24 November 2018

Mind Control - மனத்தை அடக்குவது எப்படி?


மனத்தை அடக்குவது எப்படி


     ஊனில் ஆவி உயிர்க்கும்போது எல்லாம் இறைவனை நாடவேண்டும். ஒவ்வொரு உட்சுவாசமும் இறைவன் நாமத்தை நெஞ்சில் இருத்தித் தாலாட்ட வேண்டும். ஊஞ்சல் போகும்போதும் ,  வரும்போதும் அசைந்து கொண்டிருப்பது போல் நாம் உள்விடும் மூச்சும் வெளிவிடும் மூச்சும் இறை நாமத்தையும் இறை உணர்வையும் சுமந்துகொண்டே இருக்கவேண்டும்.

அரும்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
  அருமருந்தை அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி
 வரும்துணையும் சுற்றமும் பற்றும் விட்டு
  வான்புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும்
 பொருந்தணைமேல் வரும் பயனைப் போக மாற்றிப்
 பொதுநீக்கித் தனை நினையவல்லார்க்கு என்றும்
 பெரும்துணையைப் பெரும்பற்றப் புலியூரானைப்
  பேசாத நாள் எல்லாம் பிறவாநாளே      

                                  
                                                                                   (
திருமுறை 6)


     இறைவன் கருணையாளன் என்பது பொதுவிதி.  ஆனால் அப்பரடிகளுக்குச் சிறப்பாக மருத்துவச் சிகிச்சை அளித்தவன் என்பதால் மருத்துவன் என்றும் இறைவனை மருந்து என்றும் சிறப்பித்துக் கூறுகின்றார். அவருக்கு மட்டும் மருந்தாகவும் மருத்துவனாகவும் இருக்கமாட்டான். பொதுநீக்கித் தனை நினையவல்ல அடியவர்கள் அனைவருக்கும் இறைவன் மருந்தாக மருத்துவனாக நிற்பான் என்றும் கூறுகிறார்.

 யோகத்தின் பொலிவு


கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள்
 முப்போதும் முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை
 அப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கி
   எப்போதும் இனியானை என் மனத்தே வைத்தேனே   


                      
                                                                                                  (
திருமுறை 4)


     மனம் என்பது கண்ணுக்குப் புலப்படாத ஒரு பொருள்.  இதுவரை மனம் என்ற பொருள் எங்கே உள்ளது என்று எந்த விஞ்ஞானியும் கண்டு பிடிக்கவில்லை. ஆனால் அந்த மனம் என்ன பாடுபடுத்தும் என்பதை நம் மெய்ஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.


மனம் எனும் ஒரு பேய்க் குரங்கே
                                  (அருட்பா)
 

     குரங்கு அங்கும் இங்கும் அலையக்கூடியது. சாதாரணக் குரங்கின் ஆட்டமே தாங்கமுடியாது. அதிலும் அக்குரங்கிற்குப் பேய் பிடித்தால் எப்படி இருக்கும்.  அத்துடன் அப்பேய்க்; குரங்கு இஞ்சியும் தின்றதாம்; அக்குரங்கை தேளும் கொட்டியதாம். இந்தச் சூழலில் அக்குரங்கு என்ன ஆட்டம் ஆடும் என்று அருளாளர்கள் மனத்தின் இயல்பை வர்ணிக்கின்றார்கள்.  இப்படி ஆடும் மனத்தை அடக்குவது எப்படி? என்பதை அப்பரடிகள் நமக்கு விளங்குகின்றார். சரியை நெறியில் நின்று,


புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப்
 பூமாலை புனைந்து ஏத்திப் புகழ்ந்துபாடி    


                              
         (
திருமுறை 4)


     தொண்டு செய்தால் மனம் அடங்கும். யான் எனது என்னும் கொட்டம் தணியும். தாழ்வு எனும் பணிவு வந்தால் விலங்கியல் விகாரப்பாடு குறையும் என்று அறிவுறுத்துகின்றார். புலர்வதன்முன் அலகிடும்போதும் மெழுகிடும்போதும் கை ஒன்று செய்ய வாய் ஒன்று பேச, காது ஒன்று கேட்கும் படியாகத் தொண்டு செய்தால் நாம் நினைக்கும் பலனைஎதிர்பார்க்கும் பலனை அடையமுடியாதுஅதனால் ஐம்புலனும் அகத்து அடக்கும் யோகநிலையில் நில்லுங்கள் என்கின்றார்.

     அடியவர்களின் அரும் துணை சிவபெருமான்அடியார்கள் அல்லல் தீர்;ப்பவன் சிவபெருமான்.  செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள் பின்னலிட்டுக் கொண்டு தாய் என்றும்;சேய் என்றும்;நீ என்றும்;நான் என்றும் சுற்றித் திரியவிடாமல் நம்மை ஆண்டு அருள் புரிபவன் சிவபெருமான். வான் புலன்கள் அகத்து அடக்குவதற்குப் பயிற்சி அளிப்பவனும் அவனே. வாயாரத் தன் அடிபேணும் தொண்டர் மனத்தில் இருப்பவனும் அவனே. அதனால் தொண்டு செய்தால் அவனே அதைத் தூய நெறியாக்கி அதன்மூலம் சரியை கிரியை யோகம் ஞானம் என்று ஒவ்வொரு அனுபவத்தையும் தந்து அதற்கும் மேலாகத் தன்னையே தருபவன்

நிலைத்த இன்பமாக எப்போதும் இனியானை என் மனத்தே வைத்தேனே’ என்று மனத்தில் இன்பமாக அமர்ந்திருப்பவன். பெரும் துணையும் வரும் துணையும் தனித்துணையுமான பரம்பொருளை அகத்து அடக்கும் யோக நிலையினைப் பயிற்றுவித்தான் இறைவன்.


No comments:

Post a Comment