4 June 2017

Aanma Journey - Part 2 ஆன்ம யாத்திரை - பகுதி 2



முந்தைய பகுதி


கடல்பயணம், நடைபயணம், வழக்கம் என்று யாத்திரைக்கு பல பொருள்கள் உண்டு.

ஊர் விட்டு ஊர் பயணிப்பது, நாடு விட்டு நாடு பயணிப்பது, புண்ணிய நதி தீர்தங்கள், திருக்கோயில் செல்வது இவற்றிற்கு யாத்திரை என்று பெயர். யாத்திரை போகும் காலத்திற்கும், நேரத்திற்கும் தகுந்தவாறு நமது பயண ஏற்பாடுகளைச் செய்துகொள்வோம். உடுப்பது, உண்பது, அலங்காரப் பொருட்கள் என பலவற்றை முன்னேற்பாடு செய்துகொள்வோம்.


உடல் யாத்திரை


உடல் யாத்திரையின் போது பயணிக்கும் பயணத்திற்கு கால, தேச, பொருள் செலவுகள் ஏற்படும். நாம் செல்ல நினைக்கும் இடத்தை அடைவதற்கு தடைகளும் ஏற்படலாம்.இயற்கைச் சீற்றங்கள் மூலமாகவோ, நாம் இணைந்து செல்லும் குழுக்களின் மூலமாகவோ நமது யாத்திரையில் மனச்சோர்வு, உடல் சோர்வு, பொருளாதார நிலையில் தேக்கம் ஏற்படலாம். இவைகளை தாண்டி மன நிறைவும் ஏற்படலாம். இது உடல் சார்ந்த பயணத்தினால் ஏற்படும் நிலைகளாகும்


         மன யாத்திரை


   மனம் சார்ந்து ஒரு யாத்திரை உண்டு. ஐயடிகள் காடவர்கோன், பூசலார் நாயனார் இருவரும் 63 நாயன்மார்களில் வைத்து எண்ணப்படுபவர். ஐயடிகள் அரசர் ஆவார் மற்றும் பூசலார் குடிமகன். பூசலார் நாயனார் இறைவனுக்காக ஒரு மணிமண்டபம் எழுப்பினார். மணல், செங்கல், கற்கள் இவைகளை எல்லாம் மன யாத்திரை மூலமாக சேகரித்துக் கோவில் கட்டினார். ஐயடிகள் காடவர்கோன் தனது பணியாட்கள் மூலமாக உடல் யாத்திரையினால் அனைத்து பொருளையும் சேகரித்துக் கோவில் கட்டினார். உடல் யாத்திரையை விட மன யாத்திரை பூசலாரிடம் வலிமையாக இருந்ததால் பூசலாரின் மனக்கோவிலிருக்குள் முதலில் இறைவன் புகுந்தான். ஐயடிகள் காடவர்கோனிற்குக் கனவிலும், நனவிலும் நின்று அவரது யாத்திரையையும் சிறப்புச் செய்தான் இறைவன். மன யாத்திரையாயினும் சரி, உடல்யாத்திரையாயினும் சரி வலிமையான எண்ணத்துடனும், பூரண நம்பிக்கையுடனும் செய்தால் நிறைபலன் உண்டு. இதற்கு மேலே கூறிய அடியவர்களின் வரலாறே சான்று.

   ஆன்ம யாத்திரை 


   உடல் யாத்திரை, மன யாத்திரை இவை இரண்டும் தவிர்த்து ஆன்ம யாத்திரை என ஒன்று உண்டு. இருந்த இடத்தில் இருந்தபடியே தொடருவது இந்த யாத்திரை. இதற்கு பொருள் செலவு, நேரச் செலவு போன்ற எதுவும் நிகழ்வதில்லை. மனத்தை அலையவிடாமல் நிலைநிறுத்தும் பயிற்சியை மேற்கொண்டால் இந்த யாத்திரை இனிமையாகவும், நிறையாகவும் இருக்கும்அவ்வாறு மனத்தை ஒரு நிலையில் நிலைநிறுத்துவது எப்படி?.  தொடர்ந்து சிந்திப்போம்.....

No comments:

Post a Comment