18 September 2018

Five Inner enemies - திளைத்து நின்று ஆடுதல்


திளைத்து நின்று ஆடுதல்




அன்பும் , அருளும் நம்மை வழிநடத்தினால் நாம் மேலான நெறியினை அடையலாம்.  தெளிந்த ஞானமும் , சீரிய வாழ்வும் வேண்டுவோர் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திக்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றார் அப்பா் சுவாமிகள்.


ஆமைக்கறியினைச் சமைக்கவேண்டுமானால்  ஆமை ஓட்டைத் தனியாகப் பிரித்து எடுக்கவேண்டும். ஆமை ஓட்டைத் தனியாகப் பிரிப்பதற்கு அடுப்பில் ஒரு பானையில் நீரை ஊற்றி  நீருக்குள் ஆமையைத் தூக்கிப் போட்டு சூடு ஏற்றுவார்கள். குளிர்ந்த நீரில் வாழ்ந்த ஆமைக்கு உலைநீர் சூடானவுடன் ,  இளம் சூடான நீர் உடல் சுகத்தைத் தரும்.

     உடனே ஆமை திளைக்கும்; ,  பிறகு நிற்கும், பிறகு ஆடும். ஆமை அறிவில்லாத பிராணி என்று நாம் நினைக்கக்கூடாது. அறிவில்லாத பிராணியாக இருந்தால் இளம்சூடான நீரில் மகிழ்ந்து சுகம் அனுபவித்து,  திளைத்து நின்று ஆடாது. முதலில் இளம் சூடு சுகமாக இருந்தது என்று திளைத்ததுஒரு வேளை திளைத்தால் எங்கே சுகம் குறைந்து விடுமோ என நினைத்து நின்றதுநின்றால் சுகம் குறையுமோ என்று ஆடியது.

     இதுவரை செய்த செயல்கள் எல்லாம் அறிவில்லாத செயல் என்று கூறமுடியாது. உலைநீர் சூடு ஏறியதும் அதில் குளிர்காய்வது ஓர் இன்பம் என்று நினைத்தது. அந்த இன்பத்தை நினைத்து மகிழ்ந்தது.  ஆனால் இந்த இன்பம் நிலைத்து நிற்குமா? என்று யோசிக்கவில்லை.  குளிர்ந்த நீர் சூடாகியது. சூடான நீர் மீண்டும் சூடானால் இந்த உடல் அழியுமே என்னும் சிந்தனை வரவில்லை.  மனிதன் அத்தனையும் சிந்திக்கத் தெரிந்தவன்.


     அன்பு வளைத்து நின்றால் நாம் நன்நெறியில் வாழலாம். அருள் வளைத்து நின்றால் எந்நாளும் நிலைத்த இன்பமே வரும் துன்பம் இல்லை.  ஆனால் நம்மை கள்வர் ஐவர் வளைத்து நிற்கின்றார்கள். இதிலிருந்து விடுதலை பெறுவது எப்போது? என்று சிந்திக்கின்றார்.  நம்மையும் சிந்திக்க வைக்கின்றார்.


வளைத்து நின்று ஐவர் கள்வர் வந்து எனை நடுக்கம் செய்யத்
 தளைத்து வைத்து உலையை ஏற்றித் தழல் எரி மடுத்த நீரில்
 திளைத்து நின்றாடுகின்ற ஆமைபோல் தெளிவிலாதேன்
 இளைத்து நின்றாடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே    
                                           (திருமுறை 4)

     பொறி , புலன் வசம் நில்லாமல் இறைவசம் நிற்பதற்கு இறைவனை நாம் வளைத்து நின்று ஆடவேண்டும்இறையுணா்வை வளைத்து நின்று ஆடவேண்டும் என்பது அப்பரின் வழிகாட்டு.

No comments:

Post a Comment