7 March 2019

Companionship with Devotees - அடியவர் கூட்டு


அடியவர் கூட்டு

     சுந்தரமூர்த்தி சுவாமிகள் நாள்தோறும் திருவாரூர் கோவில் சென்று வழிபட்டு வரலானார்.  தம்பிரான் தோழன் என்னும் சிறப்புத் தகுதி பெற்ற சுந்தரரைக் காணப் பக்தர்கள் எல்லா இடங்களிலிருந்தும் வரலாயினர். அவ்வாறு வரும் அடியவர்களுக்கு அமுதூட்ட குண்டையூர்க்கிழார் என்னும் அடியவர் சுந்தரரது வீட்டிற்கு நெல்லும், பருப்பும் இன்னும் பல பொருள்களும் அனுப்பித் தந்தார்.  இதைக்கொண்டு அடியவர்களுக்குத் தவறாமல் அன்னம் பாலித்தார் பரவை நாச்சியார். இவ்வாறு செய்துவரும் நாளில் குண்டையூர்க்கிழாரின் நெற்களஞ்சியத்தில் நெல் குறைந்தது. விளைச்சலும் காலதாமதமானது. அடியவர்களுக்கு அமுதூட்டும் பணிக்கு நெல் கொடுக்க இயலாதே என குண்டையூர்க்கிழார் மிகவும் வருந்;தினார். 

வேண்டுவார் வேண்டுவது ஈவான் கண்டாய் என்று இறைவன் வேண்டுபவர்க்கு வேண்டுவது அருளுபவன்.  குண்டையூர்க்கிழார் தனக்கு என்றுகூட வேண்டியதில்லை. அன்னம் பாலிப்பதற்கு நெல் கொடுக்க முடியவில்லையே என்றுதான் வேண்டினார். கருணைக் கடலான இறைவன் குண்டையூர்க் கிழாரின் வேண்டுதலை உடனே நிறைவேற்றினான்.  குண்டையூர் முழுவதும் நெல் மலையாகக் குவித்துள்ளோம் என்று கூறினார் சிவபெருமான்.


     குண்டையூர்க்கிழார் சுந்தரரிடம் சென்று சிவபெருமான் செய்துள்ள அருட்கருணையை எடுத்து இயம்பினார்.  சுந்தரரும் தனது அடியவர்கள் புடைசூழக் குண்டையூர் சென்றார்.  அங்கு குவிந்துள்ள நெல்மலையைக் கண்டு அடியவர்கள் ஆச்சரியமுற்றனர்.


விச்சது இன்றியே விளைவு செய்குவாய் என்று கணத்துள் அண்டம் கோடி அமைக்கவல்ல பரம்பொருளுக்கு குண்டையூரில் நெல் மலை குவிப்பது ஒன்றும் அரிய செயல் அல்ல என்று அடியவர்கள் புரிந்துகொண்டனர். சுந்தரர் குண்டையூர்க்கு அருகில் உள்ள திருக்கோளிலி என்னும் திருத்தலம் சென்றார்.  அங்கு பரமனிடம் குண்டையூர்க்கிழாரிடம் பெற்ற நெற்குவியல்களை எடுத்துக்கொண்டு செல்வதற்கு ஆள் இல்லை. அதனால் அக்குவியல்களை எடுத்துக்கொண்டு திருவாரூர் செல்வதற்கு நீதான் உதவ வேண்டும் என்று வேண்டினார். திருவருள் தன் பூத கணங்களை அனுப்பி நெல்மலையைத் திருவாரூரில் சேர்த்தது.


     அன்னதானத்திற்குக் கொடுக்கவேண்டும் என்று விரும்பிய குண்டையூர்க் கிழாரின் விருப்பத்தை நிறைவேற்றிய பரமன். அத்துடன் அதை எடுத்துச் சென்று திருவாரூரில் சேர்க்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.  நெல்மலையை முதலிலேயே சுந்தரருக்குக் கொடுத்திருக்கலாம். குண்டையூர்க் கிழாருக்குக் கொடுத்து , அதன்பிறகு அதை மீண்டும் சுந்தரருக்குக் கொடுப்பானேன் என்று ஒரு கேள்வி எழும்.  குண்டையூர்க்கிழார்தான் சுந்தரருக்கு அன்னம் பாலிப்பதற்கான நெல்லை இதுவரை கொடுத்து வந்துள்ளார்.  இப்போதும் குண்டையூர்க்கிழார் , தன்னால் நெல் கொடுக்க இயலவில்லையே என்று மனம் வருந்திச் சிவபெருமானிடம் வேண்டுகின்றார்.  நெற்குவியலைக் குண்டையூரில் குவித்ததால் இறைவனுக்காகவும் இறை அடியவர்களுக்காவும் அன்னதானம் செய்து குண்டையூர்க்கிழார் என்ன பெருமை பெற்றார் என்று நினைக்கும் மக்களுக்கு இறைவனுக்காக, இறையடியவர்களுக்காக வாழும் வாழ்க்கை காலம் கடந்தும் பொன்னேட்டில் பொறிக்கப்படும் என்பதற்கு இது ஒரு சான்றாக அமையும்.


     அடியவரின் கூட்டுறவால் இறைவனை மட்டுமல்ல , உலகியல் போகமும் பெறலாம் என உணா்த்துவது இப்பகுதி.


     சுந்தரருக்கு நேரடியாக இறைவன் கருணை செய்திருந்தால் குண்டையூர்க் கிழார் பெயர் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்காது.  குண்டையூர்க்கிழார் செய்த தானம் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டும் என்று இறைவன் விரும்பினார்.  அதனால் குண்டையூரில் நெல்மலைகளைக் குவித்தார். அங்கிருந்து சுந்தரரின் வேண்டுதலை ஏற்றுத் திருவாரூரில் சேர்த்தார்.


No comments:

Post a Comment