30 June 2019

Thirunavukkarasar's determination - திருநாவுக்கரசரின் உணா்வு தேடும் மனத்திட்பம்


உணா்வு தேடும் மனத்திட்பம்


     திருநாவுக்கரசர் இறையருளைப் பெற்று பூரண உணா்வுநிலையை அடைவதற்கு செய்யும் வகை தெரியாது தவித்தார்.  தள்ளாத வயதில் கயிலை செல்லவேண்டும் என்னும் உறுதியுடன் தனது யாத்திரையைத் தொடர்ந்தார்

ஊன்கெட்டு ,  உயிர்கெட்டு, உணர்வு கெட்டு, உள்ளமும் போய் இறைவனை அடையவேண்டும் என்னும் ஆவலில் சென்றவருக்கு நா வறண்டது; ஊன் கழிந்தது; உதிரம் கொட்டியது. ஆனாலும் இறைவனைக் கயிலையில் தரிசிக்கவேண்டும் என்னும் ஆர்வம் மட்டும் குறையவே இல்லை.  அவா் முன் ஒரு அடியார் தோன்றினார்.  எங்கு செல்கிறீா்? என்றார். ஆசில் மெய்த்தவராகி நின்றவர்தமை நோக்கியதும், இத்தனை நேரம் இருந்த சோர்வு மறைந்தது. பேச உற்றதோர் உணர்வும் வந்தது.  அண்டர் நாயகன் இருப்பிடம் வந்து கும்பிடும் விருப்பினால் கயிலை வந்தேன் என்றார் திருநாவுக்கரசர்.


     கயிலை மலையானது, இவ்வுலகில் வாழும் மானிடப் பான்மையோர் அடைவதற்கு எளிதோ? என்றார்.  இதைச் சொல்லவா சிவவேடம் தாங்கி இங்கு வந்தார். ஒரு நாத்திகவாதி இதைக் கூறிவிடுவானே! அமரரும் அணுகுதற்கு அரியவனாக இருக்கலாம். ஆனால் பத்துடை அடியவர்க்கு எளியன் ஆயிற்றே இறைவன்! எப்படியாவது அவனைக் கண்டுதான் திரும்புவேன் என்னும் முனைப்புடன் இருந்தார் நாவுக்கரசர். மீண்டும் ஊர் செல்வதுதான் இனி நீ செய்யவேண்டியது என்றார் சிவவேதியர்.


மீளும் அத்தனை உமக்கினிக் கடன் என விளங்கும்
 தோளும் ஆகமும் துவளு முந்நூல் முனிசொல்ல
 ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால்
 மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என மறுத்தார்
  
                                                                                                                    (
பெரியபுராணம்)

     அப்பரின் அன்பு சிவபெருமானுக்குத் தெரியாத ஒன்றல்ல.  எந்த நெறியில் நின்றாலும் அந்த நெறியில் முனைப்புடனும், உறுதிப்பாடுடனும் நிற்கவேண்டும்.  உறுதிப்பாடு இல்லாத வாழ்க்கை உயிரற்ற வாழ்க்கையாகும்.

     கைசோர்ந்து, கால்சோர்ந்து அங்கமெலாம் தேய்ந்தபிறகும்கூட இறைவனைக் காணாமல் போகமாட்டேன் என்ற உறுதியுடன் இருக்கும் நாவரசருக்கு இறைவன் பொதிசோறு மட்டுமா சுமப்பான்! அந்தத் தொண்டன் நீற்றறைக்குள் நீறுவதற்கு முன்னால் பஞ்ச பூதங்களின் இயக்கத்தையும் திசை திருப்பி மாசில் வீணையாய், மாலை மதியமுமாய், மூசுவண்டறையாய் மாற்றி அமைக்கின்றானே.  திருநாவுக்கரசரின் பக்திக்கு இறைவன் அளிக்கும் பரிசல்லவா? இது.


மாதவக் கோலத்தில்! எழுந்தீர் என்றுரைப்பத்
 தீங்கு நீக்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளித்திகழ்வார்

  
                                                                                                                      (
பெரியபுராணம்)


இறைவன்நாவுக்கரசனே எழுந்திரு! என்றார். சொன்னது அண்டமுற நிமிர்ந்தாடும் அடிகள்  அதனால் தீங்கு நீக்கிய ஆக்கை ஆயிற்றுசமணத் தொண்டராக இருந்தாலும், சைவத் தொண்டராக இருந்தாலும், வைணவத் தொண்டராக இருந்தாலும் இறைவனது அருள்நோக்கம் சமமாகத்தான் இருக்கும். அதில் எந்தவிதமான பேதமுமில்லை. சிவத்தொண்டனுக்கு ஒரு அருள்திறமும், சமணத் தொண்டனுக்கு ஒரு அருள்திறமும் என்று பேதம் இருந்தால் இறைவன் முழுமுதல் என்பதற்கு பொருள் இல்லாது போய்விடும். அவனும் நம்மைப்போல் வேண்டியவர்களுக்கு ஒரு நீதி, வேண்டாதவர்களுக்கு ஒரு நீதி என்று பார்த்தால் அவனும் சாதாரண அரசியல்வாதி ஆகிவிடுவான்.

யாவராயினும் அன்பர் அன்றி அறிய ஒணாதவன்யார் அன்பு செய்கிறார்களோ, அவர்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடியவன்.  அவனை அறிவதற்கான சிறப்புத் தகுதி அன்பு! அன்பு! அன்பு! மட்டுமே.  இறைவனுக்குத் தெரியும் திருநாவுக்கரசர் சிறந்தடியார் என்பது. ஆனால் அவர் வழி நடக்க விரும்பும் அடியவர்களுக்கு திருநாவுக்கரசரை அடையாளம் காட்டிக் கொடுக்கின்றார் இறைவன். அன்பு செய்யும் தொண்டனின் ஆவியோடு ஆக்கையையும் புரை புரை கனிவித்துப் பொன்னெடுங் கோவிலாக்கி அந்தக் கோவிலிற்குள் அரசாட்சி செய்யும் அரசன் சிவபெருமான். திருநாவுக்கரசரின் தொண்டையும், அன்பையும் ஏற்றுக்கொண்டு புன்புலால் ஆக்கையைப் போற்றி செய்யும் ஆக்கையாக மாற்றினான்.

தீங்கு நீக்கிய ஆக்கைகொண்டு எழுந்து ஒளி திகழ்வார்
                                (பெரியபுராணம்)


நலம் தீங்கிலும் உன் நாமம் என் நாவில் மறந்தறியேன்
                                     (அப்பர் சுவாமிகள்)


என்று வாழ்ந்தவர் திருநாவுக்கரசர். அவரிடம் என்ன தீங்கு இருக்கமுடியும் என்று நமக்குள் ஒரு சிந்தனை எழும். எப்போது ஒரு உயிர் ஊனைச் சார்ந்து வாழ்கின்றதோ அப்போது ஊனின் குற்றங்கள் உயிரைச் சாரும் என்னும் பொதுவிதியினைக் கூறுகின்றார். இறைவன் சிறந்த அடியார் சிந்தனையுள் தேனூறு நிற்பவன். 

உயிர் தலைவனைச் சார்ந்து வாழும்போது தலைவன் அந்த உயிரையும், ஆன்மாவையும் வளர்ச்சி அடையச் செய்கின்றான்.  முடிந்த முடிவில் தீங்கு நீக்கிய ஆக்கையையும் அளித்து, ஒளி உடலமும் அளிக்கின்றான்.

இப்பொய்கை முழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அம்முறைமை
 பழுதில்சீர் திருவையாற்றில் காண்
                                     (பெரியபுராணம்)

எனப் பணித்தார்.


     இப்பிறவியில் ஆழ்ந்து மீண்டும் பிறப்பதற்கே தொழிலாகி இறந்துவிடாமல்  காத்த இறைவனை நினைத்து மீளாமே ஆள் என்னைக் கொண்டாய் போற்றி என்று கயிலைத் திருத்தாண்டகம் பாடுகின்றார்.

     இப்பொய்கையில் முழுகி கயிலையில் நாம் இருந்த கோலத்தைத் திருவையாற்றில் காண் என்று சிவபெருமான் கூறியதும் அவ்வாறே திருநாவுக்கரசர் அப்பொய்கையில் முழுகித் திருவையாற்றில் எழுந்தார்.

     தேவர், தானவர், சித்தர், விச்சாதரர், இயக்கர், மேவுமாதவர், முனிவர்கள் சூழ தாணுமாமறை யாவும் தனித்தனி முழங்க ஹரஹர என்று ஆர்த்தனர்.  இறைவன் தனது குழந்தையை அருள் என்னும் அமிர்தத்தில் நனைத்து எடுத்தான்.  திருவையாற்றில் எழுந்த திருநாவுக்கரசருக்குப் பார்க்கும் பொருள் எல்லாம் பரமனாகத் தோன்றியது.


மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்
 போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்
 யாதும் சுவடுபடாமல் ஐயாறு அடைகின்றபோது
 காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்
 கண்டேன் அவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்

                
                                                                                                               (
திருமுறை 4)

                                          
     காதல் மடப்பிடியோடு களிறு வரும் காட்சியில் இறைவடிவத்தைப் பார்க்கின்றார் திருநாவுக்கரசர். கோழி பெடையோடுங் கூடிக் குளிர்ந்து வரும் தோற்றம் இறைவனையும், இறைவியையும் காட்டுகின்றது நாவரசருக்கு. வரிக்குயில் பேடையொடு ஆடி வைகி வரும்போது இறைவனும், இறைவியும் வருவதாகக் காண்கின்றார்.  திருநாவுக்கரசர்.

வெள்ளி வெற்பின் மேல் மகரந்த கொடியுடன் விளங்கும்
தௌ;ளு பேரொளி பவள வெற்பெனக்.........

                                  
                                           (
பெரியபுராணம்)

கண்டார். எங்கெல்லாம் அன்பு நிலவுகின்றதோ, எங்கெல்லாம் சிவசக்தி ஐக்கியம் தோன்றுகின்றதோ, எங்கெல்லாம் மகிழ்வும் தன்னிறைவும் தோன்றுகின்றதோ, அங்கெல்லாம் இறைவன் தோன்றுகின்றான் என்று தானும் அனுபவித்து நம்மையும் அனுபவிக்கச் செய்கின்றார் திருநாவுக்கரசர். சரப்பொருள், அசரப்பொருள் அனைத்திலும் இறைவனைக் கண்டார். உயர்திணை அஃறிணை என்ற பேதமில்லாமல் இறைவடிவம் கண்டார். சர, அசர உயிர்கள்தொறும் சாற்றிய பொருள்கள்தொறும் விராவியுள் விளங்கும் வித்தக மணியைத் தனது அனுபவத்தில் உணா்ந்தார்.