10 September 2018

Idaimarutheesan - இனியன் இடைமருதீசன்


இனியன் இடைமருதீசன்


கனியினும் கட்டிபட்ட கரும்பினும்
 பனிமலர்க் குழல் பாவை நல்லாரினும்
 தனிமுடிக் கவித்தாளும் அரசினும்
இனியன்தன்அடைந்தார்க்கு இடைமருதனே                                                                                                                              (திருமுறை 5)


     இடைமருதீசனைத் தனது உணர்வில் அனுபவித்து மகிழ்கின்றார் அப்பரடிகள். அவர் அனுபவித்த அந்த அனுபவத்தை நமக்கும் தெளிவாகக் கொடுக்கவேண்டும் என்று நினைக்கின்றார்.  இறைவன் எப்படி இருப்பான்;  அவனை நமக்கு எப்படி அறிமுகம் செய்வது; மனித உயிர் மட்டுமல்ல; உலகில் தோன்றிய அனைத்து உயிர்களும் தம் தமக்குரிய இன்பம் எது? என்று தாமே தேர்வு செய்து கொள்கின்றன. மனித உயிர் எந்த இன்பத்தை விரும்புகின்றது என்பதை நினைக்கின்றார். தொண்ணூறு விழுக்காடு மனிதர்கள் இனிமையான அனுபவத்தைத்தான் விரும்புகின்றனர்.  அதனால் கனியிலும் இனியன் இடைமருதன் என்றார்.

     கனி ஒரு காலம் கிடைக்கும்; ஒருகாலம் கிடைக்காது. பருவகாலத்தில் மட்டும்தானே மாம்பழம் போன்ற பழங்கள் பழுக்கும். இறைவன் பருவ காலங்களில் மட்டும் கிடைக்கக்கூடியவனா? என்னும் நினைவு வருகின்றது. கட்டிப்பட்ட கரும்பினும் (கற்கண்டு) இனியன் என்றார். கற்கண்டு எக்காலத்திலும் கிடைக்கும். எந்தப் பக்கம் சுவைத்தாலும் இனிமை ஒன்றுபோல் இருக்கும். அதனால் கட்டிபட்ட கரும்பினும் இனியன் என்றார்.  பின்னும் மனநிறைவு பெறவில்லை.


கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்
 ஒண்தொடி கண்ணே உள                           
                                           (குறள்)


     ஐந்து புலன்களுக்கும் ஒருசேர இன்பம் தருவது ஒண்தொடியார் தானே.  கனியும் கட்டிப்பட்ட கரும்பும் நாவிற்கு மட்டும்தானே சுவைதரும். அதனால் இறைவனைப் பனிமலர்க்குழல் நல்லாரினும் இனியன். பனிமலர்க் குழலால்தான் ஐம்புலன் நுகர்ச்சிக்கும் ஊற்று என்று அவ்வாறு சொன்னார். ஆனாலும் மனநிறைவு பெறவில்லை. அரச பதவி என்று உயரிய பதவியை விரும்புகிறவர்கள் இவைகளுக்கு எல்லாம் மசிய மாட்டார்களே. அதனால் தனிமுடி கவித்தாளும் அரசினும் இனியன் என்றார்.

     அறுசுவை உணவு உண்பவர்களுக்கு இறைவனைக் காட்ட நினைத்த அப்பரடிகள் நாவின் சுவையை விட இனியன் என்றார். காமச்சுவையை அனுபவிப்பதில் நிறைவு பெரும் மனிதர்களிடம் இறைவனைக் காட்ட நினைத்தவர் பனிமலர்க்குழல் நல்லாரினும் இனியன் என்றார். அரச போகத்தையும் பதவி பட்டத்தையும் விரும்பும் மக்களுக்கு இறைவனைக் காட்ட தனிமுடி கவித்தாளும் அரசினும் இனியன் என்றார். அவன் யாவரினும் இனியன். எல்லாவற்றிற்கும் மேலான இனியன்; கண்ணிற்கு இனியன்;  சிந்தைக்கு இனியன்; எண்ணுதற்கு இனியன்; சொல்லுவதற்கு இனியன் என்று நம்மையும் அந்த இனியனிடம் அழைத்துச் செல்கின்றார்.


No comments:

Post a Comment