12 October 2017

Wife as a Guru and her words of wisdom - என்னையும் ஓர் வார்த்தையுள் படுத்தாய்

என்னையும் ஓர் வார்த்தையுள்  படுத்தாய்


   வாசுதேவன் என்னும் சிவபக்தர் கும்பகோணத்தில் வாழ்ந்து வந்தார்சிறு வயது முதல் முன்னோர்கள் வாழ்ந்து காட்டிய பாதையில் சிவபூசை செய்வதிலும், திருவாசக, தேவார பதிகங்களில் தோய்ந்தும் வாழ்ந்து வந்தார். தினசரி பிரதோச காலத்திலும், மாதம் இருமுறை வரும் பிரதோச காலங்களிலும் சிவபூசை செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் வரும் பிரதோசத்தன்றும், தேய்பிறையில் வரும் பிரதோசத்தன்றும் சிவ நாமம் மட்டுமே உணவாக ஏற்றுக்கொண்டு சிவப்பணி செய்வார். மறுநாள் சதுர்த்தசியன்று அதிகாலையில் சிவன்கோவில் சென்று வழிபாடு முடித்தபிறகு உணவு உட்கொள்வார். இவருடைய இறை பக்தியைக் கண்ட உறவினர்கள் வாசுதேவனுடைய பக்திக்கு ஏதுவாகவும், உறுதுணையாகவும் இருக்கக்கூடிய வகையில் ஒரு பெண்ணைப் பார்த்து மணம் செய்து வைத்தனர்வாசுதேவனும் இல்லறத்தை நல்லறமாகக் கொண்டு முன்னோர் காட்டிய நெறியில் பக்திப் பயிர் வளர்த்தார்.


                ஒருநாள் பிரதோசத்தன்று விரதமாக உபவாசம் இருந்தார். முதல்நாள் முழுவதும் உண்ணா நோன்பு மேற்கொண்டு, இரவு முழுவதும் சிவபெருமானின் மீது பக்தி  பாடல்கள் பாடிக்கொண்டிருந்தார். மறுநாள் அதிகாலை தனது வழக்கமான பூசைகளை முடித்துக்கொண்டு திருக்கோவில் வழிபாட்டிற்குப் புறப்பட்டார். மனைவி, தன் கணவன் வருவதற்குள் சமையலை முடிக்கவேண்டும் என அனைத்து வேலைகளையும் வேகமாகச் செய்தார்சமையலையும் முடித்துவிட்டுச் சற்று ஓய்வாகத் திண்ணைக்கு வந்தார்


                கருவுற்றிருந்ததால் மயக்கமும், தலைசுற்றலும் அதிகமாகவே வந்ததுஅதனால் ஓய்வாகப் படுத்திருந்தார்பெரியவர்கள் துணை இல்லாததால், கர்ப்பம் பற்றி அறிந்து கொள்ளவில்லை தம்பதியர்கோவில் செல்வதற்காகச் சென்ற வாசுதேவன் வழியில் கீரை விற்பதைப் பார்த்தார்கீரையை வாங்கி வீட்டில் கொடுத்துவிட்டு வந்தால் திருக்கோவில் சென்று வருவதற்குள் சமையல் செய்து வைத்துவிடுவாள் மனைவி என்னும் நினைவு வந்தது. கீரை வாசுதேவனுக்கு மிகவும் பிடித்த உணவு. கீரையை வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றார்


                மனைவி தாழ்வாரத் திண்ணையில் படுத்திருந்தார். மனைவி கர்ப்பமாக இருப்பதோ, அதனால் சோர்வாகப் படுத்திருப்பதோ வாசுதேவனுக்குத் தெரியாது. மனைவியிடம் கீரையைக் கொடுத்துவிட்டு, தான் கோவிலுக்குச் சென்று வருவதற்குள் சமைத்து வைத்துவிடு என்று கூறினார்சமையல் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டதாகவும், அதனால் மறுநாள் சமைப்பதாகவும் மனைவி கூறினாள். இன்று சதுர்த்தசி விரதத்தைக் கீரை சேர்த்து நிறைவு செய்யவேண்டும்சமையல் வேலை முடிந்தாலும் கோவில் சென்று வருவதற்குள் மீண்டும் சமைத்து வைத்துவிடு என்றார்.


                மிகுந்த சோர்வு காரணமாகவும், மீண்டும் மீண்டும் அவர் சமையல் செய்யச் சொல்லவும் மனைவி மிகவும் சலிப்புற்று ஒரு கீரையின் மீதுள்ள பற்றைக் குறைப்பதற்கு வழியில்லைமனம் மீண்டும் மீண்டும் கீரையைத்தான் பற்றுகிறதே தவிர, சிவத்தைப் பற்றியதாகத் தெரியவில்லை என்று கூறிவிட்டார்


                கீரையை வைத்துவிட்டு வாசுதேவன் கோவில் சென்றார். போகும் வழியெல்லாம் ஒரு கீரையைத் துறப்பதற்கு மனம் இல்லை எப்படிச் சிவனைப் பற்றுவது. மனைவியின் கூற்று காதில் விழுந்துகொண்டே இருந்ததுஎத்தனை ஆண்டுகாலம் பிரதோச விரதம் இருக்கின்றோம்? ஓயாமல் நதிகள் எல்லாம் மூழ்கினும் என்ன பயன்நித்தமும் விரதங்கள் இருந்து என்ன பயன்மனம் அடங்கும் திறத்தினில் ஓரிடத்தில் இருக்கும் வகை தெரியாமல், நாம் என்ன பக்தி செய்தோம்


                முதல் நாள் முழுவதும் உண்ணா நோன்பும், உறங்கா நோன்பும் நோற்றதன் பயன் ஒரு கீரையின் மீதுள்ள ஆசையைக்கூடத் துறப்பதற்கு வழி செய்ய வில்லையே. மனைவி இன்றைய சமையல் வேலை முடிந்துவிட்டது நாளைய சமையலில் கீரையைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறிய போதுகூட மீண்டும் மீண்டும் அவளது சோர்வு பற்றிய எண்ணம் எதுவும் இல்லாமல், நாம் கூறியதையே கூறினோமேஅதனால்தானே இதுவரை எதிர்த்து வாய் பேசாது இருந்தவள் ஒரு கீரையைத் துறப்பதற்குக்கூட துணிவில்லாத பக்தியும் பிரதோச வழிபாடும் வாழ்வியலுக்கு என்ன பயன் தந்துவிடும் என்று கேட்டாள்; என இதையே பலவாறாகச் சிந்தித்தார்அவரது மனம் நிலைபெறவில்லை



                துறவு என்பது எவ்வளவு மேலானது. பக்தி என்பது எத்துனை புனிதம் நிறைந்ததுகீரை உணவின் மீதுள்ள மோகம் பக்தியை குறைக்கும்படி ஆயிற்றேமனைவி சொன்ன சொல் வாசுதேவன் மனத்தை அறுத்தது. மனைவி சொன்ன ஒரு மொழியே குரு மொழியாயிற்று. கீரையை மட்டும் என்ன வாழ்க்கையையே துறந்துவிட்டார். தஞ்சையை அடுத்த ஒரு குக்கிராமத்தில் சென்று யாருக்கும் தெரியாமல் தனது துறவு வாழ்க்கையைத் துவங்கிவிட்டார் வாசுதேவன்அத்வைத நிலையில் சித்திபெற்ற அவர் வாசுதேவப்ரம்மம் என்னும் பெயரில் அழைக்கப்படுகின்றார்வாசுதேவ ப்ரம்மத்திற்கு தன் மனைவியே குருவாகவும், தன் மனைவி சொன்ன ஒரு சொல்லே குரு மொழியாகவும் ஆயிற்று

1 comment: