண்டு செய்து அவ்வினைக்கு இவ்வினையைக் கழிக்கவேண்டும் என்பது அருளாளர்கள் கண்ட நெறி.
     சுந்தரரை ஆட்கொள்ள வந்த சிவபரம்பொருள் சுந்தரரிடம் வித்தகம் பேசவேண்டா வினை செய்யற்க என்றார். பேசிக்கொண்டே பொழுதைக் கழிக்கவேண்டாம். உடனடியாகத் தொண்டுசெய் என்று சுந்தரர் பொருட்டு இறைவனே கூறியதால் தொண்டின் பெருமை நமக்கு நன்கு புலனாகின்றது. 
     குருவாக தமக்கையே வந்து ஐந்தெழுத்தை ஓதித் தொண்டு செய்ய பணிக்கின்றார். திருவதிகை மடத்திலிருந்து வீரட்டானேசுவரர் கோவிலிற்கு அழைத்துச் செல்கின்றார் திலகவதியார். சிவபரம்பொருளை நிலம் தோய வீழ்ந்து பணிந்து எழுந்தார் மருள்நீக்கியார்.  அப்போது உரைத் தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு பெற்றார் இறைவன் அருளால் பாமாலை பாடும் உணர்வு வந்ததும் இறைவன் அருளால் சூலைநோயின் வெம்மை தணிந்தது. சூலைநோயின் தாக்கம் அவரை எப்படி அலைக்கழித்திருக்கும் என்பதனை அவரது பாடல்கள் நமக்கு நன்கு விளக்குகின்றன.

எத்தனை ஆண்டு காலம் சமணத்தில் இருந்தார் என்பது வரலாற்றுப் பூர்வமாகத் தெரியவில்லை. பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் திருநாவுக்கரசர் வாழ்நாளின் பெரும் பகுதியினைச் சமணத்தில் கழித்தார். நாற்பது ஆண்டுகாலம் வரை சமணத்தில் நின்றார் என்று கூறுகிறார்கள். நாற்பது ஆண்டுகாலம் சமணத்தில் இருந்தவர் நலம் தீங்கிலும் உன் நாமம் என் நாவில் மறந்தறியேன் என்றால் சமண நெறியில் இருந்து கொண்டே சிவன் கழலே சிந்திக்கும் நெறியில் இருந்தார் என்பது புலனாகும். அல்லது பார்க்கும் பொருள் எல்லாம் பரம்பொருள் என்னும் சிந்தனையில் இருந்தவர் ஆதலால் சமண நெறியிலும் இறைவனையே பார்த்தார் என்று கொள்ளலும் சாத்தியமே.
 
     இறையனுபவத்தை உணா்வதற்கு நாவரசா் போன்ற மகான்களுக்கே வினை பழுக்கும் காலம் வரும்வரை பொறுத்திருக்க வேண்டியுள்ளது.  தமக்கையே குருவாக இருந்து வழிநடத்தி இறையருள் பெறத் துணை நின்றார்.