7 November 2018

Beacon - தூண்டுசுடர்


தூண்டுசுடர்

     அப்பர் சுவாமிகள் இறைவனைப் பற்றி மட்டும் பாடவில்லை. இறைவன் என்றால் ,   இன்றைய மக்கள் அறிந்து வைத்துள்ள செய்திகளுக்கும், திருநாவுக்கரசர் காட்டும் இறைவனுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.  இன்றைய சமுதாயம் இறைவன் என்றால் பிரதோசத்தன்று கோவில் செல்வது; , நவக்கிரங்களின் பெயர்ச்;சியின் காரணமாகத் தனக்கு ஏதோ கெடுதி வரப்போகின்றது என்பதைச் செய்தித்தாள் மூலமாகவோ, சோதிடர் மூலமாகவோ தெரிந்து வைத்துக்கொண்டு, அதற்கான பரிகாரங்களையும் தெரிந்துகொண்டு அதன் அடிப்படையில் அவர்கள் கூறும் நாட்களில் திருக்கோவிலிற்குச் சென்று வருவதுதான் நாம் அறிந்துள்ள பக்தி. நமக்குத் தெரிந்த இறை வழிபாட்டு முறையும் இறைவனைப் பற்றிய அறிவும் கூட அவ்வளவே.


     இவற்றை எல்லாமும் தாண்டி மக்கள் மீதுள்ள இரக்கத்தால் கற்றுணர்ந்த பெரியவர்கள் யாரேனும் திருக்கோவில் வளாகத்தினுள் இருந்து தேவாரம் பற்றியோ, திருவாசகம் பற்றியோ ஏதேனும் நல்ல செய்திகள், நல்ல கருத்துக்கள் தெரிவிப்பதாக இருந்தாலும் நாமும் அவருக்கு எவ்வளவு நெருக்கமாக அருகே உட்கார்ந்து கொண்டு நாட்டு நடப்பு பற்றியும், ஏதோ நாளைக்கு நாம்தான் . நா. சபையில் கருத்தரங்கு ஆய்வுக்கட்டுரை தாக்கல் செய்வது போலவும் பேசிக்கொண்டிருப்போம்.  இதுதான் சமயத்தைப் பற்றிய நமது அறிவு.


நான் உரைக்கும் வார்த்தையெலாம் நாயகன் தன் வார்த்தை
நம்புமின் நமரங்காள் நற்றருணமிதுவே
 வான் உரைத்த மணிமன்றில் நடம்புரி எம்பெருமான்
     வரவு எதிர்கொண்டு அவனருளால் வரங்கள் எலாம் பெறவே
 தேன் உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவிர்
தெரிந்து அடைந்து என் உடன் எழுமின் சித்தி பெறலாகும்
 ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யான் அடையும் சுகத்தினை நீர் தானடைதல் குறித்தே 

                                                (அருட்பா)

     அருளாளர்கள், அவர்கள் அடைந்த இன்பத்தினையும், அதில் வரும் சுகத்தினையும் நாம் அடைதல் பொருட்டு, இரக்கத்தால் எடுத்துச் சொன்னார்கள். ஆனால் நாம் அதையும் புரிந்துகொள்ள மறுக்கின்றோம்.


     சமய நெறிகளாகட்டும்; , வீட்டு நெறிகளாகட்டும். எதுவாக இருந்தாலும் வழிகாட்டுதல் என்னும் ஒரு வழக்கம் இருந்தால்தான் நாம் அதில் முன்னேற முடியும்.  நாம் அடைய விரும்பும் குறிக்கோளையும் அடையமுடியும். 

தானத்தைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்றீர்
 வானத்தை வணங்கவேண்டில் வம்மின்கள் வல்லீராகில்
 ஞானத்தை விளக்கை ஏற்றி நாடியுள் விரவவல்லார்
 ஊனத்தை ஒழிப்பர் போலும் ஒற்றியூர் உடையகோவே"                                                                                                                                        (திருமுறை 4)

     உடல் ஊனம், மன ஊனம், உணர்வு ஊனம் தவிர்ப்பதற்கு வாருங்கள் என்று அழைக்கின்றார் அப்பரடிகள். ஊனத்தை நீக்குவதற்கு ஒற்றியூர் அரசன் காத்துள்ளான். வேகமாக வந்து உங்கள் ஊனத்தை தவிர்ப்பதற்குத் தானத்தைச் செய்யுங்கள். ஞானம் என்பது விளக்கேற்றி வெளியில் தேடவேண்டிய ஒன்றல்ல. அக விளக்கேற்றி, ஐம்புலன் அகத்தடக்கித்  தேடவேண்டிய ஒன்று என்று நமக்கு அறிவுறுத்துகின்றார்.



     இறைவனை அடைவதற்கு இறை நாமம் சொல்வதோ, பஜனை செய்வதோ வழி அல்ல. ஏழை, ஏதலன், கீழ்மகன் என்னாது அன்பு செய்யவேண்டும்.  தொண்டுநெறியே தூநெறியாக இருக்கவேண்டும். மனத்துறவே துறவாக இருக்கவேண்டும் என்று கூறுகின்றார்.



No comments:

Post a Comment