22 January 2019

Life without tension - பரபரப்பில்லா வாழ்வு




பரபரப்பில்லா வாழ்வு



     இறைவனுடைய திருநாமத்தை எப்படிச் சொல்லவேண்டும் என்று வழி , துறை காட்டிச் செல்கின்றார் ஞானசம்பந்தர்.  எந்தச் செயலையும் முழு மனத்துடனும் ,  முழு ஈடுபாட்டுடனும் செய்தால் அச்செயல் மேன்மை பெறும். குறிப்பாக இறைவழிபாடு செய்யும்போது முழுமையான பற்றுடனும்ஈடுபாட்டுடனும் செய்யவேண்டும். அப்படிச் செய்தால்தான் அவ்வழிபாடு நிறைவுபெறும்சாதாரணச் சொற்கள் போல் அல்ல மந்திரச் சொற்கள்ஆனால் மந்திரச் சொற்களை நம்பிக்கையுடனும், உறுதிப்பாட்டுடனும் கூறவில்லை எனில் அவைகட்கும் சாதாரணச் சொற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்மந்திரச் சொற்களை நாம் எவ்வாறு கூறவேண்டும் என்று ஞானசம்பந்தர் பாடுகின்றார்.

ஒல்லையாறி உள்ளம் ஒன்றிக்
கள்ளம் ஒழிந்து வெய்ய
  சொல்லை ஆறித் தூய்மை செய்து
கர்ம வினை அகற்றி
 நல்லவாறே உன்தன் நாமம்
     நாவில் நவின்று ஏத்த
 வல்லவாறே வந்து நல்காய்
வலிவல மேயவனே            

                                              
(
திருமுறை 1)


     தற்போது பரவலாகப் பேசப்படும் சொல் டென்சன், டென்சன், டென்சன்.  எங்கு திரும்பினாலும் இதே வார்த்தைகள்தான். பரபரப்பு , யாரைப் பார்த்தாலும் இதே சொல்தான்.  மன அமைதி இல்லை; உடல் அமைதி இல்லை; பரபரத்துகொண்டு அங்கும் ,இங்கும் ஓட்டம். வேலை செய்யும் இடத்தில் பரபரப்புஇவற்றை எல்லாம் மாற்றுவதற்கு ஒரு வழி கூறுகிறார் ஞானசம்பந்தர்.


     பரபரப்பு இல்லாமல் ,உள்ளத்தில் வஞ்சனை இல்லாமல் ,வெய்ய சொல்லாகிய கடும் சொல் நீங்கி , காமம் அகற்றி நல்லவாறே உன்தன் நாமம் நாவில் நவின்று ஏத்தவல்லவர்களுக்கு வினை சாராது. சமுதாயம் மேம்பாடு அடையும். நல்லவாறு உன்தன் நாமம் நாவில் நவின்றால் ஒல்லை ஆறும். பரபரப்பு நீங்கும்


     இன்றைய சமுதாயத்திற்குத் தேவையான அறிவுரைகளை வழங்குகின்றார்.  கர்மவினை அகற்றிவிட்டால் நாடு நலம் பெறும்.  சமுதாயமும் நன்றாக வளர்ச்சி அடையும்.  நியாயமான நமது தேவைகளை இறைவன் நிறைவேற்றித் தருவார்.  அதற்குமுன் நாம் பேராசையை விடவேண்டும். அயலார் நிதி ஒன்றும் நயவாத பண்பை நாம் வளர்த்துக் கொண்டோமானால் ஒல்லையாறிவிடும்; .கள்ளம் ஒழிந்துவிடும்;. உள்ளம் ஒன்றிவிடும்.  இத்தனையும் நடந்தால் நல்லவாறே உன்தன் நாமம் நாவில் நவின்று ஏத்தலாம்.


     நமசிவாய என்னும் மந்திரமே நான்கு வேதங்களுக்கும் மூலமந்திரமாக விளங்குகின்றது.  மெய்ப்பொருள் எது என்று தேடி அலமந்து திரிய வேண்டாம்.  நாதனாகிய நமது தலைவனது திருநாமம்தான் வேதம் நான்கிலும் மணிமகுடமாக விளங்குகின்றது. நம்பிக்கையுடனும் , நியாயமான கோரிக்கையுடனும் இறைவனை வேண்டினால் நமது வேண்டுதலை இறைவன் நிறைவேற்றுவான் என்று உறுதி கூறுகின்றார் ஞானசம்பந்தர்.


No comments:

Post a Comment