12 January 2019

Remedial Measure for our deeds - அவ்வினைக்கு இவ்வினை


அவ்வினைக்கு இவ்வினை



     ஒவ்வொரு செயலுக்கும் பக்க விளைவுகளும், பின் விளைவுகளும் உண்டு என்பது பூத பௌதீக விதி.  எந்தச் சமயத்தைச் சார்ந்தவர்களும் தவறு செய்தால் தண்டிக்கப்படுவார்கள் என்பது அவரவர் காட்டும் தர்ம , கர்மச் சட்டங்கள்.  உலகில் தோன்றிய எல்லாச் சமயங்களுமே இந் நெறியினை போதிக்கின்றது.


     தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டு மீளா ஆளாக நரகத்தில் இடர்ப்படத்தான் செய்யவேண்டுமா! இதற்கான பிராயச்சித்தமே இல்லையா!  என்று நாம் கவலைப்படத் தேவை இல்லை. நாம் செய்த தீவினைகள் எதுவும் நம்மைத் தீண்டாது என்று திருநீலகண்டத்தின் மீது ஆணையிட்டுக் கூறுகின்றார் ஞானசம்பந்தர்.


     செய்வினை எப்போது நம்மைத் தீண்டாது என்பதற்கு ஒரு உறுதியினை அறுதியாகக் கொடுக்கின்றார் ஞானசம்பந்தர். புலர்வதன் முன் அலகிட்டு,மெழுக்குமிட்டு பூமாலை புனைந்து ஏத்திப் புகழ்ந்து பாடுங்கள். உங்களைச் செய்வினை தீண்டாது. இது திருநீலகண்டத்து மீது ஆணை.  

     கொல்லா நெறி குவலயம் ஓங்க உயிர்ப்பணி செய்யவேண்டும். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று மக்களுக்குத் தன் நலம் கருதாது சேவை செய்யவேண்டும்.


நோய்நாடி நோய் முதல்நாடி அவைதீர்க்கும்
  வாய்நாடி வாய்ப்பச் செயல்              
                                
                      (
குறள்)


     நாம் செய்தவினை எது என்று ஆய்ந்து, அதற்கான கழுவாயைத் தேடிக்கொள்ள வேண்டும்.

    நீரிழிவு
நோய் உள்ளது.  நீங்கள் இனிப்பு சாப்பிடாதீர்கள் என்று மருத்துவர் அறிவுரை கூறினால், முதியோர் இல்லத்திற்கோ அனாதை ஆசிரமத்திற்கோ சென்று அங்குள்ள மனித வடிவில் உள்ள தெய்வங்களுக்கு இனிப்புக் கொடுத்து வந்தாலே நமது நீரிழிவு நோய் குணமடையும்.  சாப்பிடவே இயலாமல் நோய்ப் படுக்கையில் இருப்பவர்கள் சார்பாக நோயாளியின் உறவினர்கள் அன்னதானம் செய்தால், அன்னம் உண்டவர்களின் வயிறு நிறைந்ததுபோல் நோயாளியும் நோய் நீங்கி வயிறாரச் சாப்பிடும் சூழ்நிலை உருவாகும்.  உடலாலும், மனதாலும் உணர்வாலும் செய்த வினைகளின் கட்டுக்களை எல்லாம் அதே உடலாலும் மனத்தாலும் உணர்வாலும் தொண்டு செய்தே  கழித்துவிடலாம் என்கின்றார் ஞானசம்பந்தர்.

அவ்வினைக்கு இவ்வினையாம் என்று
சொல்லும் அஃதறிவீர்
 உய்வினை நாடாது இருப்பதும்
உந்தமக்கு ஊனமன்றே
 கைவினை செய்துஎம் பிரான்கழல்
போற்றுதும் நாம் அடியோம்
 செய்வினை வந்து எமைத் தீண்டப்
பெறா திரு நீலகண்டம்  

                                              
(
திருமுறை 1)



பிறந்த பிறவியின் வினைக் கட்டுக்களைக் களைந்து எறிவதற்கான வழிகளைக் கண்டு உய்வடையுங்கள். அதுதான் உடல் ஊனத்தையும்,மன ஊனத்தையும்;,உணர்வு ஊனத்தையும்பிறவி ஊனத்தையும் கழிக்கவல்லதுஇதுதான் ஊனத்தை கழிக்கும் வழி, துறை என்று தெரிந்துகொள்ளுங்கள் என வழிகாட்டுகின்றார் ஞானசம்பந்தர்.

உய்வினை நாடாது இருப்பது உம்தமக்கு ஊனமன்றே எந்தவினை செய்தீர்களோ அவ்வினைக்கு மாற்றுவினை செய்தால்தான் ஊனமற்ற வாழ்வு வாழலாம்.  மனதாலோ, உடலாலோ, உணர்வாலோ நமக்கு ஊனம் ஏற்பட்டால் அவ்வினைக்கு ஈடாக நாம் வேறு ஏதோ செய்திருக்கவேண்டும்.  அவ்வினையின் பக்க விளைவாலும் பின் விளைவாலும்தான் நமக்கு இவ்வினை வந்துள்ளது. அதனால் இதற்கு மாற்றுவழியே இல்லையா? என்று அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை. நாம் உய்வடைய முடியாதோ என்று ஐயப்படவும் வேண்டியதில்லை.

  
எந்த அவயவங்கள் தீங்கு செய்து வினை ஈட்டியதோ,அதே அவயவங்களால் தொண்டு செய்தால் அவ்வினைக்கு இவ்வினை ஈடாக வந்து நமது வினை கழிந்துவிடும். நாம் ஊனமற்ற வாழ்வு வாழலாம். அதனால் இன்றே இப்போதே கைத்தொண்டு செய்து நம் வினையினை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்று உறுதியோடு கூறுகின்றார் ஞானசம்பந்தர்.


No comments:

Post a Comment