28 March 2019

Sundarar's marriage - சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமணம்


சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமணம்




போகம் அறுத்தால்; முத்தி தருவன் சிவபெருமான் என்ற நினைப்பை மாற்றி இகபோகத்துடன், சிவபோதத்தையும் தருவான் சிவபெருமான் என்று உறுதி கூறும் புராணம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் புராணமாகும்.  இல்லறத்தில் உள்ளவர்கள் இறை அனுபவம் அடையவோ, முக்தி பெறவோ இயலாது என்று கூறும் அறியாமையை உடைத்து , நினைந்துருகும் அடியவர்கட்காக இறைவன் தூதும் செல்வான் என்று உறுதி கூறும் வரலாறுதான் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு.  சங்கிலி நாச்சியாரிடம் சென்று சிவபெருமான் சுந்தரரின் பெருமையை கூறுகின்றார்.

"திருவெண்ணெய் நல்லூரில் பல்லோரும் அறியும் படியாக தடுத்தாட் கொள்ளப்பட்ட தொண்டன் சுந்தரன்;.  அவன் என் பால் அன்புடையவன்.  உன்னை அடையவேண்டும் என்று என்னை வேண்டினான். அதனால் நீ அவனை மகிழ்வுடன் திருமணம் செய்துகொள்" என்று அறிவுரை கூறினார் சுந்தரர்.  


மகிழ மரமும் ,  சபதமும்

     சிவபெருமானே தன்னிடம் வந்து சுந்தரர் பெருமை கூறியதைக் கேட்ட சங்கிலியார் மனம் நிறைவு கொண்டார்.  தேவரீரால் ஆட்கொள்ளப்பட்ட சிவத் தொண்டருக்கு மனைவி ஆவதற்கு உடன்படுகின்றேன் என்று கூறினார்.  அத்துடன் திருவாரூரில் அவர் மகிழ்ச்சியுடன் இருந்தவர். இங்கு என்னையும் மணம்புரிந்து கொண்டு என்னோடு எப்படி வாழ்வார்? என்று கேட்டார்; சங்கிலி நாச்சியார்.  சுந்தரன் உன்னைப் பிரிந்து போகேன் எனச் சபதம் செய்து தருவான்.  அதன்பிறகு நீ அவனை மணந்து கொள்ளலாம் என்று கூறி அருளினார்.


     "சங்கிலியிடம் உனது கருத்தினைத் தெரிவித்தோம்.  உம்மை மணம் புரிந்து கொள்ளுமாறும் கூறினோம். சங்கிலியாரும் தம்மைப் பிரியாமலிருக்க ஒரு சபதம் செய்தால் இதற்கு உடன்படுவதாகக் கூறினார்" என்றார் சிவபெருமான்.


     சங்கிலியைத் திருமணம் செய்யும்பொருட்டுத் தாங்கள் சிவலிங்கத் திருமேனியில் விளங்கித் தோன்றாமல் , மகிழ மரத்தடியில் இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார் சுந்தரர்.  இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்தவன். பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி என்றும்; பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்தவன் என்றும் மெஞ்ஞானிகள் அனுபவித்து மகிழ்கிறார்கள். எங்கும் நீக்கமற நிறைந்திருப்பினும் தன் அன்பர்களுக்காக இறைவன் சிற்சில திருவிளையாடல்களைச் செய்து அருள்புரிகின்றான். 


     ஒரு முகூர்த்த காலம் சிவலிங்கத் திருமேனியை விட்டு மகிழ மரத்தடியில் இருப்பதாகவும், அந்தநேரம் சங்கிலிக்குச் சபதம் செய்துகொடுத்து விட்டுத் திருமணம் புரிந்து கொள்ளுமாறும் அருள் செய்தார் சிவபெருமான்.  சுந்தரர் மனம் மகிழ்ந்து இறைவன் கருணையை வியந்து நிம்மதியானார்.

அலகிலா விளையாட்டு


     சிவபெருமான் அலகிலா விளையாட்டுடையவன். அவன் ஆட்கொண்டு அருளும் விளையாட்டில் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்து உய்தி பெறுகிறார்கள்.  சங்கிலியார் கனவில் தோன்றி நம் தொண்டன் சபதம் செய்து தர இசைந்துள்ளான். ஆனால் திருக்கோயில் இலிங்கத் திருமேனியின் முன் சபதம் செய்ய வந்தால் , அதை மறுத்து மகிழ மரத்தின் கீழ் சபதம் செய்து தருமாறு கேட்டுத் திருமணம் செய்துகொள் என்று கூறிப்போந்தார் சிவபெருமான்.  


     சங்கிலியார் மனம் மகிழ்ந்தார். இறைவன் தனக்காக இரங்கி அருளும் கருணையை என்னவென்று சொல்வது என நினைந்து நினைந்து உருகினார். 

இத்தனையும் என்பரமோ ஐய, ஐயோ! எம்பெருமான்
 திருக்கருணை இருந்தவாறே” 

                                                                                             (அப்பர் சுவாமிகள்)

என்று பரமனின் கருணைத் திறத்தை நினைத்துப் பரவசமானார்.  என்னையும் ஒரு பொருட்டாக்கி அடிமை கொண்டாரே என்று எண்ணி மகிழ்ந்தார்.  தனது தோழியரிடம் ,  தான் கண்ட கனவினைச் சொன்னார். இதுவரை ஆண்டு அருள்புரிந்த அண்ணலே மீண்டும் கருணை செய்யவேண்டும் என்று அனைவரும் தொழுதனர்.

     திருப்பள்ளி எழுச்சிக்கு மாலைகள் தொடுத்து எடுத்துக்கொண்டும், இறைவனின் அருளை நினைத்துக்கொண்டும் தோழியர் புடைசூழ திருக்கோவில் சென்றார்.  தம்பிரான் தோழரும் திருக்கோவில் வந்தார். இறைவன் கருணையைச் சங்கிலியாரிடம் எடுத்துக் கூறினார்.  சங்கிலியாரும் உடன்பட்டுத் திருக்கோவில் உள்ளே சென்றார்.

     சுந்தரரும் சங்கிலியாருடன் சென்றார்.  நாம் உம்மைப் பிரியோம் என்று சத்தியம் செய்து உறுதி அளிக்கின்றோம்.  அதனால் சிவ மூர்த்தமாகிய இலிங்கத் திருமேனி முன் வருக என்று சங்கிலி நாச்சியாரை அழைத்தார் சுந்தரர்.   சங்கிலியாரின் தோழியர்கள் சுந்தரரைப் பணிந்து வணங்கினார்கள். சங்கிலியார் கண்ட கனவை நினைத்துக்கொண்டு சுவாமி , தாங்கள் இறைவன் முன் சத்தியம் செய்வது தகாது என்றார்கள்.

     இறைவன் செய்த நாடகத்தை அறியாத சுந்தரர் தோழிப் பெண்களிடம் யான் எங்கு சென்று சத்தியம் செய்யவேண்டும் கூறுங்கள் அங்கு வருகின்றேன் என்றார்.  மகிழ மரத்தின் அடியில் சபதம் செய்தால் போதுமானது.  அங்கே வாருங்கள் என்று அழைத்தனர் சேடியர்கள்.  செய்வது அறியாது திகைத்தார் சுந்தரர். இதனை மறுத்தால் திருமணம் தடைப்படும் என்று நினைத்தார்.  "இறைவன் விட்ட வழி" , என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்ட சுந்தரர் மகிழ மரத்தடியில் சென்று சபதம் செய்தார்.  மகிழ மரத்தை மும்முறை வலம் வந்து, "உன்னை யான் பிரியேன்" என்று உறுதி கூறினார்.


     சுந்தரர் சபதம் செய்தபின் எழுத்தறியும் பெருமானை வணங்கி ஏத்தினார்.  இதுவும் உனது திருவுள்ளச் சம்மதமா? என்று எண்ணினார். சங்கிலியாரும் இறைவனைத் தொழுது தனது மலர்த்தொண்டினைச் செய்வதற்குக் கன்னிமாடம் சென்றார்.


     இறைவன் அன்றிரவு திருவொற்றியூரில் வாழும் திருத்தொண்டர்கள் கனவில் தோன்றி நம்பி ஆரூரருக்குச் சங்கிலியைத் திருமணம் செய்து கொடுங்கள் என்றார்.  மறுநாள் காலையில் அனைவரும் அறிய சுந்தரருக்கும், சங்கிலியாருக்கும் திருமணம் செய்வித்து மகிழ்ந்தனர் இறையடியவர்கள்.    சீவபோதத்துள்ளும் , சிவபோகத்தை நுகரும் கருணையைச் செய்தார் சிவபெருமான்.


No comments:

Post a Comment