24 November 2018

ThiruGnanaSambandar's Advice - சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை


சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை



     கிளிப்பிள்ளைக்கு இயல்பாகச் சிந்திக்கும் திறன் கிடையாது.  யாரேனும் எதையாவது சொல்லிக் கொடுத்துப் பழக்கி வைத்திருந்தால் அதையே சொல்லும். ஆனால் பூனையைக் கண்டவுடன் நாம் எதைப் பழக்கி வைத்திருந்தாலும், கிளி அதை மறந்துவிட்டு, உயிர்ப் பயத்தில் கீ, கீ என்றும் கத்தும்.  அதுமாதிரி ஆன்மாக்கள் ஆகிவிடக்கூடாது. அதனால் கிளியின் பயிற்சிபோல் இல்லாமல் ஆழமாக ஆற்றல்மிக்க அன்போடு இறைவனின் திருநாமத்தை அழைக்கவேண்டும். "நீ நாளும் நந்நெஞ்சே நினை".  ஒருநாள் கூட மறக்கக்கூடாது.  ஒரு நொடி கூட மறக்காமல் இருக்கவேண்டும். பயிற்சி பெற்ற மனத்தினால் மட்டுமே சாகும் தறுவாயில் இறைவனை நினைக்கமுடியும்.


     சாநாளும் , வாநாளும் யார் அறிவார்? எப்போது சாவு வரும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் நீநாளும் நந்நெஞ்சே நினை என்று அறிவுறுத்துகின்றார் ஞானசம்பந்தர்.


பயிற்சி
பெற்ற மனம் கூட சாவு வரும்போது மரண பயத்தில்தான் இருக்கும் என்று எல்லா அருளாளர்களும் பாடியுள்ளார்கள்.



சிறக்கும் கமலத்திருவே நின்சேவடி சென்னி வைக்கத்
 துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
 உறக்கம் தரவந்து உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
 மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே

                                     (அபிராமி அந்தாதி)


     உடம்போடு உயிரின் தொடர்பு விடுபடும்போது அறிவு மறந்துவிடும்.  அப்போது நீ எனக்கு முன்னால் வரவேண்டும் என்று வேண்டுகின்றார்.  திருவருள் துணை இருந்தால் மட்டுமே இறை உணர்வுடன் இருந்து இறைநினைவு பெறமுடியும்.  அதனால் அபிராமி தன் முன்னால் வந்து நிற்பதற்கு அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்கின்றார்.


நாளும்
நினைக்கும் பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே சாநாளும், வாநாளும் அறியும் பக்குவம் வரும். அதனால் நீ நாளும் நினை கண்டாய்.  நாளும் இறைவனை நினைக்கும் நெஞ்சம் நந்நெஞ்சமாகும். அந்நெஞ்சே எமனை வென்றிருக்கும்.


No comments:

Post a Comment