14 June 2017

Fish as a Guru - மீனும் ஒரு குருவே


மீனும் ஒரு குருவே


                சியவனர் என்னும் மகான் ஒருவர் இருந்தார்மகாபாரதத்தில் சியவனர் கதை பேசப்படுகின்றது. சியவனர் தண்ணீருக்குள் மூச்சை அடக்கி வைத்து யோகம் பயிலும் ஒரு கலையைப் பயின்றிருந்தார்ஜல சமாதி என ஒரு சமாதி அனுபவத்தை யோக நூல்கள் கூறுகின்றன. யோக அனுபவத்தில் ஜல சமாதியில் பல ஆண்டுகள் மூச்சை அடக்கி நீருக்குள் மூழ்கி இருந்தார்


                சியவனர் ஒருநாள் கண் திறந்து பார்த்தார். தன் கண் முன்னால் மீன்கள் கூட்டம் கூட்டமாகப் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு கூட்டம் போனது  பார்த்து ரசித்தார். அடுத்த கூட்டம் போனது அதையும் பார்த்தார்ஒவ்வொரு கூட்டத்திலும் தாய் மீன் வேகமாக நீந்தியதுஅதன் குஞ்சுகள் இருபுறமும் பின்புறமும் தாயைப் தொடர்ந்து சென்றனதாய் மீன் சற்றே நிதானித்துத் தனது எல்லா குஞ்சுகளும் வருகிறதா எனப் பார்த்துக் கொள்ளும். தாய் மீன் நின்று குஞ்சுகளைப் பார்த்ததும் குஞ்சுகள் வேகவேகமாக வந்து தாய் மீனுடன் சேர்ந்து கொள்ளும்தாயின் பரிவும் அன்பும் குஞ்சுகளை அரவணைத்துச் செல்லும் தன்மையையும் பார்த்தார் சியவனர். கண்ணை மூடிக்கொண்டிருந்து நாம் நம் வாழ்நாளைக் கழித்து விட்டோமோ? என நினைத்தார் உடனே தனது ஜல சமாதியைக் கலைத்து விட்டு நீரிலிருந்து வெளியேறினார். நேராக அந்த நாட்டு அரசனிடம் சென்றார்அரசனுக்கு இருபத்தேழு பெண் குழந்தைகள். தனக்கு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து தரும்படிக் கேட்டார்

                மகான்களையும், யோகிகளையும் மதித்து வாழ்ந்தனர் அரசர்கள். அரசன் சியவனர் மீது மரியாதை வைத்திருந்தான். ஏதாவது சாபம் போட்டுத் தன் குழந்தைகள் வாழ்க்கை வீணாகி விடக்கூடாது என நினைத்தான் அரசன்என்னுடைய குழந்தைகள் அனைவரையும் அழைக்கின்றேன் எந்தப் பெண் உங்களை விரும்புகிறாகளோ, அவளை நீங்கள் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்றான் அரசன்

                சியவனருக்குப் புரிந்துவிட்டது. தாடியும் மீசையுமாகப் பல ஆண்டுகள் தியானத்திலிருந்த தனது உடல் வசீகரமாக இல்லைமேலும் அரசவாழ்வு வாழ்ந்த தனது பிள்ளைகளை ஒரு யோகிக்கு எப்படித் திருமணம் செய்து கொடுப்பது என்று அரசன் யோசிக்கின்றான். அவனது யோசனையும் நியாயமானதுதான் என நினைத்தார் சியவனர். உடனே உனது பெண்களை அழைத்துவா. யார் என்னை விரும்புகிறார்களோ, அவளை நான் மணந்து கொள்கின்றேன் என்றார்.

                அரசனும் தனது மக்களிடம் நடந்தவற்றைக் கூறி நீங்கள் விரும்பினால் மட்டுமே இத்திருமணம் நடக்கும். யோகி வாக்குத் தவறமாட்டார் அதனால் பயமில்லாமல் வாருங்கள் என அழைத்து வந்தான்தனது யோக மகிமையால் சியவனர் மிகவும் அழகான உருவத்துடன் அப்பெண்களுக்குக் காட்சி கொடுத்தார். இருபத்து ஏழு பெண்களும் சியவனரையே திருமணம் செய்வதாகக் கூறினர்கொடுத்த வாக்குப்படி அரசனும் தனது இருபத்தி ஏழு பெண்களையும் சியவனருக்கே திருமணம் செய்துவைத்தான்

சிற்றினம் சேராமை

                சியவனர் தனது மனைவிகளைத் தான் தவம் செய்த ஆற்றங்கரைக்கு அழைத்து வந்தார்தன்னுடைய தவ ஆற்றலால் தேவ தச்சனை அழைத்து இருபத்தி ஏழு மாளிகை அமைத்தார்தனது யோக ஆற்றலால் இருபத்தி ஏழு உடல் எடுத்துக் கொண்டு எல்லாப் பெண்களுடனும் வாழ்ந்து வந்தார்ஒரு நாள் ஆற்றங்கரைக்கு வந்தார் சியவனர்.

                ‘கந்துக மதகரியை அடக்கலாம் கரடி வெம்புலி வாயையும் கட்டலாம் சிந்தையை அடக்கிச் சும்மா இருக்கும் திறம் அரிது அரிது’  என்கிறார்களே! எத்தனை ஆண்டுகாலம் நீருக்குள் மூழ்கித் தவம் இருந்தேன்மீன்கள் கூட்டம் எனது மனத்தை மாற்றி விட்டதேசிற்றினம் சேராமை என்று எத்தனை மகான்கள் பாடியுள்ளார்கள். எத்தனை குருநாதர்கள் உபதேசம் செய்துள்ளார்கள். அத்தனையும் நான் படித்தும் எனது அனுபவத்தில் உணர்ந்து கொள்ளவில்லையேஇவற்றிற்கெல்லாம் என்ன காரணம்?

                நான் புலன்களையும் பொறிகளையும் ஜெயித்துவிட்டதாக நினைத்த எனது அறியாமை தான் காரணம் என்பதை நன்கு உணர்ந்தார்அவரின் வாழ்க்கைச் சரித்திரத்தைப் படிப்பதன் மூலம் நாமும் நம் வாழ்க்கையில் யாருடன் கூட்டு வைத்துக் கொள்ளவேண்டும் என்பதனை உணர்ந்து கொள்ளவேண்டும். சிற்றினம் சேர்ந்தால் தப்பாமல் அவகீர்த்தி வரும் எனபதையும் புரிந்து கொள்ளவேண்டும்.


                சியவனருக்கு மீனும், மீன் குஞ்சுகளும் குருவாக நின்று ஞானத்தைப் புகட்டினஎத்தனையோ ஆண்டுகாலம் செய்த தவத்தினை முற்றுப் பெறவிடாமல் ஒரு சாதாரண மீன் தன்னை உலகியல் அனுபவத்திற்கு இழுத்து வந்துவிட்டதே என்று நினைத்தார்தன்வாழ்க்கையே உலகமக்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்கட்டும்.


                ஒரு சத்குருநாதரை துணை கொண்டு வாழ்ந்தால் நாம் உயர் நிலையினை அடையலாம் என்றும்தகுதியில்லாதவர்களைத் துணை கொண்டால், நம் வாழ்க்கை திசை திரும்பிவிடும் என்றும் தெரிந்துகொள்ளட்டும் என்று சியவனர் தன்னை ஒரு வழிகாட்டியாக உலகிற்குப் படம்பிடித்துக் காட்டுகின்றார்.  

1 comment:

  1. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    ReplyDelete