17 December 2018

How far The Almighty is from us ? - கூப்பிடு தூரம் இறைவன் இருப்பிடம்


கூப்பிடு தூரம் இறைவன் இருப்பிடம்



     இறைவனை எப்படி அறிவது என்று நாடும் நகரமும் நல்திருக்கோவிலும் சென்று வணங்கியும் இறை அனுபவத்தை உணரமுடியாமல் ,நாத்திக வாதியாகவும் இல்லாமல்,ஆத்திகவாதியாகவும் இல்லாமல் இரண்டும் கெட்டான் வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இறையடியவர்கள் இறைவன் இருப்பிடம் கூப்பிடுதூரம் என்று வரையறை செய்து காட்டுகின்றார்கள்


     மகாபாரதத்தில் ஒரு காட்சி. துகில் உறியும் காட்சியில் அச்சுதா, அனந்தா என்று இரு கைகளையும் தலைமேல் கூப்பி அஞ்சலி செய்கிறாள் திரௌபதை.  இறைவன் சேலை அவதாரம் என்னும் ஒரு அவதாரம் எடுத்து திரௌபதிக்கு அபயம் கொடுத்தான்.  கூப்பிடும் தூரத்தில் இருந்துதானே திரௌபதிக்கு அருளளித்தான் ஸ்ரீகிருஷ்ணன்.


     கஜேந்திர மோட்சத்தில் "ஆதிமூலமே" என்று யானை அபயம் கேட்டது. கூப்பிடும் தூரத்தில் இறைவன் இருந்ததால்தானே கஜேந்திரனுக்கு அபயம் அளிக்கமுடிந்தது.

  
மூன்று வயதே நிரம்பிய அந்தக்குழந்தை உணர்வு மயமாகி முன்னை உணர்வு தலைப்பட தான் பிரிந்திருந்த தனது தலைவனோடு இணையவேண்டும் என்னும் மெய்ஞ்ஞானம் மேலோங்க அம்மே அப்பா என்றழைத்தது


     நண்பர்கள் சேர்ந்து சுற்றுலா போகத் திட்டமிட்டனர். தங்களது திட்டப்படி ஒவ்வொரு நண்பராக அழைத்துக் கொண்டே வந்தனர். ஒரு நண்பன் வீட்டு வாசலில் வந்து நின்றதும் அவன் பெயரைச் சொல்லி அழைத்தனர். காது கேட்கவில்லை நண்பனுக்கு. உடனே இன்னும் கொஞ்சம் குரலை உயர்த்திக் கூப்பிட்டனர்.  அப்போதும் காது கேட்கவில்லை. உரிய நேரத்தில் பேருந்தை தவறவிட்டு விடக்கூடாது என்று மிகவும் பரபரப்பாகக் கூப்பிட்டனர்.  இவர்களின் பரபரப்பான உணர்ச்சி பூர்வமான குரல் காதில் விழுந்ததும் நண்பன் பதறி அடித்து ஓடிவந்து கலந்துகொண்டான்.  நாம் அழைக்கும் உணர்வு அலைகளுக்குத் தகுந்தவாறு அழைப்பவர்களின் செயல்திறம் அமைவது உலகியல் காட்சி.


     அருளியலிலும் நம்மை உடையவனை நம்மைக் காத்து அருள்பவனைச் சரணம் புகுந்து உடையவனே நான் உன் உடையவன். நீதான் என்னை ஆண்டு அருள்புரியவேண்டும். நீ கண்டு கொண்டால்தான் நான் உன்னை நினைக்கமுடியும். உன் உணர்வினைப் பெறமுடியும் அதனால் என்னைக் கண்டுகொள் என்று உணர்வுப் பூர்வமாக வேண்டினால் இறைக்காட்சி நமக்குக் கிடைக்கும். நாம் அழைக்கும் உருக்கத்தைப் பொறுத்து இறைவன் நமக்குச் செவி சாய்ப்பான். பரபரப்புடனும், ஆழ்ந்த உணர்வுடனும் அழைக்கும்போது நண்பர்களே ஓடிவரும்போது,  இறைவன் நமக்கு ஓடிவராமல் இருப்பானா?



மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து
     உன் விரைஆர் கழற்கு, என்
 கைதான் தலைவைத்துக் கண்ணீர்
ததும்பி வெதும்பி உள்ளம்
 பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி
சய சய போற்றி என்னும்
 கைதான் நெகிழவிடேன் உடையாய்
என்னைக் கண்டு கொள்ளே  

                                             
                                                                              (
திருவாசகம்)



     நீ என்னைக் கண்டு கொண்டால்தான் நான் சிக்கெனப் பிடிப்பேன். நீ கண்டுகொள்ளவில்லை என்றால்,  என் கை நெகிழ்ந்து உன்னை விட்டுவிடுவேன். அதனால் உன் உடைமையை நீ கண்டுகொள் என்று பிரார்த்தனை செய்கின்றார் மாணிக்கவாசகர்.


No comments:

Post a Comment