12 June 2019

Nayanmars - Lesson from Kalikkamar's life - நாயன்மார்கள்- கலிக்காமர் வாழ்க்கை உணர்த்தும் படிப்பினை

ஏயர்கோன்


     சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் ஏயர்கோன் கலிக்காமர் என்னும் சிவனடியார்கலிக்காமர் சோழ வளநாட்டில் திருப்பெருமங்கலம் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார்திருப்புன்கூரில் எழுந்தருளியுள்ள சிவலோகநாதரின் ஆலயத் திருப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். ஏயர் கோக்குடி என்பது சேனாதிபதி ஆகும் சிறப்புத் தகுதி பெற்றது.

     பரவையார்பால் பரமனையே தூது அனுப்பினார் சுந்தரர் என்னும் செய்தி நாடெங்கும் பரவியது. ஏயர்கோனும் இச்செய்தியினைக் கேள்விப்பட்டார். அவரது உடலும் , உள்ளமும் நடுங்கியது. பரவைபால் தூது அனுப்பிய சுந்தரர் மீது ஆத்திரம் வந்ததுமனம் கூசாமல், நெஞ்சு பதறாமல் எப்படி ஒரு பெண்ணிற்காக இறைவனைத் தூது அனுப்ப முடிந்ததுபிரமாதி தேவர்களும் காணமுடியாத பரமனை பாதி இரவில் வேலை வாங்கியவனும் ஒரு அடியவனா?  


உடுமண்டலங்கள் அனைத்தும் சிவபெருமானின் அருள் ஒளி முன்னால் ஓலைக் குடிசைக்குள் நுழையும் சூரிய ஒளியில் பறக்கும் தூசிக்குச் சமம் என்றால், பரமன் எவ்வளவு ஆற்றல் உடையவன். அப்பரம்பொருளைப் போயும் போயும் பெண் இன்பத்திற்காகத் தூது அனுப்பும் சுந்தரரும் ஒரு சிவத்தொண்டர். சிவபெருமானும் அவரை அணுக்கத் தொண்டராக ஏற்றுக் கொண்டாரே என்று மனம் வெதும்பினார்.


     இப்படியும் ஒரு தொண்டன் உளான் என்று கேள்விப்படும் பாவியாகி விட்டேனே. எம்பெருமானுக்கு அபசாரம் செய்கின்றான். அதைக் கேட்டுக் கொண்டு நான் வாளா இருத்தல் தகுமோ! இது கேட்டு என் ஆவி இன்னும் பிரியாது உயிர்த் தரித்துள்ளதே இது தகுமோ, இது முறையோ! இது தருமம் தானோ! என்று அலறினார்ஆவி சோர்ந்தார்எத்தனைச் சமாதானம் செய்தும் கலிக்காமர் மனம் சமாதானம் அடையவில்லை.


மோக மறுத்திடில் நாம் முத்தி கொடுப்பது என  ஆகமங்கள் சொன்ன அவர் தம்மைத் தோகையர்பால்  தூதாப் போகவிடும் வன்தொண்டன் தொண்டும் ஒரு தொண்டுஅதை ஏற்றுக்கொள்ளும் தலைவனும் ஒரு தலைவனா என உள்ளம் நைந்தார்.


ஏயர்கோன் கலிக்காமர் சிறந்த சிவனடியார் என்று கேள்வியுற்ற சுந்தரர், அவரைக் காணவேண்டும் என்று எண்ணினார்ஆனால் ஏயர்கோன் சுந்தரர் மீது மிகுந்த கோபம் கொண்டுள்ளார் என்பதனையும் கேள்வியுற்றார்பரவையார் மீது கொண்ட மையல் தீருவதற்குப் பரமனைத் தூது அனுப்பியது மாபெரும் தவறு. அத்தவற்றிற்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்டதுடன், எப்படியாவது கலிக்காம நாயனாரையும் சமாதானம் செய்து அவருடன் நட்பு பூணவும் விழைந்தார்சுந்தரரையும்,  கலிக்காமரையும் இணைத்து வைக்கப் பரமனும் விரும்பினான்.


இறைவன் அடியார் நடுவுள் இருக்கின்றான். அந்த அடியவர்களின் மனதிற்குள் அறுபகை நின்றுவிட்டால் இறைவன் இருக்கமுடியாது. அதனால் இறைவன் இரண்டு அடியவர்கள் மனத்திலும் நின்று இருவரையும் இணைத்து வைப்பதற்கு ஒரு நாடகம் ஆடினான்.

 ஆண்டுகொண்டு அருளிய பெருமை


     இறைவன் கலிக்காமநாயனாருக்குச் சூலை நோய் கொடுத்தார்நமது கர்மவினைப் பதிவு காரணமாக வரும் நோய்களையே நம்மால்; தாங்கிக்கொள்ள இயலவில்லை. இறைவன் தடுத்தாட்கொள்வதற்கு என்று சூலை நோய் கொடுத்தால் எப்படி இருக்கும்.


     கலிக்காமருக்குச் சூலைநோயின் தாக்கம் அதிகமாகி குடரொடு துடக்கி முடக்கியிட்டது. வலியின் கொடுமை தாளாமல் துடிதுடித்தார். இறைவன் அவர்முன் தோன்றி நம்பியாரூரர் இந்நோயை மாற்றுவான் வருந்தாதே என்று அருளிச் சென்றார்இதுகேட்ட கலிக்காமர் நோயின் கொடுமையுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகி இன்னும் அதிகமாக வேதனையுறலானார்.


     எனது தந்தை, தந்தைதன் தந்தை, மூத்தப்பன் என்று வழிவழியாக அடிமை செய்து வாழும் எனக்கு ஒரு துன்பம் வந்துற்றபோது அதை நீர் வந்து தீர்ப்பதை விடுத்து,

வம்பென ஆண்டு கொண்டான் ஒருவனோ தீர்ப்பான்
                                               (பெரியபுராணம்)



     வன்தொண்டன் வந்தால்தான் இந்தச் சூலை நோய் தீரும் என்றால், அதைவிட இந்தச் சூலை நோயே மேலானது என்று நினைத்தார் கலிக்காமர்



ஒரு  வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால் இரண்டு குழந்தைகளுக்கும் பிடித்த உணவு வகைகளையும், உடை வகைகளையும் பெற்றோர்கள் வாங்கிக் கொடுத்தாலும், சகோதரர்கள் ஒருவருக்கொருவர் அண்ணன்தான் உங்களுக்குச் செல்லக் குழந்தை என்று தம்பியும்தம்பிதான் உங்களுக்கு செல்லக் குழந்தை என்று அண்ணனும் கூறுவது உலகு இயற்கை. இறைவன் பதஞ்சலிக்கு அருளிய பரமநாடகன் மட்டுமல்ல.  அடியவர்களை ஆட்கொண்டு, அவர்கள் வினைகளை கடிவிக்கும் வேதியனும்கூட.

அவன் ஆட்கொண்டருளும் விளையாட்டில் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிவது இயல்புதானே.  இறைவன் சுந்தரரிடம் சென்று கலிக்காமரின் வயிற்றுவலிக்கு திருநீறு கொடுத்து வரவும் என்றும் கூறினார்.


     ஆரூரர் திருப்பெருமங்கலத்தில் வசிக்கும் கலிக்காமர் வீடு நோக்கி பயணம் துவங்கினார். ஒரு சிவனடியாரின் வயிற்று வலியைத் தீர்ப்பதுடன் அவரிடம் மன்னிப்பும் கேட்கவேண்டும் என்று மனம் உருக இறைவனிடம் வேண்டிக் கொண்டே சென்றார் சுந்தரர்.


     வன்தொண்டன் தனது வயிற்றுவலியைத் தீர்ப்பதற்காக திருப்பெருமங்கலத்தை நோக்கி வருகின்றார் என்பதனை அறிந்த கலிக்காமர், வன்தொண்டன் கையால் திருநீறு பெற்று உயிர் வாழ்வதைவிட இறப்பதே மேல் என்று எண்ணினார்.  வயிற்றுடன் துடக்கி முடக்கும் அக்கொடிய நோயிலிருந்து விடுதலை பெறுவதற்கும், வன்தொண்டனைப் பார்க்காமல் இருக்கவும் வேண்டுமானால் அவ்வயிற்றைக் கிழித்துக்கொண்டு இறப்பதே சாலச்சிறந்தது என்று எண்ணி அவ்வாறே செய்தார்.


     கலிக்காமரின் மனைவியார் கலிக்காமர் செய்த செயல்களை கவனித்த போது தானும் அவருடன் சேர்ந்து உயிர் விடுவதே சாலச்சிறந்தது என்று எண்ணி அவரும் உயிர்விடத் துணிந்தார். அவ்வமயம் வன்தொண்டர் வந்துவிட்டதாகப் பரிசனங்கள் அறிவித்தனர்.  சிவனடியார் ஒருவர் வீடுதேடி வந்தபோது அவரை வரவேற்கும் முறையில் தன்னுடைய உணர்ச்சிகளை எல்லாம் மறைத்துக்கொண்டு கலிக்காமர் இறந்ததையும் மறைத்து, பரிசனங்களை எதிர்கொள்வதற்கு ஆயத்தமானார். வீதி முழுவதும் அலங்கரிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்தார். வீட்டில் பூரணகும்பம் மாவிலைத் தோரணம் மற்றும் நெய்தீபம் என்று அனைத்து ஏற்பாடுகளையும் வேகமாகச் செய்யலுற்றார்.


     நம்பி ஆரூரரை எதிர்கொண்டு அழைப்பதற்காக உறவினர்களையும் சிவனடியார்களையும் அனுப்பினார். நம்பி ஆரூரர் வந்ததும் திருவடியினை விளக்கி, ஆசனத்தில் எழுந்தருளச் செய்து, நறுமலர்களால் அர்ச்சனை செய்தார்.  அடியவர்களை ஆண்டவனாகவே பாவிக்கும் பேறு தமிழ்நாட்டில் இருந்தது.  தமிழ் மரபு வழுவாமல் சிவனடியாருக்குச் செய்யும் வரவேற்பில் எந்தவிதமான பழுதும் வந்துவிடக் கூடாது என்று உபசரித்தார் கலிக்காமரின் மனைவி.


     இறைவனின் திருக்கருணையினால் கலிக்காமரது சூலை நோய் தவிர்ப்பதற்காக வந்துள்ளேன். கலிக்காமர் எங்குள்ளார் என்றார் சுந்தரர்.  அவர்; தற்போது நோயிலிருந்து விடுபட்டுத் துயில்கின்றார்.  ஒன்றும் துன்பமில்லை என்றார் கலிக்காமரது மனைவியார். நான் அவரைக் காணவே வந்துள்ளேன். அவர் இருக்கும் இடத்திற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று வேண்டினார் சுந்தரர்.  இதற்கு மேலும் மறைக்க முடியாது என்று நினைத்த கலிக்காமரது மனைவியும், சிவனடியார்களும் கலிக்காமர் இருக்கும் இடத்திற்குச் சுந்தரரை அழைத்துச் சென்றனர்.  ஏயர்கோனது உறுதிப்பாட்டையும் தன்னைப் பார்ப்பதற்குக்கூட விரும்பாமல் உயிரைத் துறந்த கலிக்காமரின் மன உறுதியையும் எண்ணி இப்படியும் ஒரு சிவனடியார் இருக்கும்போது நானும் ஒரு சிவனடியார் என்று கூறுவதில் என்ன சிறப்பு இருக்கமுடியும். அவர்மேல் தோய்ந்த அந்த உடைவாள் என்மீதும் தோயட்டும். அப்படியாவது கலிக்காமருடன் ஒரு சம்பந்தம் வைத்துக் கொள்வேன் என்று உறுதியுடன் எண்ணி கலிக்காமரின் வயிற்றில் பதிந்த கத்தியினை உருவினார்.

     ஆளுடை அண்ணல் உலகை மட்டும் ஆளுபவன் அல்லவே! தன் தொண்டர்களையும் ஆள்பவன். அதனால் கலிக்காமர் உயிர்பெற்று எழுந்தார்.  சுந்தரர் கையில் உள்ள வாளைப் பற்றித் தடுத்தார்.  சுந்தரர் கலிக்காமர் காலில் விழுந்து பணிந்து எழுந்தார். கலிக்காமரும் வன்தொண்டர் காலில் விழுந்து பணிந்து எழுந்தார்.


     தன்னுடைய கணவர் இறந்துவிட்டார் என்று தெரிந்தும் சிவனடியாரை வரவேற்ற கலிக்காமரின் மனைவிக்கு அவரது கணவரை மீட்டுக் கொடுப்பதுதான் சிறந்த பரிசு என்று இறைவன் நினைத்தான். 

இருவரின் அன்பும் ஒருவர் பொருட்டே



     கலிக்காமரும் சிவபெருமானையே முழுமுதலாக நினைத்தார்.  சுந்தரரும் சிவபெருமானையே முழுமுதலாக நினைத்தார். இருவரும் ஒரே பரம்பொருளினையே நேசித்தனர்.  ஆனால் அவர் மனைவிக்காக வேலை வாங்கியது தவறு என்று நினைத்தார் கலிக்காமர்.  வேலை வாங்குவதற்கு வேறு யாரும் இல்லை நீ தான் உதவவேண்டும் என்று சரணடைந்தார் சுந்தரர். இரண்டு பேருமே அன்பு வயப்பட்டுத் தான் இறைவழிபாடு செய்தனர். ஆனால் இருவரும் தனக்குரிய பொருளை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு எல்லை வகுத்துக் கொண்டனர்.  அதன் விளைவுதான் கருத்துவேறுபாடு.


     சமுதாயத்தில் பெரும்பாலான குடும்பங்களில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளுக்குக் காரணமே தாம் உரிமை பாராட்டும் பொருளை இப்படித்தான் பயன்படுத்தவேண்டும் என்று நமக்கு நாமே ஒரு கட்டுப்பாடு விதித்துக் கொள்வதும், அந்தக் கட்டுப்பாட்டை யாராவது மீறினால் கருத்து வேறுபாடு வருவதும்தான்.  பெரும்பாலான மாமியார் மருமகள் சண்டை எங்கே துவங்குகின்றது என்றால், தான் பாராட்டி வளர்த்த மகன் தனது உடமை என்று சொந்தம் கொண்டாடும் தாயும், தனக்குத் தாலிகட்டிய கணவன் தனக்கே சொந்தம் என்று நினைக்கும் மனைவியும் ஒரே ஆடவனைத் தம் தம் உரிமை என்று எண்ணிக் கொள்வதால்தானே பிணக்கு ஏற்படுகின்றது.


     கலிக்காமர், சுந்தரர் இருவருமே சிவனடியார்கள். காம, குரோதங்களுக்கு அப்பால் நின்று சிவனை நேசிக்கத் தெரிந்தவர்கள். அதனால் சிவபெருமானே முன்னின்று அவர்களது கருத்து வேறுபாட்டை நீக்கி,

 கூடும் மெய்த்தொண்டர் குழாத்துடன் கூட்டி
 அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
  நெஞ்சக் கரத்தின் நிலை அறிவித்து  
       
               (விநாயகர் அகவல்)

 குடும்பச் சண்டையின் ஆதாரம் காம, குரோத, லோப, மோக, மத, மாற்சரியத்தில் துவங்குவதால் கருத்து வேறுபாடு முற்றிக் குடும்பம் பிரிந்து போகுமளவிற்கு வலுத்துவிடுகின்றது. அடியவர் இருவரும் சிவபரம்பொருளின் கருணைத் திறத்தில் முழுகினர். பிறகு அடியவர்கள் புடைசூழத் திருப்புன்கூர் என்னும் சிவத்தலத்தை அடைந்து வழிபட்டனர்.

No comments:

Post a Comment