19 May 2018

நடமாடும் நம்பா்


நடமாடும் நம்பா்

மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாய் நீராடியவர் திருநாவுக்கரசர். அவர் ஒரு காலகட்டத்தில் கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்? என்கின்றார். தொண்டு நெறியையும்,  அன்பு நெறியையும் புறக்கணித்து விட்டு நாம் கங்கையிலும், காவிரியிலும் குளித்தால் இறைவன் நமக்கு அருள் செய்யமாட்டான் என்று தீர்மானமாகக் கூறுகின்றார். நாம் ஒரு நோன்பு இருப்பதாக வைத்துக் கொண்டு அதன்மூலம் பிறர் மனத்தையும் உணர்வையும் புண்படுத்தும் பழக்கம் வளர்ந்துவரும் சூழ்நிலையில் யார் மனத்தையும் நோகச் செய்யாத நோன்புதான் இறைவழிபாடு என்னும் புதிய கோட்பாட்டைப் படைக்கின்றார்


     திருநாவுக்கரசர் சைவத்தில் இருந்தாரா? சமணத்தில் இருந்தாரா?; என்பது கேள்வி அல்ல.  அவர் செய்த தொண்டு நெறி என்ன?  என்பதைத்தான் இறைவன் பார்க்கின்றான். தனக்குக் கிடைத்த அனைத்துச் செல்வத்தையும் பயன்படுத்தி  குளம் வெட்டினார்;, மரம் வளர்த்தார்;, அன்னதானம் செய்தார். தனக்கு என்று எதையும் வைத்துக் கொள்ளவில்லை


படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
 நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
 நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
  படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே"                                                                                     (திருமந்திரம்)

     என்பதனை உணர்ந்து தனது சொத்துக்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கினார். தன்னுடைய குழந்தை தனது சொத்தை நாட்டுடைமையாக்கி விட்டான்.  அக்குழந்தை பசியால் இருக்கும்போது


பசித்திடு தோறும் என்பால் அணைந்து அருளால்
வசித்து அமுது அருள்புரி வாய்மை நல்தாயே"                                                                                                                                       (அருட்பா)


     பசிநீக்க வல்ல பரம்பொருள் தாயினும் சாலப்பரிந்து வந்து அமுது அளிக்க வருகின்றார். உலகமக்கள் நன்மைக்காகத் திருநாவுக்கரசர் குளம் வெட்டினார்.  அதனால் திருநாவுக்கரசர் நீர் அருந்த இறைவனே குளம் அமைத்தான். இறைவனுக்காகவும், இறைவடிவங்களான உயிர்க் கூட்டத்திற்காகவும் நாம் தன்னலம் கருதாது செய்யும் எந்தச்செயலும் பலமடங்கு ஆற்றலுடன் நமக்குத் திருப்பித் தரப்படும் இதுதான் விதி. ஒவ்வொரு செயலுக்கும் பக்கவிளைவும், பின்விளைவும் உண்டு. திருநாவுக்கரசர் இதையெல்லாம் எதிர்பார்;த்து எந்தப் பணியும் செய்யவில்லை


     ஆழம் அதிகரிப்பதற்குத் தகுந்தாற்போல் அழுத்தமும் அதிகரிக்கும் என்பது  பாஸ்கல் விதி.  திருநாவுக்கரசரின் அன்பின் ஆழம் கங்கு கரை காணாத கடல் போன்றது. இறைவனது கருணையும் ஓங்கி உலகளந்தது. அதனால் அழுத்தமும் அதிகமாக இருந்தது.


காவும் குளமும் முன் சமைத்துக் காட்டி வழிபோங் கருத்தினால்
 மேவும் திருநீற்று அந்தணராய் விரும்பும் பொதிசோறும் கொண்டு
 நாவின் தனி மன்னவர்க்கு எதிரே நண்ணி இருந்தார் விண்ணின்மேல்
 தாவும் புள்ளும் மண் கிழிக்கும் தனி ஏனமும் காண்பரியவர்தாம்
                                     (பெரியபுராணம்)
                                          
கருடன் மேல் பறக்கும் திருமாலும் சென்றுணராத் திருவடியும் , அன்னமாய்ப் பறந்தும் உணர முடியாத திருமுடியும் திருப்பைஞ்ஞீலியில் சோலையும், குளமும் அமைத்து நிற்பதை உணரவில்லை என்பதனை விண்ணின்மேல் தாவும் புள்ளும், மண் கிழிக்கும் தனி ஏனமும் காண்பரியவர்தாம் என்றார் நாவரசர்.

  
காணவேண்டும் என்று ஒரு சொட்டுக் கண்ணீர்விட்டு உருகியிருந்தால் போதுமே! நீ அடிமுடி காட்டி இருப்பாயே!! அதைவிட்டுவிட்டு பிரம்மாவும், விஷ்ணுவும் நாங்கள் கண்டுவிடுவோம் என்னும் தன்முனைப்பில் சென்று சோர்ந்து விட்டார்களே. தேவர்கோ அறியாத தேவதேவன்; மூவர்கோவாய் நின்ற முதல் மூர்த்தி; தன் அடியவனுக்குப் பொதி சோறு சுமந்துகொண்டு, சோலை அமைத்து , குளமும் அமைத்து வைத்துக்கொண்டு காத்திருக்கின்றதே


     அரசியல் தலைவர்களுக்கும், அரங்குகளின் தலைவர்களுக்கும் நாம் எவ்வளவு செயற்கையான விழா மேடைகளும், மண்டபங்களும், மாட மாளிகைகளும் கோடிக்கணக்கில் செலவு செய்து அமைக்கின்றோமே! அவர்கள்; தனது தொண்டனுக்காக என்ன உதவி செய்கிறார்கள்? ஆனால் நமது தலைவன் தன் தொண்டனுக்கு ஒரு மண்டபம் அமைத்ததோடு, காவும் , குளமும் அமைத்துக் காத்துள்ளானே எத்தனை பரிவு!


No comments:

Post a Comment