1 November 2018

Arul Nandi's gift to Shaivism - அருள் நந்தியின் அருள்

அருள் நந்தியின் அருள்


     திருப்பெண்ணாடகம் என்னும் சிவத்தலத்தில் அச்சுத களப்பாளர் என்னும் சிவ பக்தர் வாழ்ந்தார். நீண்ட நாட்களாக அவருக்குக் குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. அவர் தமது ஆச்சாரியாரும் , குருநாதருமான அருள்நந்தி சிவாச்சாரியரிடம் இதுபற்றி முறையிட்டார்.


     அக்காலத்தில் வாழ்ந்த அருளாளர்கள் அனைவரும் ,  "என் செயலாவது யாதொன்றுமில்லை,  இனித் தெய்வமே உன்செயல் என்று உணரப்பெற்றேன்"  என்று தனக்குள்ள அனைத்தையும் இறைவனிடம் ஒப்புவித்து வாழ்ந்தார்கள்.  இறைவடிவமாகவே குருநாதரைப் பாவித்து அவரது திருவடிகளில் தன்னைச் சரணாகதியாக ஒப்படைத்திருந்தார் அச்சுத களப்பாளர். தன்னைச் சரண் அடைந்த அச்சுத களப்பாளரை நந்நெறிப் படுத்த நினைத்த அருள்நந்தி சிவாச்சாரியார் அவரிடம் அடங்கல்முறைப் பதிப்பைக் கொடுத்துக் கயிறு சாத்திப் பார்க்கும்படி கூறினார்.


     எத்தனை விஞ்ஞான வளர்ச்சி பெற்றாலும் ,  மனம் சலிப்புறும்போது நம்மை ஆறுதல் படுத்துவது இறைஉணர்வும்,   பெரியோர்களின் நற்சிந்தனை வடிவான புத்தகங்களும்தான்.  இன்றும் நம்நாட்டில் தினசரி தியானம்,  பகவத்கீதை மற்றும் அருளாளர்களின் புத்தகங்களில் ஏதேனும் ஒரு பகுதியைப் பிரித்துப் படித்தால் தளர்ந்த நம் மனத்திற்கு இறைவனே ஆறுதல் கூறுவதான வாசகங்கள் அமைந்திருப்பதைக் காணலாம்.


     மூவர் தேவாரங்களும் இணைந்த பகுதியினை அடங்கல்முறை என்று கூறுவார்கள். தன்னைச் சரணடைந்த அச்சுத களப்பாளரை அடங்கல் முறையைச் சரணடையும்படிப் பணித்தார் அருள்நந்திசிவம். 

     குருநாதரின் ஆணையைச் சிரமேற்கொண்ட அச்சுத களப்பாளர் கயிறு சாத்திப் பார்த்தார்.  அதில் திருஞானசம்பந்தர் அருளிச் செய்த பேய் அடையா பிரிவு எய்தும் என்னும் பதிகம் வந்தது.                                                                      
     திருவெண்காடு முக்குளநீரில் தோய்ந்து வழிபடும் அடியவர்;களுக்கு வினை தோயாது. அதுமட்டுமல்ல , பேய் அடையாது. பிரம்மராட்சசம் என்னும் வினைத் தொல்லைகள் அண்டாதுதன்னையும் தன் தலைவனையும் உணராத தன்மை வந்து சேராது. பேய் பிடித்தவர்களை எந்தவிதமான நல்ல நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள இயலாமல் செய்யும் அப்பேய்திருவெண்காடு முக்குளநீர் நீராடியவர்களைப் பேய் அடையா. ஏற்கனவே பேய் அடைந்தவர்கள் இக்குளத்தில் நீராடினால் அப்பேய் அவர்களை விட்டுப் பிரிந்துவிடும்

"பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே"

                                                                                                          (தேவாரம்)


     உயிரைப் பீடித்துள்ள நோய்களாக உள்ள வினைகள் ஓடிவிடும்.  அதுவும் தவிர,  பிள்ளைவரம் வேண்டியும் மற்றும் வரங்கள் எதுவும் வேண்டத் தெரியாத சூழ்நிலையில் உள்ளவர்களின் மனக் குறைகளையும் தீர்த்து நல்வரம் அளிப்பவன் உமையொருபாகன். அவனைக் கைதொழுதால் நமது வினையும் கழிந்துவிடும் என்னும் பாடல் அதில் இருந்தது.


வேண்டத்தக்கது அறிவோய் நீ
     வேண்ட முழுதும் தருவோய் நீ
 வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ
     வேண்டி என்னை பணிகொண்டாய்
 வேண்டி நீ யாதுஅருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
  வேண்டும் பரிசு ஒன்றுஉண்டு என்னில்
அதுவும் உந்தன் விருப்பன்றே 
                                            (திருவாசகம்)

     அச்சுத களப்பாளருக்குப் பிள்ளை வரம் மட்டும் அருளவில்லை அப்பதிகம். சைவம் தழைக்கவும் ,  தமிழ் தழைக்கவும்,  ஞானம் தழைக்கவுமான அருட்குழந்தையை அருளிச் செய்தது அப்பதிகம்.

     அச்சுத களப்பாளர் தம்பதியர் முக்குளநீர் ஆடி திருக்கோவில் வலம் வந்து வணங்கும்போது இவருக்குக் குழந்தை பிறக்கும் பேறே இல்லை. இவருக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்?” என்று அனைவரும் ஏளனம் செய்தனர்.  செம்பொருள் துணிவான மந்திரச் சொற்கள் நிரம்பிய பதிகத்தின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையும் உறுதிப்பாடும் கொண்ட அச்சுத களப்பாளர் நம்பிக்கை வீண்போகவில்லை. சைவ சித்தாந்த ஞான ஆச்சாரியரான மெய்கண்டசிவம் திருஅவதாரம் செய்தார்.


சித்தி தருவது நீறு   என்றால் உலகியலிலும்,  அருளியலிலும் நாம் விரும்பியதை அடையும் பேற்றையும் அருள வல்லதுதானே! நம்பிக்கையுடன் அண்டிய அருளாளர்களுக்கு அனைத்து சித்திகளையும் அளித்தது.

No comments:

Post a Comment